உலக அதிசயப் பட்டியலில் இணையும் தஞ்சை பெரிய கோவில்? நாடாளுமன்றக் குழு தரமான முடிவு!
சென்னை: தமிழர்களின் கட்டிடக்கலைக்கும், வரலாற்றுப் பெருமைக்கும் மகுடம் சூட்டும் விதமாக ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலை, 'உலகின் ஏழு அதிசயங்கள்' பட்டியலில் சேர்க்க பரிந்துரை செய்யப்படும் என நாடாளுமன்ற நிலைக்குழு அறிவித்துள்ளது.

நாடாளுமன்றக் குழு நேரில் ஆய்வு
மத்திய அரசின் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாசாரத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவினர், அதன் தலைவர் சஞ்சய் குமார் ஜா தலைமையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தனர். இந்தக் குழுவில் மாநிலங்களவை உறுப்பினர் சுதா மூர்த்தி உட்பட எஸ். கல்யாணசுந்தரம், கே.இ. பிரகாஷ், அனுராக் சர்மா, பாபு சிங் குஷ்வாஹா, கேஷரி தேவ் சிங் ஜாலா, ஜக்கேஷ், அரவிந்த் கண்பத் சாவந்த் உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர்.
பாரம்பரிய மங்கள வாத்தியங்கள் முழங்க இவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவிலுக்குள் சென்ற குழுவினர், பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்மனை தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து, கோவிலின் பிரம்மாண்டமான கோபுரம், நுணுக்கமான சிற்பங்கள், பிரகாரத்தில் உள்ள பழங்கால ஓவியங்கள் மற்றும் கல்வெட்டுகளை மிகுந்த ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர்.
தாஜ்மஹாலை விடப் பெரிய அதிசயம்!
ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் சஞ்சய் குமார் ஜா, தனது வியப்பை வெளிப்படுத்தினார். அவர் கூறுகையில், "நான் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவன். இதுவரை இந்தக் கோவிலை புகைப்படங்களில் மட்டுமே பார்த்திருக்கிறேன். இன்றுதான் முதன்முறையாக நேரில் பார்க்கிறேன். என்னைப் போலவே, தமிழகத்தைச் சாராத மற்ற மாநில எம்பிக்களும் இப்போதுதான் முதல்முறையாக இங்கு வந்துள்ளனர்.
பொதுவாக இந்தியாவின் அதிசயம் என்றதும், வட இந்தியாவில் உள்ள தாஜ்மஹால் பற்றி மட்டுமே நாம் அதிகம் பேசுகிறோம். ஆனால், தஞ்சை பெரிய கோவில் தாஜ்மஹாலை விடவும் பிரம்மாண்டமாகவும், சிறப்பாகவும் உள்ளது. 1,000 ஆண்டுகளுக்கு முன்பு, எந்த நவீன தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில், இவ்வளவு பெரிய கோவிலை எப்படி கட்டினார்கள்? கோபுரத்தின் உச்சியில் இருக்கும் அந்த ஒற்றைக் கல்லை எப்படி மேலே கொண்டு சென்றார்கள் என்று அதிகாரிகளிடம் கேட்டறிந்தேன். உண்மையிலேயே இது மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் அதிசயம்.
ஏற்கனவே யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாக இந்தக் கோவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இப்போது, இதனை 'உலக அதிசயங்கள்' பட்டியலில் இடம்பெறச் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு எங்கள் குழு சார்பில் மத்திய அரசுக்கு நிச்சயம் பரிந்துரை செய்வோம்" என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
சுற்றுலாப் பயணிகள் வருகையும் விமான சேவையும்
இந்த ஆய்வின்போது, இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் கோவில் பராமரிப்புப் பணிகள் குறித்துக் குழுவினருக்கு விளக்கினர். ஒவ்வொரு மாதமும் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தஞ்சை பெரிய கோவிலுக்கு வருகை தருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைக் கேட்ட எம்.பி-க்கள், அதிகரித்து வரும் கூட்டத்தைச் சமாளிக்கத் தேவையான வசதிகள் மற்றும் கூட்ட நெரிசல் மேலாண்மை குறித்து ஆலோசனை நடத்தினர். மேலும், தஞ்சாவூருக்கு விமானப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
தஞ்சை பெரிய கோவிலைத் தொடர்ந்து, கரிகால சோழனால் 2-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கல்லணை மற்றும் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலிலும் இந்தக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். 1,000 ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாக நிற்கும் மாமன்னர் ராஜராஜ சோழனின் படைப்பான தஞ்சை பெரிய கோவிலுக்கு உலக அதிசய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற முயற்சி, உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
