மூணாறு சுற்றுலா.. தேனியில் கோலமாவு டப்பாவால் நாமக்கல் இளைஞருக்கு ராஜ வாழ்க்கை.. இறுதியில் ட்விஸ்ட்
தேனி: தேனி பழனிசெட்டி பகுதியில் வசித்து வரும் கண்ணன் என்ற வியாபாரி வீட்டில், வீட்டின் சாவியை திறந்து 23 சவரன் தங்க நகைகளை திருடியிருக்கிறார் நாமக்கலைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். மூணாறு சுற்றுலா சென்றுவிட்டு தேனி வழியாக ஊர் திரும்பிய நாமக்கல் இளைஞர், கை செலவுக்கு கூடுதல் பணம் வேண்டும் என்பதற்காக வீடுகளை நோட்டம் விட்டுள்ளார். அப்போது வீடு பூட்டியிருந்த நிலையில், சாவியும் பக்கத்திலேயே இருந்ததால், கைவரிசை காட்டியுள்ளார்.. சிக்கியது எப்படி என்று பார்ப்போம்.
தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி சவுடேஸ்வரி நகரை சேர்ந்த 35 வயதாகும் கண்ணன் என்பவர் தேனி சுப்பன் தெருவில் மோட்டார் பொருட்கள் விற்பனை கடை வைத்திருக்கிறார். இவருடைய மனைவி சங்கீதா. கடந்த ஜனவரி 3-ந்தேதி சங்கீதா தனது வீட்டை பூட்டிவிட்டு சாவியை, வீட்டுக்கு வெளியே உள்ள கோலப்பொடி பாக்ஸில் வைத்துவிட்டு கோவிலுக்கு சென்றுள்ளார். கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு சங்கீதா திரும்பி வந்தபோது சாவி அதே இடத்தில் இருந்தது. கதவை திறந்து உள்ளே சென்றபோது வீட்டுக்குள் விளக்குகள் எரிந்த நிலையில் இருந்தன.

போகும் போது அணைத்து வைக்கப்பட்டிருந்த லைட்டுகள் எரிந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. சந்தேகம் அடைந்த சங்கீதா பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த 23 பவுன் நகைகள் திருடுபோயிருந்தது. யாரோ மர்ம நபர் சாவியை எடுத்து வீட்டை திறந்து நகைகளை திருடிவிட்டு தப்பி ஓடியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கணவர் கண்ணனுக்கு தகவல் கொடுத்தார். அவர் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பழனிசெட்டிபட்டி போலீசார் சேகரித்து ஆய்வு செய்தனர். அதில் ஒரு வாலிபர் அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய நபரை பிடிக்க தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவிட்டார். அதன்பேரில், கூடுதல் எஸ்பி சுகுமார் மேற்பார்வையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், செல்வம், ஏட்டு வெற்றிவேல் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கேமராவில் பதிவான நபர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பண்ணாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுந்தர்ராஜ் என்ற தனுஷ்கோடி (29) என்பது தெரியவந்தது.
இதையடுத்து தேனி தனிப்படை போலீசார் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்துக்கு விரைந்தனர். அங்கு சுந்தர்ராஜ் என்ற தனுஷ்கோடியை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் நகைகள் திருடியதை ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து, திருடு போன நகைகளை போலீசார் கைப்பற்றினார்கள்.
பின்னர் அவரை கைது செய்து பழனிசெட்டிபட்டிக்கு நேற்று அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில், சுந்தர்ராஜ், கேரள மாநிலம் மூணாறு சென்று திரும்பியபோது செலவுக்கு பணம் குறைவாக இருந்ததாம். இதனால், திருட முடிவு செய்து பழனிசெட்டிபட்டி சவுடேஸ்வரி நகர் பகுதியில் சுற்றித் திரிந்தாராம். அப்போது சம்பவம் நடந்த வீட்டின் வெளியே சாவி இருப்பதை பார்த்ததும் வீட்டை திறந்து திருடிவிட்டு தப்பிச்சென்றதாக போலீசாரிடம் தெரிவித்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications