பவர் கட்! இருட்டில் யாருக்கும் கேட்காத பேச்சை 30 நிமிடங்கள் பேசிய அமைச்சர்! வினோத விளக்கம்
தஞ்சை: தஞ்சாவூரில் குந்தவை நாச்சியார் கலைக் கல்லூரியில் நடந்த ஒரு விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் மின்வெட்டு ஏற்பட்ட போதிலும் 30 நிமிடங்களாக அவர் மாணவிகளுக்கு கேட்காத போதிலும் பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
தஞ்சையில் குந்தவை நாச்சியார் கலைக் கல்லூரியில் ஒரு விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் கலந்து கொண்டார். மாணவிகள் மத்தியில் முதல்வர் விஜய்யின் நிர்வாகத் திறன் குறித்து பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் பேசத் தொடங்கிய 5 நிமிடத்திலேயே திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இதையடுத்து ஜெனரேட்டரை ஆன் செய்ய கல்லூரி நிர்வாகம் முயற்சித்தது. ஆனால் அது பழுதடைந்த காரணத்தால் இயக்க முடியவில்லை.
எனினும் அமைச்சர் விஸ்வநாதன் சளைக்காமல் 30 நிமிடங்கள் மின்வெட்டுடனேயே பேசிக் கொண்டிருந்தார். மைக் இயங்காததால் அமைச்சர் பேசியது மாணவ, மாணவிகளுக்கு கேட்கவில்லை. இதனால் சலசலப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் மின்வெட்டு குறித்து எம்எல்ஏ விஜய் சரவணன் கூறுகையில், இது மின்வெட்டு இல்லை, கல்லூரியில் உள்ள டிரான்ஸ்ஃபார்மரில் வேலை நடப்பதால் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது என சப்பை கட்டு கட்டினார்.
அமைச்சர் ஒரு விழாவில் கலந்து கொள்ளும் போது எப்படி டிரான்ஸ்பார்மரில் வேலை செய்வார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அமைச்சர் விழாவிலேயே மின்வெட்டு என்ற விமர்சனத்தை தடுக்கவே எம்எல்ஏ இவ்வாறு கூறியிருந்தார் என சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் தற்போது வெயில் அதிகம் இருப்பதால் அறிவிக்கப்படாத மின்வெட்டு அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் மின்சாரத்திற்கான தேவை அதிகரித்துள்ளதுதான்.
எனவே சென்னையில் ராயபுரம், வேளச்சேரி, தாம்பரம், மடிப்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத திடீர் மின்வெட்டு ஏற்படுகின்றன. இதனால் கொசு கடியில் குழந்தைகளை வைத்து கொண்டு தூங்கவும் முடியாமல் பூச்சி ஏதாவது வீட்டினுள் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
தவெக அரசு பொறுப்பேற்றது முதலே ஆங்காங்கே மின்வெட்டு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நள்ளிரவு நேரங்களில் போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.
அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை போல் தொழில்துறை, விவசாயத் துறையும் பாதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இதனால் பிளாஸ்டிக், ஜவுளி உள்ளிட்ட தொழிற்சாலைகளில் உற்பத்தி குறைந்துள்ளது.
கரென்ட் இல்லாததால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. அமைச்சர்கள் கலந்து கொள்ளும் விழாக்களிலும் பிரஸ்மீட்களிலும் கூட கரென்ட் கட் ஏற்படுகிறது. மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகத்தை டிவியில் காண ஆவலுடன் இருந்த போது தங்கள் பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டதாக முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




Click it and Unblock the Notifications
