தேனியில் பூஜையில் விழுந்த புதுக்கோட்டை சித்திபவுசியா.. 'டபுள்' தங்கம் சந்தோஷத்தில் பெரிய ட்விஸ்ட்
தேனி: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சேரந்த அன்வர் அலி என்பவருடைய மனைவி சித்திபவுசியா என்பவரிடம் பூஜை செய்தால் பணம், நகை இரட்டிப்பாகும் என்று தேனியைச் சேர்ந்தவர்கள் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர். அதனை நம்பி தேனி வந்த சித்திபவுசியாவிடம் சிலர், , தங்களிடம் மந்திரக் கற்கள் உள்ளதாகவும், அதை வைத்து பூஜை செய்தால் பணம், நகை இரட்டிப்பாகும் என்று நம்ப வைத்துள்ளனர். அதன்படி நடந்த பூஜைக்கு பின் நகை, பணம் பறிக்கப்பட்டிருக்கிறது.சதுரங்கவேட்டை படம் பாணியில் நடந்த மோசடி பற்றி பார்ப்போம்.
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா கீரனூரைச் சேர்ந்த அன்வர்அலி என்பவருடைய மனைவி சித்திபவுசியாவுக்கு 55 வயது ஆகிறது. இவர் தனது கணவரை பிரிந்து கடந்த 25 ஆண்டுகளாக தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார்கள். இவருக்கு, கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தேனி மாவட்டம், வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி தெருவைச் சேர்ந்த 36 வயதாகும் நாகராஜ் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் மூலமாக தேனி சுக்குவாடன்பட்டியைச் சேர்ந்த 56 வயதாகும் ஆண்டவ உட்பட சிலரின் அறிமுகம் கிடைத்திருக்கிறது.

அவருடைய குடும்ப சூழலை கேட்டு தெரிந்து கொண்ட ஆண்டவர் உட்பட சிலர், தங்களிடம் மந்திரக் கற்கள் உள்ளதாகவும், அதை வைத்து பூஜை செய்தால் பணம், நகை இரட்டிப்பாகும் என்று ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினாராம். அதை நம்பிய சித்திபவுசியா, இந்த பணம் இரட்டிப்பு பூஜையில் பங்கேற்க கடந்த மாதம் புதுக்கோட்டையில் இருந்து தேனிக்கு வந்தார். அவருடன், வெங்கடேசன், பெரியண்ணா ஆகிய இருவரும் பூஜையில் பங்கேற்க வந்தனர். அவர்களை ஆண்டவர், தேனி அருகே கிருஷ்ணா நகரில் தான் வசிக்கும் மற்றொரு வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர் ஒரு வண்ணக் கல்லை கட்டி, அது தான் மந்திரக் கல் என்றும், அதை வைத்து பூஜை செய்யப் போவதாகவும் கூறியிருக்கிறார்.
அதன்படி, பூஜை நடந்தது. பூஜையின் போது, அவர்களிடம் இருக்கும் நகை, பணம், செல்போன் ஆகியவற்றை மந்திரக்கற்கள் முன்பு வைக்குமாறு ஆண்டவர் கூறினாராம். உடனே சித்திபவுசியா தன்னிடம் இருந்த 2 பவுன் நகை, ₹50 ஆயிரம், செல்போன் ஆகியவற்றை அங்கு வைத்தார். வெங்கடேசன் ₹5 ஆயிரம் மற்றும் செல்போனையும், பெரியண்ணா ₹1,500 மற்றும் செல்போனையும் வைத்தனர். பூஜை முடிந்து மறுநாள் வந்து இரட்டிப்பான பணம், நகைகளை பெற்றுக்கொள்ளுமாறு கூறி அவர்களை ஆண்டவர் உள்ளிட்ட சிலர் அனுப்பி வைத்திருக்கிறார்.
மறுநாள் சித்தி பவுசியா, ஆண்டவரின் வீட்டுக்குச் சென்று பணம், நகைகளை கேட்டார். அப்போது அவரும், அவருடன் இருந்த சிலரும் பணம், நகைகளை கொடுக்க மறுத்ததுடன், இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினாராம். இது குறித்து பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை சித்திபவுசியா அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, ஆண்டவர், நாகராஜ், தேனியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (26) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும், ஆண்டவர் மீது தேனி, அல்லிநகரம், வீரபாண்டி போலீஸ் நிலையங்களில் இதுபோன்று, 'சினிமா பாணியில் அரங்கேற்றிய பல மோசடி வழக்குகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. சில வழக்குகளில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த நிலையில், மீண்டும் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. இதன் பின்னணியில் உள்ள மற்றும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications