பருத்தி மூட்டை குடோன்லயே இருக்கலாம்.. திறந்தும் பயனில்லாத தேனி- மதுரை சாலை.. அரைகுறை வேலையால் அவதி
தேனி: தேனியில் ரயில்வே மேம்பால பணிக்காக மூடப்பட்ட மதுரை சாலை இரண்டரை மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்த போதிலும், அரை குறை பணியால் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறார்கள். ஏனெனில் சர்வீஸ் சாலையை ஜல்லிக்கற்கள் பரப்பி வைத்து, அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்துள்ளார்கள். ஆனால் தார் ஊற்றி சாலை அமைக்காமல் திறந்திருப்பதால், பொதுமக்கள் அவதிப்படும் நிலை தான் இருக்கிறது.
தேனியை பொறுத்துவரை மலைப்பாங்கான பகுதியை கொண்ட நகரம் ஆகும். அடர்ந்த காடுகளும், வயல்வெளிகளும், ஆறுகளும் இணையும் பகுதியில் உள்ளது. பல ஆண்டுகள் கழித்து ரயில் பாதை அமைக்கப்பட்டு ரயில்கள் ஓடும் நிலையில், ரயில்வே மேம்பாலத்தால் மொத்த நகரும் ஸ்தபித்து போய் விடுகிறது..

குறிப்பாக புதிய பேருந்து நிலையம் அருகே மதுரை சாலையில் அடிக்கடி நெரிசல் ஏற்பட்டு வந்ததால் மக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து மதுரை சாலையில் சேது பாரதம் திட்டத்தின் கீழ் ரூ.92 கோடியே 2 லட்சம் மதிப்பில் ரயில்வே மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் தொடங்கியது. 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது.
ஆனால் தேனி மதுரை சாலையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் பெரிய அளவில் தாமதம் ஏற்பட்டது. இது தவிர அந்த பகுதியில் பட்டா நிலங்களுக்கு உரிய இழப்பீடு கொடுப்பதிலும் தாமதம் ஏற்பட்டது. நிலம் எடுப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டது. பணிகளும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. மிகமிக மந்தமாகவே நடந்து வந்தது. இதனால் தற்போது வரை 50 சதவீத பணிகள் கூட நிறைவடையவில்லை.
இதற்கிடையே சர்வீஸ் சாலை அமைத்தல், பாலம் கட்டுமான பணிகள் காரணமாக மதுரை சாலையில் கடந்த ஜூலை மாதம் 19-ந் தேதி முதல் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. அதன்படி பங்களாமேட்டில் இருந்து கலெக்டர் அலுவலகம் அருகில் ஐ.டி.ஐ. திட்டச்சாலை சந்திப்பு வரை சாலை மூடப்பட்டன. இதனால் வாகனங்கள் அன்னஞ்சி விலக்கு, புறவழிச்சாலை, புதிய பஸ் நிலையம், ஐ.டி.ஐ. திட்டச்சாலை வழியாக இயக்கப்பட்டு வந்தன. இதனால் தேனி நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து அரண்மனைப்புதூர் விலக்கு பகுதியில் ஒரு பகுதியில் மட்டும் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு அந்த சாலை திறக்கப்பட்டது. அதன்பிறகு போக்குவரத்து வழித்தடம் மறுசீரமைக்கப்பட்டு அரண்மனைப்புதூர் விலக்கு, புறவழிச்சாலை, புதிய பஸ் நிலையம், ஐ.டி.ஐ. திட்டச்சாலை வழியாக இயக்கப்பட்டன. இருப்பினும் புறவழிச்சாலை சந்திப்பில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் மதுரை சாலை மூடப்பட்ட உள்ளது. அங்கு சர்வீஸ் சாலை அமைத்தல் மற்றும் பாலம் கட்டுமான பணி மந்தமாகவே நடந்தது. இதனால், புதிய பேருந்து நிலையத்தில் அன்றாடம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை விரைவில் தொடங்க உள்ள நிலையில், நெரிசல் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் என்பதால், சர்வீஸ் சாலையை விரைவில் அமைத்து மதுரை சாலையை போக்குவரத்துக்கு திறந்து விட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். இதனிடையே சாலை அமைக்கும் பணிகள் சில நாட்களாக நடந்து வந்தது. ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு சர்வீஸ் சாலை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அந்த பணிகள் முழுமை பெறாத நிலையில், போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு 75 நாட்களாக (2½ மாதங்கள்) மூடப்பட்டு இருந்த மதுரை சாலை நேற்று திறக்கப்பட்டு வாகனங்கள் அந்த வழியாக இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்த போதிலும், அரை குறை பணியால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். சர்வீஸ் சாலை பணிகள் முழுமை பெறாததால் அங்கு புழுதி பறக்கிறது. விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது. வேலையை முழுமையாக முடிக்காமல் அரைகுறை பணிகளுடன் சாலையை திறந்தால், மக்கள் அவதிப்படுகிறார்கள் சர்வீஸ் சாலையை ஜல்லிக்கற்கள் பரப்பியதோடு நிற்காமல், தார்சாலையாக அமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications