தேனியில் கல்லூரி பேராசிரியையின் 2 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு.. விசிக பிரமுகர் மீது எஸ்பியிடம் புகார்
தேனி: தேனி கே.ஆர்.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. இவர் கல்லூரி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருக்கு பெரியகுளம் கீழவடகரை பகுதியில் இரண்டு ஏக்கர் விவசாய நிலம் இருக்கின்றது. தனக்கு சொந்தமான 2 ஏக்கர் விவசாய நிலத்தினை தாமரைகுளம் அருகே பங்களாபட்டியைச் சேர்ந்த சண்முகவேல் என்பவருக்கு விவசாயம் செய்வதற்காக ஒரு ஆண்டிற்கு குத்தகைக்கு விட்டிருந்தார் . இதனை விசிக கட்சி பிரமுகர் ஆக்கிரமிப்பு செய்ததாக கல்லூரி பேராசிரியை சாந்தி என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு நிலத்தை காலி செய்ய மறுப்பது என்பது பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. சில அரசியல் பிரமுகர்கள் வேண்டுமென்றே ஆக்கிரமிப்பு செய்து பணம் பறிக்க முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டுகளை பார்த்திருப்பீர்கள். இதுபோன்ற விவகாரங்களில் உண்மை என்னவென்று போலீசார் விசாரிப்பார்கள்.

உண்மையிலேயே ஆக்கிரமிப்பு முயற்சிகள் நடந்தால் நில அபகரிப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்து உடனே சிறையில் அடைப்பார்கள். அதேநேரம் உங்கள் நிலத்தை கடைசியாகப் பார்த்ததற்கும், ஆக்கிரமிப்பு ஏற்பட்டதற்கும் இடையேயான காலம் 12 வருடங்களுக்கு மிகாமல் இருந்தால் மட்டுமே, உங்கள் நிலத்தை எளிதில் மீட்க முடியும். இல்லாவிட்டால் நடைமுறையில் சிக்கல் உள்ளது. அதேநேரம் இருவருக்கும் நில உரிமையில் பங்கு உள்ளது.. யாருக்கு அந்த நிலம் என்பதில் சிக்கல் நீடிக்கிறது. நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு உள்ளது என்றால், தீர்ப்பு வரும் வரை சிவில் வழக்குகளில் போலீசார் தலையிட மாட்டார்கள். தேனியில் நடந்த பிரச்சனை பற்றி பார்ப்போம்.
தேனி கே.ஆர்.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி இவர் கல்லூரி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு பெரியகுளம் கீழவடகரை பகுதியில் இரண்டு ஏக்கர் விவசாய நிலம் இருக்கின்றது. தனக்கு சொந்தமான 2 ஏக்கர் விவசாய நிலத்தினை தாமரைகுளம் அருகே பங்களாபட்டியைச் சேர்ந்த சண்முகவேல் என்பவருக்கு விவசாயம் செய்வதற்காக ஒரு ஆண்டிற்கு குத்தகைக்கு விட்டிருந்தார்.
இந்த நிலையில் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த விசிக கட்சி நிர்வாகி மூர்த்தி என்பவர் சாந்தியின் தோட்டத்தை ஆக்கிரமித்து விவசாயப் பணிகளை மேற்கொள்வதாகவும் இதனால் குத்தகைக்கு எடுத்த சண்முகவேல் விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் நிலத்தின் உரிமையாளர் சாந்தியிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சாந்தி தனது நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்த விசிக கட்சி நிர்வாகி மூர்த்தியிடம் கேட்கச் சென்ற போது அவருக்கு ஆதரவாக அசோகன் மற்றும் ராஜன் ஆகியோர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்தார்.
இதுகுறித்து பெரியகுளம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய பேராசிரியை சாந்தி, தேனி மாவட்ட காவல் காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தனது நிலத்தில் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிப்பு செய்த விசிக கட்சி நிர்வாகி மூர்த்தி மற்றும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்த அசோகன் மற்றும் ராஜன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தனது நிலத்தினை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications