"நாக்கு அழுகி விடும்.." பிரச்சாரத்தில் ஆவேசம்.. சாபமிட்ட ஸ்டாலின்.. அதிர்ந்த டெல்டா
தஞ்சாவூர்: இனிமேலும் இப்படிப் பேசினால் நாக்கு அழுகிவிடும் என்று சாபம் விட்டுள்ளார் திமுக தலைவர் முக ஸ்டாலின்.
எதற்காக ஸ்டாலின் இவ்வாறு ஆவேசமானார் தெரியுமா.. எல்லாம் காவிரி நதிநீர் தொடர்பான பேச்சின் போது தான்.
ஒரத்தநாடு பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது தான் இவ்வாறு காவிரி விவகாரம் தொடர்பாக ஆவேசம் ஆகிவிட்டார் ஸ்டாலின்.

தஞ்சை மாவட்டம்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி ஒரத்தநாட்டில் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். இது டெல்டா பகுதி என்பதால் காவிரி விவகாரம் பற்றி தனது பிரச்சாரத்தின் போது அதிகமாக பேசினார் ஸ்டாலின்.

காவிரி காப்பாளர்
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே காவிரி பிரச்சினை எழவே இல்லை. டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதன் காரணமாக காவிரி உரிமைகளை மீட்டு எடுத்தது மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு புத்துயிர் கொடுத்து அதிமுக அரசுதான் என்பது முதல்வர் பழனிசாமி பரப்புரையாக இருந்து வருகிறது.

திமுக மீது குற்றச்சாட்டு
மீத்தேன் வாயு திட்டத்திற்கு ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது அனுமதி வழங்கப்பட்டது.. காவிரி உரிமைகள் கர்நாடகாவிடம் அடகு வைக்கப்பட்டன என்பது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தில் திமுக மீது வைக்கும் முக்கியமான குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

காவிரி டூ காவேரி
இந்த நிலையில்தான், ஸ்டாலின் தனது பிரச்சாரத்தின் போது காவிரி உரிமை மீட்க கருணாநிதி முதல்வராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை வரிசையாகப் பட்டியலிட்டார். மேலும், காவிரி கரையில் பிறந்தவர் கருணாநிதி. காவேரி மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது. பிறந்தது முதல் இறப்பது வரை காவிரிக்காக குரல் கொடுத்தவர் கருணாநிதி, என்று ஏரியாவுக்கு ஏற்ப செண்டிமெண்டாக பேசினார் ஸ்டாலின்.

நாக்கு அழுகிவிடும்
ஒருகட்டத்தில் ஆவேசமான ஸ்டாலின், காவிரி விவகாரத்தில் கருணாநிதி பற்றி அவதூறு பேசினால் அவர்கள் நாக்கு அழுகிவிடும் என்று சாபமிட்டார். மேலும், திமுக தேர்தல் அறிக்கையை ஜெராக்ஸ் எடுத்தால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் அதிமுக தேர்தல் அறிக்கை இருக்கிறது என்று விமர்சனம் செய்து விட்டு தனது பிரச்சாரத்தை முடித்துக்கொண்டார்.












Click it and Unblock the Notifications