தவெக ஆட்சியில் ஜென்-இசட் குரல்வளை நெரிக்கப்படுகிறது? தஞ்சை சம்பவமும்... விஜய் அரசின் மௌனமும்!

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: பழைய அரசியலும் வேண்டாம், அடக்குமுறையும் வேண்டாம் என்ற ஒற்றை முழக்கத்தை நம்பி, மாற்றத்தை நோக்கி காத்திருந்த Gen Z இளைஞர் பட்டாளத்தின் வாக்குகள் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி மாற்றத்தில் பெரும் பங்கு வகித்தன. விஜய்க்கு வாக்களித்து அவரை அரியணையில் அமர வைத்தது ஜென் ஜி பட்டாளம்தான்.. ஆனால், மாற்றத்தை எதிர்பார்த்த அதே இளைய தலைமுறை, இன்று தவெக ஆட்சியில் கடும் அடக்கு முறைக்கு உள்ளாகி வருகின்றனர். தஞ்சையில் நடந்த சமீபத்திய மோதல் சம்பவம் இதற்கு முக்கிய உதாரணமாக மாறி உள்ளது.

Vijay TVK

எங்களுக்கு வழி விடுங்கள்... ஒரு எளிய கேள்விக்கு கிடைத்த அறை

தஞ்சையில் விசிகவினர் முன்னெடுத்த சாலை மறியல் காரணமாகப் போக்குவரத்து ஸ்தம்பித்த போது, ஒரு சாமானிய இருசக்கர வாகன ஓட்டியாக அந்த இளைஞர் கேட்டது ஒன்றே ஒன்றுதான்: "பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வழியை விடுங்கள்; மறியலைக் கலைத்து போக்குவரத்தைச் சீரமைப்பது காவல்துறையின் கடமைதானே?"

அதிகார வர்க்கத்தின் மெத்தனத்தையும், சட்டம்-ஒழுங்கை நடைமுறைப்படுத்துவதில் உள்ள தயக்கத்தையும் கேள்வி கேட்பது ஜென்-இசட் தலைமுறையின் இயல்பு. அதைத்தான் அங்கு பைக்கில் வந்த இளைஞர் என். ஆகாஷ் செய்தார். ஆனால், அங்கே சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய காவல்துறையின் அணுகுமுறை வேறு திசையில் திரும்பியது. ஜனநாயக ரீதியாக வழிகேட்ட இளைஞரை நோக்கி மிரட்டல் தொனியில் பேசிய காவல்துறை அதிகாரி, வாக்குவாதம் முற்றிய சூழலில் கையை ஓங்கினார்.

மறியல் நடைபெற்றுக் கொண்டிருந்த பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் செல்ல முயன்ற ஆகாஷ், தனக்கு வழிவிடுமாறு கோரி மறியலில் ஈடுபட்டிருந்த விசிக நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சாலை மறியல் தீவிரமாக நடைபெற்றதால் அந்த இளைஞரை அங்கிருந்து உடனடியாகக் கலைந்து செல்லுமாறு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.எஸ்.ஐ அப்துல் ரஹீம். எச்சரித்தார்.

வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இங்கிருந்து உடனடியாகக் கிளம்புமாறு அதட்டினார். மேலும், வார்த்தை முற்றிய நிலையில், ஒழுங்கா இங்கிருந்து கிளம்பு... இல்லைன்னா கன்னத்தில் அறைந்துவிடுவேன் என எச்சரித்தார்.

முடிந்தால் அடித்துப் பார் - பதிலுக்கு பறந்த அறை

காவல்துறையினரின் மிரட்டலால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் சற்றும் அஞ்சாமல், "முடிந்தால் அறைந்து பாருங்கள் பார்ப்போம்" என ஆவேசமாகப் பேசினார். இதனால் ஆத்திரமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர், கோபத்தின் உச்சத்தில் அந்த இளைஞரின் முகத்தில் லேசாக அறைந்தார். காவல் அதிகாரி தன்னைத் தாக்கிய அடுத்த நொடியே, நிலைகுலையாத அந்த இளைஞர் சட்டென சுதாரித்துக் கொண்டு, கண் இமைக்கும் நேரத்தில் அதிகாரியின் கன்னத்தில் பளார் என ஓங்கி அறைந்தார். பொதுமக்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மத்தியில் காவல் அதிகாரிக்கு இளைஞர் ஒருவரால் விழுந்த இந்த அறை, அங்கிருந்த ஒட்டுமொத்த கூட்டத்தையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கேமராக்கள் முன்னிலையிலேயே அரங்கேறிய அடக்குமுறை

தங்கள் சக அதிகாரி தாக்கப்பட்டதைக் கண்ட மற்ற காவல்துறையினர் அதிர்ச்சியடைந்து உடனடியாக அந்த இளைஞரைச் சூழ்ந்து கொண்டனர். சுமார் 5-க்கும் மேற்பட்ட போலீசார் ஒன்று சேர்ந்து, கடும் சிரமத்திற்கு மத்தியில் திணறி திணறி அந்த இளைஞரை தரதரவென இழுத்துச் சென்றனர்.

ஊடகக் கேமராக்களும் பொதுமக்களின் செல்போன்களும் படம்பிடித்துக் கொண்டிருந்த நிலையிலேயே, அந்த இளைஞர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார். கழுத்தில் கயிறு இறுக்கப்பட்டு, சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட காவலர்கள் அவரை தரதரவென இழுத்துச் சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கைதான இளைஞர் தஞ்சை விளார் பகுதியைச் சேர்ந்த என். ஆகாஷ் (26, கோழிப்பண்ணை தொழிலாளி). அந்த காவல் அதிகாரி தஞ்சை மேற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் (SSI) அப்துல் ரஹீம்.

சுயமரியாதை முக்கியம்

சுயமரியாதையையும் தனிமனித உரிமையையும் முதன்மையாகக் கருதும் இன்றைய இளம் தலைமுறை, இத்தகைய அப்பட்டமான அதிகார பலப்பிரயோகத்தை ஒருபோதும் சகித்துக் கொள்வதில்லை. ஒருபுறம் சாலை மறியல் செய்தவர்கள் மீது மென்மையான போக்கும், பாதிக்கப்பட்ட சாமானிய இளைஞர் மீது ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிந்து சிறையிலடைக்கும் அணுகுமுறையும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் மிக முக்கியமான அரசியல் விவாதமாக உருவெடுத்துள்ளது தமிழக வெற்றிக் கழக அரசின் தலைமை காக்கும் மௌனம். காவல்துறையைக் கண்காணிக்கும் மிக முக்கியமான உள்துறை இலாகாவைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் விஜய், இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எந்தவொரு தெளிவான விளக்கத்தையும் அல்லது நடவடிக்கையையும் அறிவிக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் இதை பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை.

அரசியல் களத்தில் நேர்மை, அதிகார துஷ்பிரயோகத்திற்கு முற்றுப்புள்ளி, இளைஞர்களின் பாதுகாப்பு எனப் பேசி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தவெக அரசு, காவல்துறையின் அத்துமீறல்களைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. விஜய் ஆட்சியில் சாமானிய மக்களின் உரிமைகள் காற்றில் பறக்கவிடப்படுகிறதா என்ற ஆதங்கமும் இளம் வாக்காளர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.

ஜென்-இசட் இளைஞர்கள் எந்தவொரு அரசியல் பிம்பத்தையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றுபவர்கள் அல்ல. பழைய கட்சிகளின் மீது இருந்த அதிருப்தியால் தவெக-வை ஆதரித்தவர்கள், தங்களின் அடிப்படைப் பாதுகாப்பும் உரிமைகளும் கேள்விக்குறியாகும் போது அதே வேகத்தில் எதிர்வினையாற்றுவார்கள்.

தஞ்சையில் நடந்த சம்பவம் வெறும் தனிநபர் மோதல் மட்டுமல்ல.. ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் காவல்துறையை எவ்வாறு வழிநடத்துகிறார்கள் என்பதற்கான சான்று. அதிகார மிரட்டல்களுக்கும் அத்துமீறல்களுக்கும் எதிராக உடனடியாகத் தலையிட்டுத் தீர்வு காணாவிட்டால், தவெகவின் அடித்தளமாக விளங்கும் இளைஞர் சக்தியின் நம்பிக்கை மெல்லச் சரியத் தொடங்கும் என்பதே அரசியல் பார்வையாளர்களின் எச்சரிக்கையாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+