என் வேலையே போச்சு.. போலீஸை அடிச்சது தப்பு தான்.. தஞ்சாவூரில் கைதாகி விடுவிக்கப்பட்ட இளைஞர் பேட்டி!
தஞ்சாவூர்: அண்மையில் தஞ்சாவூரில் விசிகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தை போலீசார் கட்டுபடுத்த முயன்ற போது, மறுபக்கம் போலீசாருடன் இளைஞர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் கோபமடைந்த இளைஞர், திடீரென காவல் உதவி ஆய்வாளரை கன்னத்தில் அறைந்தார். இதன்பின் அந்த இளைஞரை உடனடியாக போலீசார் ஒன்றாக இணைந்து குண்டுகட்டாக கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினார்.
இந்த வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகியது. அதுமட்டுமல்லாமல் அந்த இளைஞர் ஏதோ ஒரு வேகத்தில் போலீசார் மீது கை வைத்துவிட்டதாக சில ஆதரவும் வந்தது. இதனை வைத்து மிகப்பெரிய விவாதமும் நடைபெற்றது. தற்போது கைது செய்யப்பட்ட அவர், பிணையில் வெளி வந்துள்ளார். இந்த நிலையில் அன்றைய நாளில் என்ன நடந்தது என்பது தொடர்பாக அந்த இளைஞர் பேசியுள்ளார்.

அதில் அந்த இளைஞர் பேசுகையில், அன்றைய நாளில் எனக்கு குடும்ப பிரச்சனை இருந்தது.. அம்மா - அப்பாவுக்கு பிரச்சனை.. எனக்கும் பிரச்சனை சூழல்.. தாலுக்கா அலுவலகம் செல்ல வேண்டிய நிலை.. அங்கு வழிவிடுங்க என்று சொன்ன போது சின்ன பசங்க எழுந்து வழி கொடுத்தார்கள்.. எனக்கு முன்பே 4, 5 பைக் சென்றுவிட்டது. நானும் செல்ல முயன்ற போதுதான் எனக்கும் ஒரு வெள்ளை சட்டை அணிந்தவருக்கும் பிரச்சனை வந்தது.
என்ன அவ்ளோ அவசரம் என்றனர்.. நான் வேலைக்கு போகணும் என்று சொல்லிய போது, எங்களுக்கு பேனர் வைத்தால் தான் வழி கொடுப்போம் என்றனர்.. ஒரு கட்டத்தில் சிவப்பு சட்டை போட்டவர் என்னுடைய குடும்பத்தை பற்றியெல்லாம் தவறாக பேசினார். பிடிஆர் கேஸ்ல உள்ள போட்ருவேன் என்றார்.. நான் வேலைக்கு போகிறேன்.. என்னிடம் ஏன் இப்படி பேசுறீங்க என்றேன்.
அப்போது அவர்களும் தவறாக நடந்து கொண்டனர்.. நானும் தவறாக நடந்து கொண்டேன்.. காவல் நிலையம் அழைத்து சென்ற போதே என்னிடம் போலீஸ் கூறிவிட்டார்கள். அவர்கள் அப்படிதான் பிரச்சனை செய்வார்கள். நீயும் வாக்குவாதம் செய்தால், சாதி பிரச்சனையாக மாறிவிடும். அதனால் நாங்கள் அடித்துவிட்டோம்.. நீயும் அடித்தது தவறு என்று சொன்னார்கள்.
போலீஸ்காரர்களும் என்னிடம் எடுத்து கூறினார்கள். ஸ்டேஷன் அழைத்து சென்ற பின், என்னை தண்ணீர் குடி, கொஞ்ச நேரம் பெஞ்சில் உட்காரு என்றே கூறினார்கள். தம்பி, தவறாக எடுத்து கொள்ளாதே என்றே சொன்னார்கள். நான் கல்லூரி படிக்கும் போது, என்சிசியில் இருந்தேன். போலீஸாக முயற்சித்தேன்.. நடக்கவில்லை.. இப்போது ஜிம் கோச்சாக இருக்கிறேன். 2020ல் இருந்து கோச்..
வீட்டில் வருமான பிரச்சனை இருப்பதால், ஒரு சிக்கன் ஃபார்மில் பேமண்ட் சூப்பர் வைசராக இருக்கிறேன். நைட், பகலில் என்று இரு வேளைகளில் பணி செய்கிறேன். அதன்பின் காவல் நிலையத்தில் எந்த சிக்கலும் இல்லை. என்னிடம் நன்றாகவே பேசினார்கள். இனி கோபம் அடையாதே என்று அட்வைஸ் செய்தார்கள். காவலர்களாக் உனக்கு எந்த பிரச்சனையும் வராது என்றனர்.
விஷ்ணுபிரசாத் என்ற சப் இன்ஸ்பெக்டர் தான் என்னுடன் நன்றாக பேசினார். நீதிமன்றத்தில் எந்த பிரச்சனை என்று கேட்கவில்லை.. வழக்கறிஞரிடம் தான் கேட்க வேண்டும். என் மீது தவறு இல்லை என்றே ஒத்து கொண்டார்கள். அதேபோல் செய்தியாளர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.. கட்சிக்காரர்கள் ஆதரவு கூறினார்கள். என்னுடைய மனைவியிடம் பேசினார்கள். என்னுடைய குடும்பத்தினர் என்னை ஒதுக்கிவிட்டார்கள்.
அதேபோல் பொறுமை இல்லாத பையனுக்கு எப்படி வேலை கொடுக்க முடியும் என்று வேலையை விட்டு நிறுத்திவிட்டார்கள். எனக்கு சாதி மறுப்பு திருமணம் தான் நடந்தது.. வருமான பிரச்சனை உள்ளது. ஏதாவது அரசு வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும்.. அதேபோல் என் மீதான வழக்கை வாபஸ் பெற்றால் நன்றாக இருக்கும். என் மீது எந்த வழக்கும் இதுவரை இல்லை. ஜிம்மிலும் விசாரித்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
