டவுன் பஸ்ஸை நிறுத்த முடியாதா? உங்களுக்கு என்ன பிரச்சனை? ஓட்டுநரை வெளுத்து வாங்கிய தஞ்சை மேயர்!
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் கல்லூரி மாணவிகளை நகரப் பேருந்தில் ஏற்றுவதற்கு ரொம்பவும் சலித்துக்கொண்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை கேள்விக்கணைகளால் வெளுத்து வாங்கியிருக்கிறார் தஞ்சை மேயர்.
மகளிருக்கு இலவச டிக்கெட் என்பது முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்துள்ள முடிவு என்றும் இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை வந்தது எனவும் ஓட்டுநரிடம் தஞ்சை மேயர் சண்.ராமநாதன் கேட்டார்.
இனியாவது முறையாக பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தி மாணவிகளை ஏற்றிச்செல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

தஞ்சை கல்லூரி
கடந்த வாரம் தஞ்சை அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் கலந்துகொண்டார். அப்போது தங்களை அரசு டவுன் பஸ்களில் ஏற்றுவதற்கு ஓட்டுநரும், நடத்துநரும் ரொம்பவே சலித்துக் கொள்வதாகவும், மகளிருக்கு கட்டணமில்லா டிக்கெட் என்பதால் தங்களை ஏற்றினால் வசூல் கிடைக்காது என்ற எண்ணத்துடன் பேருந்தை தள்ளி நிறுத்துவது, சில நாட்கள் நிற்காமல் செல்வது என இருப்பதாகவும் கல்லூரி மாணவிகள் மேயர் ராமநாதனிடம் முறையிட்டனர்.

நேரில் வாருங்கள்
மேலும் தாங்கள் சொல்வதை நேரில் வந்தால் நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளலாம் என மாணவிகள் முறையிட்டுள்ளனர். அதன்படி அவர்களின் அழைப்பை ஏற்று காலை 8.30 மணிக்கெல்லாம் ஸ்பாட்டில் ஆஜரான தஞ்சாவூர் மேயர் ராமநாதன், மாணவிகளை ஏற்றாமல் நகர்ந்த அரசுப் பேருந்தை நிறுத்தி அதன் ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு புத்திமதி கூறினார்.

தொடர்ந்து புகார்
மகளிருக்கு இலவச டிக்கெட் என்பது முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்துள்ள முடிவு என்றும் இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை வந்தது எனவும் ஓட்டுநரிடம் தஞ்சை மேயர் சண்.ராமநாதன் கேட்டார். அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகளிடம் இருந்து தொடர்ந்து இது தொடர்பான புகார்கள் வருவதாகவும் இனி சரியாக நடந்துகொள்ள வேண்டும் எனவும் தஞ்சை மாநகராட்சி மேயர் கேட்டுக்கொண்டார்.

மின்னல் வேகம்
இதேபோல் மகளிரை வேண்டா வெறுப்பாக பேருந்தில் ஏற்றாமல் அவர்களுக்கு உரிய மரியாதையுடன் நடத்த வேண்டும் என அறுவுரை நல்கினார். தங்களது புகார் மீது மின்னல் வேகத்தில் ஆக்ஷன் எடுத்த தஞ்சாவூர் மேயர் ராமநாதனுக்கு கல்லூரி மாணவிகள் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications