சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு! மலைப்பாதையில் இரவு பயணத்தை தவிர்க்கவும்! வெளியான வார்னிங்!
தேனி: கனமழை காரணமாக குமுளி மலைப்பாதை, கம்பம் மெட்டு போடிமெட்டு, மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு செல்லும் சாலையில் மரம் முறிவு ஏற்பட வாய்ப்புள்ளது எனவும், இதனால் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மலைச் சாலைகளில் இரவு நேர பயணத்தை தவிர்க்குமாறு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா கூறியுள்ளார்.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று முன் தினம் இரவு முதல் பெய்த தொடர் கனமழை காரணமாக தமிழக - கேரளா எல்லையை இணைக்கும் முக்கிய வழித்தடமான மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் பல பகுதிகளில் நிலச்சரிவும், பாறைகள் சாலைகளிலும் விழுந்தன.

இதனால் இந்த சாலையில் வழியாகச் செல்லும் குமுளி மலைப் பாதையில் வன காளியம்மன் கோயிலை அடுத்துள்ள வளைவில் இரண்டு மரங்கள் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே விழுந்தன.
இதன் காரணமாக தேனி மாவட்டத்திலிருந்து குமுளி மலைச்சாலை வழியாக கேரளா செல்லும் வாகனங்கள் மற்றும் கேரளாவில் இருந்து தேனி மாவட்டம் திரும்பும் வாகனங்களும் நீண்ட நேரம் மழைச்சாலையில் அணிவகுத்து நின்றன.போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. சபரிமலை செல்வதற்காக அவ்வழியாக வந்த ஐயப்ப பக்தர்களின் வாகனம் தற்காலிகமாக கம்பம்மெட்டு மலைச் சாலை வழியாக திருப்பி விடப்பட்டது.
பின்னர் நெடுஞ்சாலை துறையினர் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையினர் இணைந்து சாலையில் விழுந்த மரங்களை வெட்டி அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர். சுமார் மூன்று மணி நேரத்திற்கு பின்னர் சாலையில் விழுந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. இதனால் இரு மார்க்கங்களிலும் நீண்ட நேரம் காத்திருந்த வாகனங்கள் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
இந்நிலையில், கனமழை காரணமாக பாதுகாப்பு நலன் கருதி வாகன ஓட்டிகள், சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மலைச் சாலைகளில் இரவு நேர பயணத்தை தவிர்க்குமாறு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா கூறியுள்ளார். இதுதொடர்பாக தேனி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தேனி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியாக கன மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களுக்கு தேவையான எச்சரிக்கை விழிப்புணர்வும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது. கனமழை காரணமாக குமுளி மலைப்பாதை, கம்பம் மெட்டு போடிமெட்டு, மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு செல்லும் சாலையில் மரம் முறிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, இவ்வழியாக பயணம் மேற்கொள்ளும் வாகன ஓட்டிகள் மற்றும் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் முடிந்த வரை இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்படும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்” என மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications