தஞ்சாவூர் ஆற்றில் ஜாலியாக மது அருந்திய நண்பர்கள்.. இப்படியுமா.. 2 மாதங்களுக்கு பிறகு விலகிய மர்மம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே ஆற்றில் பட்டதாரி வாலிபரின் உடல் மீட்கப்பட்ட சம்பவத்தில் 2 மாதங்களுக்கு பிறகு மர்மம் விலகி உள்ளது. மது அருந்திய போது ஆற்றில் விழுந்ததை வெளியில் கூறாமல் மறைத்ததால் நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.. பட்டதாரி வாலிபரின் மனைவி சந்தேகம் இருப்பதாக அளித்த புகாரின் பேரில் விசாரித்த போது உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியவந்தது.
தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள மேல ஊரணிபுரம் கிராமத்தை சேர்ந்த 25 வயதாகும் அபிமன்யு , பட்டப்படிப்பு முடித்த பட்டதாரி ஆவார். கடந்த செப்டம்பர் மாதம் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை கால்வாய் புது ஆற்றில் இடையாத்தி பாலம் அருகே அபிமன்யூ உடல் மீட்கப்பட்டது.

போலீசார் வழக்கு
இதனை தொடர்ந்து அபிமன்யு உடலை கைப்பற்றிய வாட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது ஆற்றில் விழுந்து இறந்ததாகவே போலீசார் கருதினார்கள். இந்த நிலையில் அபிமன்யு மனைவி பிரியங்கா தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவருடன் நெருக்கமாக பழகி வந்த நபர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
கல்லணை கால்வாயில் மது அருந்தியுள்ளார்கள்
இந்த விசாரணையில், சம்பவத்தன்று இரவு அபிமன்யு, ராஜசேகர், ரஞ்சித் ஆகிய 3 பேரும் ஒன்றாக சேர்ந்து கல்லணை கால்வாய் புது ஆற்றுக்கரையில் மது அருந்தினார்களாம். அப்போது ஆற்றில் அபிமன்யு தவறி விழுந்ததாகவும், அப்போது நாங்கள் (ராஜசேகர், ரஞ்சித்) அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டதாகவும், அபிமன்யு ஆற்றில் விழுந்து இறந்த தகவலை அறிந்த பிறகு இந்த விவரத்தை நாங்கள் பயத்தில் யாருக்கும் தெரிவிக்காமல் இருந்ததாகவும் கூறினார்களாம். போலீஸ் விசாரணையின் போது ராஜசேகர் மற்றும் ரஞ்சித் ஆகியோர் இந்த தகவலை கூறியதாக கூறப்படும் நிலையில், இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏன் கைது
ஒன்றாக மது அருந்திய போது அபிமன்யு ஆற்றில் தவறி விழுந்ததை பார்த்த அவரை காப்பாற்ற முயற்சிக்காமலும், இந்த தகவலை யாரிடமும் தெரிவிக்காமலும் மறைத்தது போன்ற குற்றத்திற்காக ராஜசேகர், ரஞ்சித் ஆகிய 2 பேரையும் வாட்டாத்திக்கோட்டை போலீசார் நேற்று கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.. எனினும் நடந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருவோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications