ஆட்டம் ஆண்டிப்பட்டியில் ஆரம்பம்.. திமுகவுக்கு வந்த தலைவலி.. தேனி அதிமுக, அமமுகவுக்கு சூப்பர் சான்ஸ்!
தேனி: ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி வரலாற்றை பார்த்தால், திமுகக்கு எளிதான தொகுதி கிடையாது.. மறைந்த கருணாநிதி காலத்திலிருந்தே, இங்கு திமுக தொடர்ச்சியாக வெற்றி பெற்ற தொகுதி என்று சொல்ல முடியாது... தற்போது ஒன்றிணைந்துள்ள என்டிஏ கூட்டணிக்கு எதிராக, திமுக ஆண்டிப்பட்டியில் தன்னுடைய கொடியை நாட்டுமா? அமமுக, அதிமுக கட்சிகளின் ஓட்டு வங்கியை தகர்க்குமா? சற்று சுருக்கமாக இங்கே பார்ப்போம்..
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, விஐபிக்களின் தொகுதி என பெயர் பெற்றது.... ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி என்றாலே அரசியல் ரீதியாக முதலில் நினைவுக்கு வருவது அதிமுகதான்... எம்ஜிஆர் காலத்திலிருந்தே இந்த தொகுதி அதிமுகவின் வலுவான கோட்டையாகவே இருந்து வந்துள்ளது.. 1984ல் எம்ஜிஆர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஆண்டிப்பட்டி அதிமுகவுக்கா
தொடர்ந்து 2002, 2006ல் ஜெயலலிதா நின்று வெற்றி பெற்றார்... அவர்களுக்கு பிறகு, அதிமுக சார்பில் தங்கதமிழ்செல்வன் 2001, 2011, 2016ல் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் வென்றுள்ளார்...
கிராமப்புற ஆதிக்கம், பாரம்பரிய குடும்ப வாக்குகள், உள்ளூர் தலைவர்கள் உருவாக்கிய நெட்வொர்க் போன்றவை எல்லாம் சேர்த்து ஆண்டிப்பட்டியில் அதிமுகக்கு ஒரு உறுதியான அடிப்படை வாக்கு வங்கியை உருவாக்கின. அந்த வாக்கு வங்கி இன்று வரை முழுமையாக கரைந்துவிடவில்லை என்பதே அரசியல் நிஜம்.
இதற்கு எதிர்புறமாக, திமுகக்கு ஆண்டிப்பட்டி எப்போதும் எளிதான தொகுதியாக இருந்ததில்லை. அன்று கலைஞர் காலத்திலிருந்தே இங்கு திமுக தடுமாறியே வந்தது. சமூக சமநிலைகள், உள்ளூர் அரசியல் கணக்குகள் போன்றவை பெரும்பாலும் திமுகவுக்கு எதிராகவே செயல்பட்டன..
அமமுக, அதிமுக ஓட்டு வங்கி
கடந்த 2021-ல் அமமுகவுக்கு தங்க தமிழ்செல்வன் சென்றபிறகுதான் ஆண்டிப்பட்டி அதிமுகவுக்கு ஆட்டம் காண துவங்கியது.. அதிமுகவின் பாரம்பரிய அரசியல் படிமத்தில் ஒரு சின்ன விரிசலை ஏற்படுத்தியது... அதிமுக உட்பிளவு, ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை போன்றவை சேர்ந்து திமுக வெற்றிக்கு வழிவகுத்தன. இதனால் ஆண்டிப்பட்டி இனி அதிமுகவின் முழுமையான கோட்டை அல்ல என்ற கருத்து உருவானது.
அதற்காக அதிமுகவுக்கான ஓட்டு வங்கி ஆண்டிப்பட்டியில் குறைந்துவிட்டது என்று சொல்ல முடியாது.. அமமுக தனித்து பெரிய ஒட்டு வங்கியைக் கொண்ட கட்சியாக இல்லாவிட்டாலும், அதிமுக வாக்குகளை பாதிக்கும் அளவுக்கு பங்கு கொண்டுள்ளது.. அப்படி அதிமுகவின் ஓட்டுக்கள் அமமுகவுக்கு சென்று வாக்கு சிதறும்போது, அது திமுகவுக்கே சாதகமாக அமைந்துவிடும்.. இதுதான் 2021 தேர்தலில் திமுகக்கு உதவியது..
ஆனால் வரப்போகும் தேர்தலில் அதிமுக, அமமுக சேர்ந்து களமிறங்க போகிறார்கள்.. பிரிந்திருந்த வாக்குகள் எல்லாம் ஒருங்கிணையும்... அதிமுகவின் பாரம்பரிய அடிப்படை வாக்குகளுடன், அமமுக வைத்திருக்கும் சசிகலா சார்ந்த குடும்ப மற்றும் சாதி ஆதரவு சேர்ந்துவிட்டால் அது நிச்சயம் என்டிஏ கூட்டணிக்கு பலம்தான்.
ஆனாலும் ஒரு சிக்கல்?
ஆண்டிபட்டியில் தினகரன் களமிறங்க திட்டமிட்டு, கடந்த ஒரு வருடத்துக்கு முன்பே அங்கு வீடு பிடித்து அமமுக நிர்வாகிகள் பணியாற்றி வருகிறார்கள்.. இதுவரை அமைதியாக இருந்த அதிமுகவினர், இப்போது இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கியிருப்பதாக தெரிகிறது..
"கடந்த தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் தோற்றோம். இம்முறை வெற்றி வாய்ப்பு இருப்பதால், தொகுதியை தினகரனுக்கு விட்டுக்கொடுக்காமல் அதிமுகவே போட்டியிட வேண்டும்" என்கிறார்கள் அதிமுகவினர்.
மறுபுறம், அதிமுக கூட்டணியில் தினகரன் போட்டியிட்டால் வெற்றி உறுதி என்ற நம்பிக்கையில் அமமுகவினர் உற்சாகமாக உள்ளனர். எனவே, ஆண்டிப்பட்டியை விட்டுக் கொடுக்க போவது யார் என்று தெரியவில்லை..
ஈகோ, தலைமை குழப்பம், களத்தில் வேலை செய்யாத நிலை இருந்தால், பெயருக்கு மட்டும் கூட்டணி போன்றவை இருந்தால், அந்த பலன் முழுமையாக என்டிஏவுக்கு கிடைக்காது... வேட்பாளர் யார், உள்ளூர் தலைவர்கள் ஒத்துழைக்கிறார்களா என்பதே முடிவை தீர்மானிக்கும்.
ஆண்டிப்பட்டி திமுகவுக்கு கிடைக்காதா
எப்படி பார்த்தாலும் அமமுக, அதிமுக இணைந்துள்ளது திமுகவுக்கு சோதனைதான்... அப்படியானால் ஆண்டிப்பட்டி திமுகவுக்கு கிடைக்காதா?
கிடைக்கலாம்... ஆனால் அது அவ்வளவு சுலபம் இல்லை... வேட்பாளர் தேர்வு, அந்த வேட்பாளர் எப்போதும் களத்தில் இருக்கிறவர் என்ற இமேஜ், கடந்த 5 ஆண்டுகளில் செய்த களப்பணிகள், உள்ளூர் பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தும் அரசியல் போன்றவை சரியாக நடந்தால் திமுகவுக்கு நிறைய வாய்ப்புண்டு..
கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட சின்ன சின்ன கட்சிகள்கூட வாக்கு பெட்டிவரை இறங்கி வேலை செய்ய வேண்டும்.. இல்லாவிட்டால் ஆண்டிப்பட்டி மீண்டும் அதிமுக பக்கம் சாயும் வாய்ப்பே அதிகம்... பொறுத்திருந்து பார்ப்போம்...!!!












Click it and Unblock the Notifications