மூனு மீனு ரூ.16 ஆயிரம்.. அதிராம்பட்டினம் மீன் மார்க்கெட்டில் அனல் பறந்த ஏலம் - இவ்வளவு மதிப்பு ஏன்?
தஞ்சாவூர்: அதிராம்பட்டினம் மீன் மார்க்கெட்டில் 3 மீன்கள் 16 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு இருப்பது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இவ்வளவு விலைக்கு மீன்கள் விற்பனை செய்யப்பட்டது ஏன்? விரிவாக பார்ப்போம்.
தஞ்சாவூர் மாவட்டத்தின் கடலோரத்தில் அமைந்துள்ள நகராட்சி அதிராம்பட்டினம். இங்கிருந்தும், அருகில் உள்ள மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்தும் தினசரி ஏராளமான மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்து வந்து விற்பனை செய்கிறார்கள். குறிப்பாக அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் பெரிய மீன் மார்க்கெட்டிற்கு இந்த மீன்கள் எடுத்து வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மீன்களை வாங்கி வந்து விற்பனை செய்யும் வியாபாரிகள் இங்கு ஏலம் விடுவது வழக்கம். பரபரப்பாக நடக்கும் இந்த ஏலத்தை பார்க்கவே தனி கூட்டம் வரும். இந்த நிலையில் நேற்று இந்த மீன் மார்க்கெட்டில் 3 மீன்கள் ரூ.15,995 க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. இவ்வளவு தொகைக்கு விற்பனை செய்யப்பட்ட இந்த கூரை கத்தாழை வகை மீன்களை இப்பகுதி மக்கள் அதிகளவில் விரும்பி உண்ண மாட்டார்கள்.
அப்படி இருந்தும் இவ்வளவு விலைக்கு ஏலம் போக என்ன காரணம் என்றால் அதன் வயிற்றில் இருக்கும் நெட்டி என்ற சதைதான். ஆம், 3 கிலோவுக்கு அதிகமான எடை கொண்ட கூரை கத்தாழை மீன்கள் வலையில் பிடிபட்டால் மீனவருக்கு புதையல் கிடைத்ததைபோன்றதாகும். காரணம் மீன் கறி அல்ல. அதன் வயிற்றில் உள்ள நெட்டியின் எடை.
அந்த நெட்டியை மட்டும் எடுத்து பல ஆயிரத்துக்கு விற்பனை செய்வார்கள். மீன்களுக்கு மிதவை தன்மை கொடுக்க வயிற்றில் இருக்கும் இந்த நெட்டி மருத்துவ தன்மை கொண்டது என்றும், அதிகளவில் இது ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் மீனவர்கள், மீன் வியாபாரிகள் கூறுகிறார்கள்.
மற்ற மீன்களின் வயிற்றில் நெட்டி இருந்தாலும், கூரை கத்தாழை மீன்களின் நெட்டிக்கு மார்க்கெட்டில் தனி மவுசு இருப்பதால் அதன் விலையும் அதிகளவில் உள்ளது. குறிப்பாக அதிக எடை கொண்ட ஆண் மீனாக இருந்தால் விலை மேலும் அதிகரிக்கும் என்கிறார்கள். பொதுவாக இந்த கூரை கத்தாழை மீன்களை குழம்பு, பொரியல் போன்றவற்றுக்கு பயன்படுத்துவதை விட கருவாடு தயாரிக்கவே அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

கூரை கத்தாலை சிறிய மீன் கிலோ ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதுவே ஒரு மீன் 3 கிலோவுக்கு மேல் இருந்தால், நாம் மேலே சொன்னதுபோல் மீனவருக்கு புதையல்தான். அதன் வயிற்றில் இருக்கும் நெட்டியை 100 கிராம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்கலாம் என்கிறார்கள்.
இதே பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன் கூரை கத்தாழை மீன் நெட்டிக்காகவே ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு இதேபோல் காரைக்காலை அடுத்த கீழகாசாக்குடி மேட்டை சேர்ந்த பால்மணி என்ற மீனவருக்கு ஒரே வலையில் 165 கூரை கத்தாழை மீன்கள் சிக்கின. 27 கிலோ எடைகொண்ட இந்த மீன்கள் துறைமுகத்தில் ரூ.1 கோடி மேல் ஏலம் போனது. இப்படி இந்த நெட்டியின் மூலமாகவே பல மீனவர்கள் கோடீஸ்வரர்களாகி இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications