நிரம்பபோகும் வைகை அணை.. தேனி, மதுரை, திண்டுக்கல் உள்பட 5 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை.. உஷார்
தேனி: வைகை அணையின் நீர்மட்டம் 66.01 அடியாக உயர்ந்ததால் இன்று (ஞாயிறு) அதிகாலை முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் வைகை அணைக்கான நீர்வரத்து என்பது 3.5 மடங்கு வரை அதிகரித்துள்ளதால் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. இந்த அணை என்பது தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.

இந்த அணையின் மொத்தம் 71 அடி உயரம் கொண்டது. ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை காலத்தில் வைகை அணை என்பது முழு கொள்ளளவை எட்டும்.
இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக வைகை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் மூலவைகை, முல்லைப் பெரியாறு உள்ளிட்டவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வைகை அணைக்கான நீர்வரத்து என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் என்பது கிடுகிடுவென உயர தொடங்கி உள்ளது.
இன்று அதிகாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் என்பது 66.01 அடியை எட்டியிருந்தது. அணை முழு கொள்ளளவை எட்டி இன்னும் 5 அடி மட்டுமே பாக்கி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதோடு நேற்று விநாடிக்கு 885 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 3 ஆயிரத்து 177 கனஅடியாக அதிகரித்துள்ளது.
இதனால் தொடர்ந்து அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் பாதுகாப்பு கருதி முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் கரையோரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி நீர்வளத்துறை சார்பில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்னும் சில நாட்கள் தேனி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் விரைவில் வைகை அணை முழு கொள்ளளவை எட்டி வாய்ப்புள்ளது. இதனால் அதிகாரிகள் 24 மணிநேரமும் நீர்வரத்து குறித்த தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போது முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக அணை நீர்மட்டம் 68.5 அடியை எட்டியதும் 2ம் கட்ட அபாய எச்சரிக்கையும், அதன்பிறகு 69 அடியை எட்டியும் 3ம் கட்ட எச்சரிக்கையும் விடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வைகை கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications