திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா காலமானார்.. திமுகவினர் அதிர்ச்சி!
திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா இன்று காலமானார்.
தஞ்சாவூர் : திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 83. இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வர்த்தகர் அணி தலைவராகச் செயல்பட்டு வந்தார்.
திராவிடக் கொள்கையில் தீவிரப் பற்று கொண்ட எஸ்.என்.எம்.உபயதுல்லா, நான்கு முறை தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை வணிக வரித்துறை அமைச்சராகவும் இருந்தவர்.
திமுக மூத்த நிர்வாகி எஸ்.என்.எம்.உபயதுல்லா மறைவுக்கு திமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

4 முறை எம்.எல்.ஏ
தஞ்சாவூர் தொகுதியில் இருந்து 4 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டவர் உபயதுல்லா. 1989, 1996, 2001, 2006 ஆகிய நான்கு தேர்தல்களில் வெற்றி பெற்று ஒரே தொகுதியில் எம்.எல்.ஏவாக கோலோச்சி வந்தார். 2006-2011 திமுக ஆட்சிகாலத்தில் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் வணிகவரித்துறை அமைச்சராகச் செயல்பட்டு வந்தார். 1991 மற்றும் 2011 சட்டமன்றத் தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளர்களிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

தஞ்சை நகர செயலாளர்
27 ஆண்டுகள் தஞ்சாவூர் திமுக நகரச் செயலாளராகப் பணியாற்றிய உபயதுல்லா, கட்சியில் திமுக வர்த்தகர் அணி தலைவர், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளை வகித்து வந்தார். 5 ஆண்டுகாலம் வணிக வரித்துறை அமைச்சராக இருந்த எஸ்.என்.எம்.உபயதுல்லா, தஞ்சை மாவட்ட திமுகவில் முக்கியத் தலைவராக விளங்கினார்.

அண்ணா விருது
2022ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் அண்ணாதுரை விருது எஸ்.என்.எம்.உபயதுல்லாவுக்கு சமீபத்தில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. திராவிடக் கொள்கையில் தீவிரப் பற்று கொண்ட உபயதுல்லாவின் மறைவு திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு திமுக உடன்பிறப்புகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இரங்கல்
எஸ்.என்.எம்.உபயதுல்லா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கும்பகோணம் திமுக எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன், "முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர், முன்னாள் தஞ்சை நகர் கழக செயலாளர்,மாநில வர்த்தக அணி தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் அண்ணா விருது பெற்ற எஸ்.என்.எம். உபயதுல்லா அவர்களின் மறைவு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும், குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications