‘தெய்வங்க நீங்க’ போலீஸ் காலில் விழுந்த தம்பதி..கடத்தப்பட்ட குழந்தையை மீட்ட திக்.. திக்..அனுபவம்
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் கடத்தப்பட்ட பெண் குழந்தை போலீசாரின் துரிதமான நடவடிக்கையால் 30 மணி நேரத்தில் மீட்கப்பட்டது. சினிமா பாணியில் பல்வேறு ஆதாரங்களை துரிதமாக திரட்டிய போலீசார் அந்த பெண் குழந்தையை பத்திரமாக பெற்றோரிடம் சேர்த்து உள்ளனர். இந்த குழந்தை கடத்தப்பட்ட காரணம்தான் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
தஞ்சாவூர் பர்மா காலனியைச் சேர்ந்த தம்பதி குணசேகரன்(24) - ராஜலட்சுமி(20). ராஜலட்சுமிக்கு கடந்த வெள்ளிக்கிழமை குழந்தை பிறந்தது. தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் இவருக்கு குழந்தை பிறந்த நிலையில் பக்கத்து வார்டில் இருந்த பெண் ஒருவர் அவ்வப்போது ராஜலட்சுமியை வந்து பார்த்துவிட்டு சென்று இருக்கிறார்.
ராஜலட்சுமி தனியாக இருக்கும் நேரங்களில் வந்து அவருக்கு உறுதுணையாக இருப்பது போல நாடகம் ஆடியுள்ளார். ராஜலட்சுமியும் 20 வயதே ஆவதால் குழந்தை வளர்ப்பு குறித்தும், ஆரம்ப நாட்களில் குழந்தையை எப்படி பாதுகாப்பது என்ற விவரங்களையும் அந்த பெண்ணிடம் கேட்டு இருக்கிறார்.

நம்பினார்
தனக்கு உறுதுணையாக இருக்கிறார் என்று நம்பி அந்த பெண்ணிடம் ராஜலட்சுமி நன்றாக பேசி உள்ளார். நீங்கள் பயப்படாமல் இருங்க.. நான் உங்க கூட இருப்பேன் என்று அந்த பெண் ராஜலட்சுமியிடம் அன்பாக பேசி உள்ளார். இந்த நிலையில்தான் வெள்ளிக்கிழமை மாலை ராஜலட்சுமி கழிவறைக்கு சென்ற போது நேரம் பார்த்து அந்த மர்ம பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்றார். கட்டை பை ஒன்றில் குழந்தையை போட்டுவிட்டு அங்கிருந்து அந்த பெண் தப்பித்து சென்றார்.

போலீசார்
இதையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா கந்தபுனேனி உத்தரவின் பேரில் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரன் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணைகள் தீவிரமாக நடந்தது. முதலில் சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் அந்த பெண்ணின் உடை, தோற்றம், கட்டை பை அடையாளங்கள் குறித்து வைக்கப்பட்டது.

சிசிடிவி
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த பெண் ஆட்டோ ஒன்றில் ஏறி சென்றுள்ளார். ஆட்டோவின் நம்பரை வைத்து, உடனடியாக ஆட்டோ டிரைவரை பிடித்த போலீசார், அந்த பெண்ணை எங்கே இறக்கிவிட்டீர்கள் என்று விசாரித்தனர். இதில் தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் அந்த பெண் இறங்கியதாகவும், அங்கு பட்டுக்கோட்டை பேருந்தில் அந்த பெண் ஏறியதாகவும் ஆட்டோ ஓட்டுநர் கூறியுள்ளனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அந்தப்பெண் ஒரு கடையில் மருந்து வாங்கியதாகவும் பின்னர் ஒரு இடத்தில் இறங்கிக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

காலாவதியாண எண்
மருந்துவாங்கியக் கடையில் விசாரித்தபோது பில் தொகை கட்டும்போது செல்போன் எண்ணை அப்பெண் கொடுத்துள்ளது தெரியவந்தது. ஆனால் சாமர்த்தியமாக பல ஆண்டுகளுக்கு முன் தான் பயன்படுத்தி காலாவதியான எண்ணை கொடுத்தது தெரியவந்தது. இதனால் குழம்பிப்போன போலீஸாருக்கு திடீரென ஒரு ஐடியா தோன்றியுள்ளது.

சிக்கினார்
அந்த எண்ணை வைத்து வேறு ஏதாவது செல்போன் எண் வாங்கப்பட்டுள்ளதா? என போலீஸார் ஆய்வு செய்தனர். அந்த எண்ணை வைத்து ஒரு செல்போன் எண் வாங்கப்பட்டுள்ளதையும் பின்னர் அந்த எண்ணை வைத்து வேறொரு எண் வாங்கப்பட்டுள்ளதையும் போலீஸார் கண்டுபிடித்தனர். அந்த எண்ணுக்கு கொடுக்கப்பட்ட அடையாள அட்டை பட்டுக்கோட்டையை காட்டியது. அந்த முகவரிக்கு போலீஸார் சென்றபோது கடத்தப்பட்ட குழந்தையுடன் பெண் சிக்கினார்.

பிடித்தனர்
இந்த நிலையில்தான் பட்டுக்கோட்டை சென்ற தனிப்படை போலீஸார் அங்கே தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள். அங்கு சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அண்ணா நகரைச் சேர்ந்த விஜி(37) என்ற பெண்ணை கைது செய்து விசாரித்தனர். இதில் குழந்தையை கடத்தியதை அந்த பெண் ஒப்புக்கொண்டார். பொதுவாக குழந்தை பிறந்து அடுத்த ஒரு வாரம் கண்டிப்பாக தாய் பால் கொடுக்க வேண்டும், தாயின் அரவணைப்பில் இருக்க வேண்டும். அதோடு குழந்தை அருகில் இருப்பதே தாயின் மனநிலைக்கும் நல்லது.

உருக்கம்
இப்படிபட்ட இக்கட்டான நேரத்தில் போலீசார் துரிதமாக செயல்பட்டு அந்த குழந்தையை மீட்டு அம்மாவிடம் கொடுத்து உள்ளனர். இந்த குழந்தை கடத்தப்பட்ட காரணம்தான் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. குழந்தையை கடத்திய விஜிக்கு மூன்று திருமணங்கள் இதுவரை நடந்துள்ளன. மூன்றாவது கணவரிடம் தான் கர்ப்பமாக இருப்பதாகக் கூறி விஜி நாடகம் ஆடி உள்ளார்.

குழந்தை
அவரின் சொத்துக்களை சொந்தம் கொண்டாட கர்ப்பம் ஆகாமலே கர்ப்பம் ஆகியதாக விஜி கூறியுள்ளார். பொய்யாக வளைகாப்பும் நடத்தி உள்ளார். பின்னர் சில நாட்கள் அம்மா வீட்டில் தங்கி இருந்திருக்கிறார். இந்த நிலையில்தான் பிரவசத்திற்காக மருத்துவமனைக்கு செல்வதாக கூறி நாடகம் ஆடியுள்ளார். பின் எல்லாம் முடிந்து ஆதாரமாக குழந்தையை காட்ட இந்த பெண் குழந்தையை கடத்தியதாக கூறப்படுகிறது. இந்த குழந்தையை காட்டி 3வது கணவனின் சொத்துக்களை தனது பெயரில் மாற்ற முயன்றதாக விஜி வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications