கண்களில் கசிந்த கண்ணீர்.. தாயின் காலை பிடித்தபடியே கதறி அழுத ஓபிஎஸ்.. வெளியான வீடியோ-உருக்கம்!
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவால் காலமானார்.
தேனி: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் தாய் பழனியம்மாள் நேற்று காலமானார். வயது மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவரது உயிர் நேற்று பிரிந்தது. இதையடுத்து சென்னையில் இருந்து தேனி திரும்பிய ஓ பன்னீர் செல்வம், வீட்டுக்குள் நுழைந்ததும் அங்கு வைக்கப்பட்ட தாயின் காலை பிடித்தபடியே அப்படியே சிறிது நேரம் கதறி அழுதார்.
முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பெயர் பழனியம்மாள். இவருக்கு வயது 95. இவர் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஓ பன்னீர் செல்வத்தின் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் தான் வயது மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவால் பழனியம்மாள் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஓபிஎஸ்ஸின் தாயார்
தேனி என்ஆர்டி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பழனியம்மாள் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு தீவிரமாக சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. அதிமுக பொதுக்குழு வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு வந்தபோது ஓ பன்னீர் செல்வம் தனது தாயாருடன் தேனியில் உள்ள மருத்துவமனையில் இருந்தார். அதன்பிறகு ஓ பன்னீர் செல்வம் சென்னை திரும்பினார்.

சிகிச்சை பலனின்றி காலமானார்
இந்நிலையில் தான் நேற்று சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் மரணம் அடைந்தார். தாயார் மறைவு செய்தி கேட்டறிந்த ஓ பன்னீர் செல்வம் அவசர அவசரமாக சென்னையிலிருந்து தேனிக்கு புறப்பட்டு பெரியகுளம் விரைந்தார். பெரியகுளத்தில் உள்ள வீட்டில் பழனியம்மாளின் உடல் வைக்கப்பட்டு இருந்தது. வீட்டுக்குள் நுழைந்ததுமே தாயாரின் உடலை பார்த்த பன்னீர் செல்வம் கண்களில் இருந்து கண்ணீர் கசிந்தது.

காலை பிடித்து கதறி அழுத ஓபிஎஸ்
மேலும் பழனியம்மாளின் காலை பிடித்தபடி ஓ பன்னீர் செல்வம் சிறிதுநேரம் அப்படியே உடைந்து கதறி அழுதார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவருக்கு ஆறுதல் கூறினர். இது உருக்கமாக இருந்தது. மேலும் தாயாரின் காலை பிடித்து பன்னீர் செல்வம் கதறி அழும் வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது.

இன்று உடல் அடக்கம்
தற்போது பெரியகுளத்தில் உள்ள ஓ பன்னீர் செல்வத்தின் தாயாரின் உடல் இறுதி சடங்குகளுக்கு பிறகு இன்று மாலையில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகிறது. தாயாரை இழந்துள்ள ஓ பன்னீர் செல்வத்துக்கு அரசியல் கட்சியினர் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
நேற்று முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து இருந்தார். இதுபற்றி அவர், ‛‛முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஓபிஎஸ் அவர்களின் தாயார் பழனியம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவின் காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வேதனையடைகிறேன். ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் திரு. பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications