57 ஆண்டுகளாக திருட்டு....நவீன ’இந்தியன் தாத்தா’....சில்வர் சீனிவாசன் சுவாரஸ்ய கதை
இவர் திருட ஆரம்பித்த காலத்தில் பிறந்து காவல்துறை பணிக்கு வந்த பலரும் ஓய்வுப்பெற்றுவிட்டனர். ஆனாலும் ஓய்வின்றி திருடும் தாத்தா திருடர் சில்வர் சீனிவாசன் மீண்டு கைவரிசை காட்டி சிக்கியுள்ளார். அவரது கதையைப் படித்தால் பல சுவாரஸ்யங்கள் உள்ளது. திருட்டிலும் நேர்மை, டைரி எழுதி வைத்து ரெக்கார்டு மெயிண்டெய்ன் பண்ணிய விதம் போலீஸாரால் சுவாரஸ்யமாக பேசப்படுகிறது.

நவீன இந்தியன் தாத்தா
நவின 'இந்தியன் தாத்தா' என்றவுடன் கைவிரல்களை குவித்து எதிரியை கழுத்தில் குத்தி நிலைகுலைய வைத்து மற்றவர்களை மிரளவைக்கும் டெரர் தாத்தான்னு நினைக்க வேண்டாம். அப்புசாமி, சீதாப்பாட்டி கதையில் வருவருவதுபோல் அப்புராணி தாத்தா இவர். ஆனால் அடாது பேரிடர் காலத்திலும், காலகாலமாக 7 முதலமைச்சர்கள் காலத்திலும் திருடிய வயதான முதுபெரும் திருடன் என்பதால் இந்தியன் தாத்தாவுடன் இவரை ஒப்பிட்டுள்ளேன்.

சமூக ஆர்வலர் உறவினரிடம் கைவரிசை
கடந்த 6 ஆம் தேதி வியாழக்கிழமை சென்னை குரோம்பேட்டையில் சமூக ஆர்வலர் சந்தானம் என்பவரின் உறவினர் வீட்டில் கவனத்தை திசைத்திருப்பி 2 சவரன் தங்க நகை திருடப்பட்டதாக புகார் வந்ததை அடுத்து போலீஸார் அங்குச் சென்று விசாரித்தனர். போலீஸ் விசாரனையில் பல ருசிகர தகவல்கள் வெளியாகியுள்ளது. போலீஸ் விசாரணையில் பதிவானது வருமாறு.

மணமகள் தேவை விளம்பரம்
சமூக ஆர்வலரின் உறவினர் ஒருவரின் மகனுக்கு வரன் தேடியுள்ளனர், அதுகுறித்த விளம்பரத்தில் சமூக ஆர்வலர் சந்தானத்தின் எண் கொடுக்கப்பட்டிருந்தது. இதைவைத்து சந்தானத்தை ஒரு பெரியவர் அணுகியுள்ளார். தோற்றத்தில் 70 வயதுக்கு மேல் மதிக்கத்தக்கவராக இருந்த அவரிடம் என்ன விஷயம் என சந்தானம் கேட்க மணமகள் தேவை விளம்பரம் பார்த்தேன் என் மகள் வங்கியில் பணியாற்றுகிறார் அவருக்கு பேசலாம் என வந்துள்ளேன் என்று கூறியுள்ளார் பெரியவர்.

திருடனுக்கு வாகன உதவி செய்த சமூக ஆர்வலர்
இதனால் மகிழ்ந்துபோன சந்தானம் அது என் பையன் இல்லை என் உறவினர் பையன். அவர்கள் பம்மலில் வசிக்கிறார்கள் எனக்கூறி அங்கு அந்த பெரியவரை இரு சக்கர வாகனம் மூலம் அனுப்பி வைத்துள்ளார். அவர்கள் வீட்டிலும் ஒரு பெரியவர் உங்கள் மகனுக்கு வரனுடன் வருகிறார் என்று தகவலும் கூறியுள்ளார்.
அங்குச் சென்ற பெரியவர் தான் விளம்பரத்தை பார்த்ததாகவும் தனது மகள் வங்கியில் அதிகாரியாக இருக்கிறார் அவருக்குத்தான் மாப்பிள்ளை தேடுகிறேன் எனக்கூறியுள்ளார். பின்னர் அவர் ஏதோ ஒரு படத்தை காட்ட மாப்பிள்ளை வீட்டாருக்கும் பிடித்துப்போயுள்ளது. தான் ஆருடம் கூறுவேன், என சாஸ்திரங்கள் பற்றி கூறி தனது பேச்சில் அவர்களை கவர்ந்திருக்கிறார்.

சம்பந்தம் பேசி பூஜை செய்து நகையுடன் நழுவல்
சம்பந்தம் நல்லபடியாக பேசி முடிவாகியுள்ளது. நல்ல விஷயம் பேசி முடித்துள்ளோம் சாமி முன் தட்டை மாற்றிக்கொள்வோம் என பேசி தாம்பலம் மாற்றுவதுபோல் பூஜை செய்துள்ளார். தாம்பலத்தட்டில் ஐஸ்வர்யம் இருக்கணும் எனக்கூறியதை அடுத்து மணமகன் வீட்டார் 2 சவரன் தங்கச் சங்கிலியை வைத்துள்ளனர். பின்னர் பூஜை முடிந்தது தாம்பலத்தை அசைக்காதீங்க, 3 நாள் பொறுத்துத்தான் அசைக்கணும் எனக்கூறிய அவர் விடைப்பெற்று கிளம்பிச் சென்றுள்ளார்.

கவனத்தை திசைத்திருப்பி திருட்டு
அவர் போன பின்னர் ஏதேச்சையாக பூஜை அறையில் தாம்பலத்தட்டைப்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. காரணம் தாம்பலத்தட்டில் அவர்கள் வைத்த 2 சவரன் தங்கச் சங்கிலி இல்லை. பெரியவர் அழகாக ஏமாற்றி செயினை அபேஸ் செய்து சென்றது புரிந்துள்ளது. உடனடியாக போலீஸாருக்கு தகவல் கொடுக்க அங்கு வந்த போலீஸார் சந்தானத்திடம் விசாரிக்க அவர் வீட்டின் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை எடுத்து பார்த்த போலீஸாருக்கு அது 'சில்வர் சீனிவாசன்' என தெரியவந்தது.

2018 ஆம் ஆண்டு ஊடக வெளிச்சத்திற்கு பின் தற்போது
2018 ஆம் ஆண்டு மயிலாப்பூரில் ஒரு திருட்டு வழக்கில் சிக்கிய சில்வர் சீனிவாசன் அதன்பிறகு தட்டுப்படவே இல்லை. தற்போது 4 ஆண்டுகள் கழித்து திருட்டு மூலம் ஊடக வெளிச்சத்திற்கு வந்துள்ளார். மணமகள் தேவை விளம்பரத்தை வைத்து மணமகளின் தந்தையைப்போல் நடித்து கவனத்தை திசைத்திருப்பி 2 சவரன் தங்கச் சங்கிலியை திருடிச் சென்றுள்ளார் சீனிவாசன்.

திருடர்களுக்கெல்லாம் திருடரான முதுபெரும் திருடர்
யார் இந்த சில்வர் சீனிவாசன். போலீஸ் ரெக்கார்டில் சில்வர் சீனிவாசன் என பதிவு செய்யப்பட்டுள்ள சரித்திர பதிவேடு திருடர். திருடர்களுக்கெல்லாம் மூத்த முதுபெரும் திருடர். முதல் திருட்டை 1964 ஆம் ஆண்டு தொடங்கியவர் கடந்த 2022 ஆம் ஆண்டு 2 சவரன் தங்கச் சங்கிலியை திருடியது வரை 57 ஆண்டுகளாக திருட்டில் ஈடுபட்டு வருகிறார் சில்வர் சீனிவாசன்.

1964 ஆம் ஆண்டில் முதல் திருட்டு
ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சேர்ந்த சீனிவாசன், சிறுவயதில் ஓட்டல் தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்க, அங்கு பணியாற்றிய சக ஊழியர் ஒருவர் ஆருடம் பார்ப்பதை அறிந்து அவருடனேயே பழகி ஆருடத்தை நன்றாக பழகியுள்ளார். ஆருடம் அல்லாமல் ஆன்மிகம், சுலோகங்களையும் அழகாக கற்றறிந்தவர்போல் பேசுவதில் சீனிவாசன் வல்லவர். குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே அவரது இலக்கு.

ஆருடம் சொல்வதில் ஸ்பெஷலிஸ்ட்
ஆருடம் சொல்வதில் நன்றாக வருமானம் பார்த்த சீனிவாசன் 1964 ஆம் ஆண்டு ஆந்திராவில் ஒரு விஐபி வீட்டு மகனுக்கு திருமண வரன் தள்ளிபோவதற்கு ஆருடம் பார்க்கச் செல்ல அங்குள்ள பொருட்களைப் பார்த்து மனம் மாறி வெள்ளியாலான பூஜை பொருட்களுடன் மாயமானார். முதல் திருட்டை ஆரம்பித்த அவர் ஆந்திரா மற்றும் தமிழகத்தில் தொடர்ந்து கைவரிசை காட்டியுள்ளார். இவ்வாறு அவர் மீது 250 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

ஓய்வறியா திருடர்...
ஆகப்பெரும் திருடர்களே குறிப்பிட்ட வயதுக்குப்பின் ஓய்வைத்தேட இவர் மட்டும் அடங்கா திருடனாக தமது வேலையை காட்டிக்கொண்டே இருக்கிறார். பெரிய அளவில் இவர் தண்டனைப்பெறாமல் போனதற்கு காரணம் இவர் திருடியது அதிகமாக கவனத்தை திசைத்திருப்பி வெள்ளிப்பாத்திரங்களை மட்டுமே. இதனால் இவருக்கு சில்வர் சீனிவாசன் என போலீஸார் பட்டப்பெயர் வைத்தனர். சில வீடுகளில் மட்டுமே தங்க நகைகளை திருடுவாராம்.

அதிகம் ஆசைப்படாதே
அதிலும்கூட எவ்வளவு நகைகள் இருந்தாலும் 2 அல்லது 4 சவரன் மட்டுமே திருடுவார். அதையும் தனது டைரியில் இன்னார் வீட்டில் இந்த தேதியில் இவ்வளவு திருடினேன் என ஒரு கைதியின் டைரிபோல் எழுதி பராமரித்து வந்துள்ளார். அதன் மூலம் பல குற்றங்கள் வெளி வந்துள்ளது. சிறிய அளவில் திருடுவதால் பல இடங்களில் இவர்மீது புகாரும் வராததால் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும் என்கின்றனர் போலீஸார்.

”பார்ப்பதற்கு அப்பாவி போல் இருக்கும் இவர்தான்”
"பார்ப்பதற்கு அப்பாவி போல் இருக்கும் இவர்தான்" என பிரபல சானலில் வரும் ஒரு வசனம் போல் அப்பாவி போல் காட்சித்தரும் சீனிவாசன் வயதான அப்பாவியாக நம்ம வீட்டு பெரியவராக காட்சி அளிப்பார். திருமண விளம்பரத்தைப்பார்த்து வரன் பேசுவதுபோல் பேசி கவனத்தை திசைத்திருப்பி நகை அல்லது வெள்ளிப்பொருட்களை திருடுவது இவரது வாடிக்கை. அல்லது ஆருடம் சொல்வது, தோஷம் கழிப்பதுபோல் பேசி கைவரிசை காட்டுவார்.

இவர்கள் மட்டும்தான் இலக்கு, இந்த ஏரியாவில் மட்டும் தான் ஆட்டம்
ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரிடையே கைவரிசை காட்டுவது இவரது ஸ்பெஷாலிட்டி. சென்னையில் அவர்கள் வசிக்கும் ஏரியாக்களில் மட்டுமே கைவரிசை காட்டுவார். காரணம் அவர்கள் பேசும் ஸ்டைலில் பேசுவது, ஆருடம், சுலோகம் என வீட்டில் உள்ளவர்களின் அன்பை கொஞ்ச நேரத்தில் பெற்றுவிடுவார். அப்புறம் என்ன வீட்டில் உள்ள பெரியவர் போல் ஆகிவிடுவார். சகலத்தையும் அறிந்துக்கொள்வார். அவருக்கு விருந்து வைத்து சிலர் அவர் கதையைக் கேட்டு மாமா எதுக்கு இந்த வயதில் வெளியில் அலைகிறீர்கள் இங்கேயே தங்கிக்கொள்ளுங்கள் என இரக்கப்பட்டு தங்க வைக்க சில நாட்களில் அவர்கள் வீட்டில் கைவரிசைக்காட்டிவிட்டு கம்பி நீட்டிவிடுவார் சீனிவாசன்.

கையில் பணம் இருக்கும் வரை அடுத்தத்திருட்டு இல்லை
திருடியதை விற்று செலவாகும்வரை சும்மா இருப்பார் பின்னர் அடுத்த திருட்டு, அதிகம் இல்லை ஓரிரண்டு சவரன் நகைகள், வெள்ளிப்பாத்திரங்கள் மட்டுமே. கடந்த 2018 ஆம் ஆண்டு மைலாப்பூரில் கடைசியாக சிக்கினார். சிறைக்கு அனுப்பப்பட்டப்பின் வெளியில் வந்தவர் என்ன ஆனார் என தெரியாத நிலையில் தற்போது வெளிப்பட்டுள்ளார். சிறையிலும் இவர் ஆருடம் சொல்லியே வார்டர்களை வசப்படுத்திவிடுவாராம்.

எல்லோரும் எனக்கு பச்சா, 57 ஆண்டு அனுபவம்
திருடர்கள் பல ரகம் சில்வர் சீனிவாசன் அதில் ஒரு ரகம். இவர் திருட ஆரம்பித்த காலத்தில் 2 வயது சிறுவனாக இருந்த சைலேந்திரபாபு இப்ப டிஜிபி. அவரும் அடுத்த ஆண்டு ரிட்டையர் ஆகப்போகிறார், அதுபோல் சீனிவாசன் பல காவல் அதிகாரிகளை தன் வாழ் நாளில் பார்த்துவிட்டார். பலர் ரிட்டையராகிவிட்டனர், பலர் மறைந்துவிட்டனர். ஆனால் சீனிவாசன் கின்னஸ் சாதனையில் பதிவாகும் அளவுக்கு தள்ளாத வயதிலும் இந்தியன் தாத்தா போல் திருடனாக வலம் வருகிறார். சீனிவாசனுக்கு தற்போது 90 வயது இருக்கும் என்கின்றனர் போலீஸார்.












Click it and Unblock the Notifications