நிலக்கரி திட்டம் ரத்து! ஸ்டாலினுக்கு தஞ்சையில் பாராட்டு விழா! விவசாயிகளை அணி திரட்டும் கி.வீரமணி!
தஞ்சை: காவிரி டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசின் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வைத்ததற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்தும் திட்டத்தில் இருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
தமிழ்நாட்டில் நெற்களஞ்சியமாக விளங்கும் டெல்டா பகுதிகளில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்ததாலும், தொடர் போராட்டங்கள் நடைபெற்றதாலும் அந்த திட்டங்களை மத்திய அரசு கைவிட்டது.

அரசியல் கட்சிகள், அரசியல் அமைப்புகள், சூழலில் அமைப்புகளின் தொடர் போராட்டத்தின் காரணமாக டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சேத்தியார்தோப்பு, வடசேரி, மைக்கேல்பட்டி ஆகிய பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஏலம் விட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து இந்த விவகாரத்தில் மிக மிக துரிதமாக செயல்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் ஆரம்பக்கட்டத்திலேயே அவசரக் கடிதம் ஒன்றை எழுதியதோடு, சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரை பார்க்க டி.ஆர்.பாலுவை அனுப்பி வைத்தார்.
மேலும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவிக்கப்பட்ட டெல்டா பகுதிகளில் மத்திய அரசின் நிலக்கரி திட்டத்தை தமிழ்நாடு அரசு ஒரு போதும் அனுமதிக்காது என அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் மிகத் திட்டவட்டமாக அறிவித்தார்.

இப்படி பல்வேறு வழிகளிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் டெல்டா பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதற்கு காரணம் முதலமைச்சர் ஸ்டாலின் தான் என்றும் இந்த விவகாரத்தில் விவசாயிகள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேட்டுக்கொண்டார்.

நிலக்கரி எடுக்கும் திட்டம் ரத்தாக தாம் தான் காரணம் என அண்ணாமலை கூறுவது சுத்தப் பொய் என கி.வீரமணி விமர்சித்தார்.
இதனிடையே நிலக்கரி எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வைத்ததற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தஞ்சையில் தனது தலைமையில் பாராட்டு விழா ஒன்றை நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
இந்த விழாவில் பெருமளவில் விவசாயிகளை பங்கேற்க வைப்பதற்கான பணிகளையும் கி.வீரமணி கவனித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications