தங்கம் விலை விற்கும் தக்காளி.. தேனி விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்.. ஒரே மாதத்தில் தலைகீழ் மாற்றம்
தேனி: தமிழ்நாடு முழுவதும் தக்காளி விலை 'கிடுகிடு'வென உயர்ந்து வருகிறது. தேனி பக்கம் ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம் இல்லதரசிகளோ கவலை அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டிலேயே எப்போதுமே முப்போகம் விளையும் பூமி என்றால் அது தேனி மாவட்டம் தான். குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியை சொல்லாம். கூடலூர் தொடங்கி தேனி வரை சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு எல்லாமே முப்போகம் விளையும் பகுதிகள் ஆகும். தண்ணீருக்கு பொதுவாக குறைவே இருக்காது. மிக அபூர்வமாகவே தண்ணீர் பிரச்சனை வரும். வற்றாத நதி முல்லை பெரியாறு ஓடுவதே இதற்கு காரணம்.

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியை பொறுத்தவரை இருபோகம் நெல் சாகுபடி செய்யப்படும். இதற்கு அடுத்தப்படியாக காய்கறி விவசாயம் நடைபெறுகிறது. தேனி, ஆண்டிப்பட்டி, சின்னமனூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் காய்கறி விளைச்சல் நடைபெறுவது வழக்கம். இங்கு விளையும் காய்கறிகள் சின்னமனூர், தேனி சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது.
தேனி பகுதியில் விளையும் தக்காளி தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. தேனி மாவட்டம ஆண்டிப்பட்டி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்படுவது வழக்கம். கடும் வெயில் மற்றும் மழை காரணமாக தக்காளி செடிகளில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டது. இதனால் செடிகளில் பூக்கள் உதிர்ந்து விளைச்சல் அடியோடு பாதிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் சந்தைகளுக்கு தக்காளி வரத்து குறைந்தது. இதன் காரணமாக ஆந்திராவில் இருந்து தேனி மாவட்டத்திற்கு தற்போது தக்காளி கொண்டு வரப்படுகிறது. வரத்து, விளைச்சல் குறைவு காரணமாக தக்காளி விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
தேனி பகுதியில் விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ தக்காளி ரூ.110-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.1,300 வரை விற்பனையாகிறது. சில்லறையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.110 வரை விபாயாரிகள் விற்பனை செய்கின்றனர். இதனால் தேனி மாவட்டத்தில் தக்காளி பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதேநேரம் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் தக்காளி விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். சமையலில் தக்காளி முக்கிய இடம் பிடிக்கும் என்பதால் இல்லதரசிகள் வருத்தம் அடைந்துள்ளனர். சென்னையில் தற்போது தக்காளி விலை ஒரு கிலோ 50 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை விற்கப்படுகிறது. விரைவில் தக்காளி விலை ஏறுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications