விசிக பெண் கவுன்சிலரின் ‛பெட்ரூமில்’ பதுங்கிய 4 ரவுடிகள்.. பின்னணியில் கணவர்.. அதிர்ந்த கும்பகோணம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சியின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெண் கவுன்சிலரின் வீட்டில் படுக்கையறை கட்டிலுக்கு அடியில் பதுங்கி இருந்த 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அரிவாள், கத்தி என்று 21 வகையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பெண் கவுன்சிலரின் கணவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பேருந்து நிலையம் அருகே பாத்திமாபுரம் உள்ளது. இங்கு வசித்து வருபவர் அலெக்ஸ். இவர் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் ஆவார்.

அலெக்ஸின் மனைவி பெயர் ரூபின்ஷா. இவர் கும்பகோணம் மாநகராட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்ட கவுன்சிலராக உள்ளார்.
இந்நிலையில் தான் அலெக்ஸ் - ரூபின்ஷா தம்பதியின் வீட்டில் மர்மநபர்கள் சிலர் ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக கும்பகோணம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவர்களின் வீட்டுக்கு சோதனையிட சென்றனர். அப்போது அங்கிருந்த அலெக்ஸ் மற்றும் வழக்கறிஞர்கள் போலீசாரை சோதனையிட எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சோதனைக்கான அனுமதி குறித்த விபரங்களை அவர்களிடம் காண்பித்து வீட்டுக்குள் நுழைந்தனர்.
வீட்டின் ஒவ்வொரு அறையிலும் போலீசார் தீவிரமாக சோதனையிட்டனர். அப்போது வீட்டின் படுக்கையறையில் போடப்பட்டு இருந்த கட்டிலுக்கு அடியில் 4 பேர் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களின் பெயர் கிங் ஆண்டனி, அர்னால்ட் ஆண்டனி, பாலசாமி, அருண் குமார் என்ற அஜய் என்பது தெரியவந்தது.
அதோடு அவர்கள் 4 பேரும் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும், அவர்களை வீட்டில் பதுங்க விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகரும், பெண் கவுன்சிலர் ரூபின்ஷாவின் கணவருமான அலெக்ஸ் இடமளித்ததும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார் பெண் கவுன்சிலரின் கணவர் அலெக்ஸையும் கைது செய்தனர். குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக அவர் கைது செய்யப்பட்டார்.
இதற்கு அங்கிருந்த அலெக்ஸின் வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் போலீசார் 5 பேரையும் கைது செய்து அழைத்து சென்றனர். மேலும் இவர்களிடம் இருந்த அரிவாள், கத்திகள் என்று 21 கூர் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன.
இதற்கிடையே புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது பாத்திமா புரத்தில் அலெக்ஸின் வீட்டின் அருகே வசித்து வரும் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளார். இதனை அலெக்ஸ் கண்டித்துள்ளார். இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு தொடர்பாக அந்த நபர் கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் செய்ததாகவம், அதன்பேரில் போலீசார் வீட்டில் சோதனை மேற்கொண்டு அடைக்கலம் கொடுத்த அலெக்ஸ் மற்றும் வீட்டில் பதுங்கிய 4 பேர் என 5 பேரை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications