ஆளுநர் ரவி வருகையால் கோவிலில் இருந்து வெளியேற்றப்பட்ட பக்தர்கள்.. திருபுவனத்தில் அதிர்ச்சி!
தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு ஆளுநர் ரவி வருகையால் பக்தர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகாவில் உள்ள திருபுவனம் கம்பகரேஸ்வரர் - அறம் வளர்த்த நாயகி திருக்கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தருமபுரம் ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகையால் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் தரிசனத்திற்கு தாமதமாவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். ஆளுநர் ரவி வருகையால் கோயிலுக்குள் செல்ல முடியாமல் பல மணி நேரமாக காத்திருப்பதாக பக்தர்கள் குற்றம்சாட்டினர்.
ஆளுநர் ரவி வருகை காரணமாக, கோயிலுக்குள் இருந்த பக்தர்கள் வெளியேற்றப்பட்டனர். பக்தர்களை போலீசார் வெள்ளியே தள்ளியதாகவும் பக்தர்கள் குமுறினர். கோயிலில் இருந்து ஆளுநர் ரவி வெளியே வந்த பிறகுதான் பக்தர்களை உள்ளே அனுமதிப்போம் எனத் தெரிவிக்கப்பட்டதால் பக்தர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
கோவிலில் சாமி கும்பிட வருபவர்களை வெளியே அனுப்பிவிட்டு, ஆளுநரை அழைத்துச் செல்கிறார்கள். சாதாரண மக்களுக்கு கோவிலில் இடம் இல்லையா? கோவில் பக்திக்கான இடமா? அரசியல் செய்யும் இடமா என பக்தர்கள் பலர் ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.












Click it and Unblock the Notifications