தேனி போல தென்காசியிலும் நடந்துடுமோ? அணைகளை பாதுகாக்க எஸ்பியிடம் ஓடிய சங்கரன் கோவில் எம்எல்ஏ
தென்காசி: தேனி போல தென்காசியிலும் நடந்துடுமோ? தவெக தேனி சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, தென்காசி அணைகளுக்குக் கூடுதல் பாதுகாப்பு கோரி சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. திலீபன் ஜெய்சங்கர் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள கருப்பாநதி, அடவிநயினார், குண்டாறு, ராமநதி மற்றும் கடனாநதி ஆகிய ஐந்து அணைகளுக்கும் உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என அதிமுகவை சேர்ந்த சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திலீபன் ஜெய்சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எஸ்பியிடம் மனு
இதுதொடர்பாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அவர் அளித்துள்ள மனுவில், சமீபத்தில் தேனி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பான நிகழ்வின்போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் அசம்பாவித சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, அத்தகைய சூழல் நீர்நிலைகளில் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தென்காசி எம்எல்ஏ கோரிக்கை
மேலும், அணைப் பகுதிகளில் சமூக விரோதிகள் மற்றும் பொதுமக்கள் அத்துமீறி நுழைவதைத் தடுக்கவும், முக்கிய நீர்நிலைகளைப் பாதுகாக்கவும் நிரந்தரக் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அத்துடன், சங்கரன்கோவில் தொகுதியில் திருட்டு மற்றும் சமூக விரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள முக்கியப் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும், இரவு நேரக் காவல் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தவும் அந்த மனுவில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேனி சோத்துப்பாறை அணையில் என்ன நடந்தது
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 10 கிமீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சோத்துப்பாறை அணை அமைந்திருக்கிறது . கொடைக்கானல் பேரிஜம் ஏரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் வாரகநதி தண்ணீர் தான் இதன் நீராதாரம், 126 அடி உயரம் கொண்ட சோத்துப்பாளை அணையின் மூலம் மேல்மங்கலம், ஜெயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 2,865 ஏக்கர் நிலங்களும், புதிய ஆயக்கட்டு பகுதிகளான கைலாசப்பட்டி, லட்சுமிபுரம் உள்ளிட்ட இடங்களில் 1,040 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. இதற்காக தனித்தனியாக விவசாய வாய்கால்கள் உள்ளன.
முழு கொள்ளவை எட்டியது
கடந்த மாதம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்டுகிறது. இந்த நிலையில் வாய்க்கால் வழியாக வெளியேறும் உபரிநீரை புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.
அணை மதகை திறந்தனர்
இதைத்தொடர்ந்து த.வெ.க. நிர்வாகிகள் மற்றும் சில விவசாயிகள் இணைந்து அணையில் இருந்து சுமார் 1½ கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கான மதகை நேற்று முன்தினம் திறந்துவிட்டார்கள். அப்போது தண்ணீரில் மலர் தூவி வணங்கியதுடன் அதனை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
போலீசில் புகார்
இது குறித்து பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அன்பரசன் கூறுகையில், 'சோத்துப்பாறை அணை கடந்த மாதம் 23-ந்தேதி நிரம்பியது. ஆனால் தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்ட பிறகே முறையாக தண்ணீர் திறக்கப்படும். அனுமதி பெறாமல் புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெரியகுளம் தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம்' என்றார். இதேபோல், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மனோஜ்குமாரும் புகார் அளித்துள்ளார். இது குறித்து தென்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.




Click it and Unblock the Notifications
