அண்ணன் சீர்.. 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை! விண்ணப்பிப்பது எப்படி? விதிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
சென்னை: அண்ணன் சீர் திட்டத்திற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. திருமணத்திற்கான மணமக்கள் குறைந்தபட்ச சட்டப்பூர்வ வயதை நிறைவு செய்திருக்க வேண்டும், மணப்பெண்னின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும், திருமணத் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பிருந்து திருமண நாள் வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அண்ணன் சீர் திட்டத்தில் திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், பட்டு புடவை வழங்கப்படும்.
தமிழக முதல்வர் விஜய் சட்டமன்ற தேர்தலின் போது தனது தேர்தல் வாக்குறுதியாக அண்ணண் சீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்து இருந்தார். அதன்பிறகு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், அண்ணன் சீர் திட்டம் செய்ல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

இதன்படி அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் யார் யாருக்கெல்லாம் 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை கிடைக்கும் என்பது தொடர்பான விண்ணப்பிக்கும் நடைமுறை, தகுதி, வழிகாட்டுதல்கள் உள்ளிட்டவை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
யாரெல்லாம் பயன்பெறலாம்?
* திருமணத்திற்கான மணமக்கள் குறைந்தபட்ச சட்டப்பூர்வ வயதை நிறைவு செய்திருக்க வேண்டும்.
* மணப்பெண்னின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
* குடும்ப அட்டையில் மணப்பெண்ணின் பெயர் இடம் பெற்று இருக்க வேண்டும்.
* திருமண நிதியுதவிக்கான பிற அரசுத் திட்டங்களில் பயன் பெறாதவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்
* திருமணத் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பிருந்து திருமண நாள் வரை விண்ணப்பிக்கலாம்.
* 05.10.2026 முதல் 15.01.2027 திருமணங்களுக்கு, 15.01.2027 வரை விண்ணப்பிக்கலாம்.
* அரசு இ-சேவை மையங்கள் அல்லது www.tnesevai.tn.gov.in @ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களுக்கான செயல்முறை
* விண்ணப்பதாரரின் ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் தகுதி சரிபார்க்கப்படும்.
* தகுதியுடைய விண்ணப்பதாரர் திருமண பத்திரிகையை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
* தகுதியான ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் தனித்துவ அடையாள எண் வழங்கப்படும்.
* விண்ணப்ப நிலை குறித்து குறுஞ்செய்தி, வாடஸ் ஆப் மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
* திருமணம் நடைபெற்ற 15 நாட்களுக்குள், திருமணத்தைத் தமிழ்நாட்டில் பதிவு செய்ய வேண்டும்.
* தகுதி இல்லாத காரணத்தால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால், அதற்குரிய காரணம் தெரிவிக்கப்படும்.
* விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு வழங்கப்படும்.. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?
முன்னதாக ஆதார் எண் இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதல்களையும் தமிழக அரசு வெளியிட்டு இருந்தது. இதன்படி, ஆதார் எண் இல்லாத பெண்கள் அல்லது ஆதாருக்கு விண்ணப்பிக்காமல் இருப்பவர்கள் ஆதார் பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆதார் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து எண் ஒதுக்கப்படும் வரை, மாற்று அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்.
ஆதார் பதிவு அடையாளச்சீட்டு கொடுக்கலாம். அல்லது, பான் கார்டு, பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, வோட்டர் ஐடி, 100 நாள் வேலை உறுதி திட்டத்திற்கான புத்தகம், வங்கி கணக்கு புத்தகம், ஒட்டுநர் உரிமம், அரசு அதிகாரி அல்லது வட்டாட்சியர் வழங்கிய புகைப்பட அடையாள சான்றிதழ், புகைப்படத்துடன் கூடிய ஐடி கார்டு உள்ளிட்ட ஏதேனும் ஒன்றை வழங்கி விண்ணப்பிக்கலாம்.


Click it and Unblock the Notifications
