கிளம்புறியா இல்லையா? மிரட்டிய எஸ்.ஐ.. ஒங்கி பளார் என்று அறை விட்ட இளைஞர்.. தஞ்சையில் சம்பவம்
தஞ்சாவூர்: கோவையில் கல்லூரி மாணவர் கொடூரமாகக் கொல்லப்பட்ட வழக்கில் நீதி கேட்டு தஞ்சையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தின் போது, பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளரை (SSI) இளைஞர் ஒருவர் ஓங்கி கன்னத்தில் அறைந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மாணவர் கொலைக்கு நீதி கேட்டு விசிக மறியல்
கோவை ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த மாணவர் அமுதன், மர்ம நபர்களால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) சார்பில் தஞ்சாவூரில் இன்று மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகினர்.
இளைஞர் வாக்குவாதம் - வெடித்த மோதல்
மறியல் நடைபெற்றுக் கொண்டிருந்த பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் செல்ல முயன்ற இளைஞர் ஒருவர், தனக்கு வழிவிடுமாறு கோரி மறியலில் ஈடுபட்டிருந்த விசிக நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சாலை மறியல் தீவிரமாக நடைபெற்றதால் அந்த இளைஞரை அங்கிருந்து உடனடியாகக் கலைந்து செல்லுமாறு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் எச்சரித்தனர்.
அப்போது அங்கிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் அந்த இளைஞரை அணுகி, வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இங்கிருந்து உடனடியாகக் கிளம்புமாறு அதட்டினார். மேலும், வார்த்தை முற்றிய நிலையில், ஒழுங்கா இங்கிருந்து கிளம்பு... இல்லைன்னா கன்னத்தில் அறைந்துவிடுவேன் என எச்சரித்தார்.
முடிந்தால் அடித்துப் பார் - பதிலுக்கு பறந்த அறை
காவல்துறையினரின் மிரட்டலால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் சற்றும் அஞ்சாமல், "முடிந்தால் அறைந்து பாருங்கள் பார்ப்போம்" என ஆவேசமாகப் பேசினார். இதனால் ஆத்திரமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர், கோபத்தின் உச்சத்தில் அந்த இளைஞரின் முகத்தில் லேசாக அறைந்தார்.
காவல் அதிகாரி தன்னைத் தாக்கிய அடுத்த நொடியே, நிலைகுலையாத அந்த இளைஞர் சட்டென சுதாரித்துக் கொண்டு, கண் இமைக்கும் நேரத்தில் அதிகாரியின் கன்னத்தில் ஓங்கி பளார் என ஓங்கி அறைந்தார். பொதுமக்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மத்தியில் காவல் அதிகாரிக்கு இளைஞர் ஒருவரால் விழுந்த இந்த அறை, அங்கிருந்த ஒட்டுமொத்த கூட்டத்தையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
5 போலீசார் சேர்ந்து குண்டுக்கட்டாக கைது
தங்கள் சக அதிகாரி தாக்கப்பட்டதைக் கண்ட மற்ற காவல்துறையினர் அதிர்ச்சியடைந்து உடனடியாக அந்த இளைஞரைச் சூழ்ந்து கொண்டனர். ஆவேசத்துடன் நின்ற அந்த இளைஞரை காவல்துறையினரால் உடனடியாகக் கட்டுப்படுத்த முடியவில்லை.
சுமார் 5-க்கும் மேற்பட்ட போலீசார் ஒன்று சேர்ந்து, கடும் சிரமத்திற்கு மத்தியில் திணறி திணறி அந்த இளைஞரை தரதரவென இழுத்துச் சென்றனர். பெரும் போராட்டத்திற்குப் பிறகு அவரை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று காவல் ஜீப்பில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பரபரப்பில் தஞ்சை
பட்டப்பகலில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சித் தொண்டர்கள் முன்னிலையில் காவல் அதிகாரியை இளைஞர் தாக்கியதும், அதற்குப் பின் நிகழ்ந்த பரபரப்புக் காட்சிகளும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து தஞ்சை நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்ட இளைஞரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
