கார்ப்பென்டர் செந்தில்குமாருக்கு வந்த போன் கால்.. தேனி ஆண்டிப்பட்டி தெருவில் சென்றவருக்கு அக்கிரமம்
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மகளின் காதல் திருமணத்தால் ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை, அநியாயமாய் ஒரு கொலையில் முடிந்துள்ளது. காதல் திருமண விவகாரத்தில் மூண்ட குடும்பப் பகை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தேனி பகுதியில் தச்சுத் தொழிலாளி ஒருவர் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொடூரமாகக் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. என்ன தான் நடந்தது தேனி ஆண்டிப்பட்டியில்?
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே உள்ள தங்கம்மாள்புரம் பொன்நகர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (47). தச்சு வேலை செய்து வந்த இவருக்கு தேவகனியா என்ற மனைவியும், 4 மகள்கள், ஒரு மகனும் உள்ளனர்.

தேனி கார்ப்பெண்ட்டர்
செந்தில்குமாரின் இரண்டாவது மகள் கீர்த்திகா, தனது உறவினரான சிவக்குமாரின் மூத்த மகன் ரூபனை காதலித்து வந்துள்ளார்.. இவர்கள் காதலுக்கு குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பியது. உடனே 2 பேருமே கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர். பிறகு கேரளாவுக்கு சென்று அங்கேயே வசித்து வருகின்றனர். இந்த திருமணத்தில் 2 குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் இரு தரப்பினரும் முன்விரோதத்தில் இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் சிவக்குமாரின் இளைய மகன் யோகேஷ்வரன், செந்தில்குமார் குடும்பத்தினருக்கு போன் செய்துள்ளார். அப்போது, "நாங்கள் ஊருக்கு வரும்போது எங்களுடன் பிரச்சனை செய்தால் உங்கள் அனைவரையும் கொலை செய்து விடுவேன்" என மிரட்டல் விடுத்தாராம்.
போனில் கொலை மிரட்டல்
இந்த போன் மிரட்டலுக்கு பிறகு செந்தில்குமார் வீட்டில் இருந்து வெளியேறி, சிவக்குமார் வசிக்கும் தெருவுக்கு நடந்து சென்றுள்ளார். அங்கு சிவக்குமார், அவரது மனைவி அனிதா, மகன் யோகேஷ்வரன் ஆகியோர் இருந்துள்ளனர். அவர்களுக்கும் செந்தில்குமாருக்கும் இடையே முதலில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில், இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது.
அப்போது சிவக்குமாரும், அவரது மகன் யோகேஷ்வரனும் சேர்ந்து செந்தில்குமாரை கத்தியால் பலமுறை குத்திவிட்டார்கள்.. இதில் அவரது பின் கழுத்து, நெஞ்சு, நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் அதிகமாக வெளியேறியதால் அவர் அங்கேயே சுருண்டு கீழே விழுந்தார்.
செந்தில்குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். இந்த சண்டையில் சிவக்குமார், யோகேஷ்வரன், அனிதா ஆகிய 3 பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
ஆண்டிப்பட்டி பரபரப்பு
இதையடுத்து அங்கிருந்தவர்கள் செந்தில்குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இதனிடையே காயமடைந்த சிவக்குமார், யோகேஷ்வரன், அனிதா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
செந்தில்குமாரின் மனைவி தேவகனியா அளித்த புகாரின் பேரில் கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகளின் காதல் திருமணத்தால் தொடங்கிய குடும்பப் பிரச்சினை, தந்தையின் உயிரிழப்பில் முடிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Click it and Unblock the Notifications
