2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன்
தேனி: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் திமுக வேட்பாளராக தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த மூன்று முறை அதிமுக சார்பில் போடிநாயக்கனூரில் வென்ற ஓ பன்னீர்செல்வம், நான்காவது முறையாக அதே தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகிறார். நேற்று வேட்புமனு தாக்கல் செய்த ஓ.பன்னீர்செல்வம் தனக்கு ரூ.12 கோடி சொத்து இருப்பதாகவும், ரூ.5 1/4 கோடி கடன் இருப்பதாகவும் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த உறுதிமொழி பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஒரு காலத்தில் சக்தி வாய்ந்த அதிமுக தலைவராக இருந்த ஓ பன்னீர்செல்வம் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதனால் திமுகவில் இணைந்தவர், தற்போது போடி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனுவுடன் தனது சொத்து விவரங்கள் அடங்கிய உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.

அதில் அவர் தனக்கு ரூ.2 கோடியே 94 லட்சத்து 93 ஆயிரத்து 125 மதிப்பில் அசையும் சொத்துக்கள், ரூ.9 கோடியே 17 லட்சத்து 17 ஆயிரத்து 58 மதிப்பில் அசையா சொத்துக்கள் இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி அவருடைய சொத்து மதிப்பு மொத்தம் ரூ.12 கோடியே 12 லட்சத்து 10 ஆயிரத்து 183 ஆகும். அசையும் சொத்துக்களில் கையிருப்பு ரொக்கம் ரூ.5 லட்சத்து 94 ஆயிரத்து 250 மற்றும் 216 கிராம் தங்கம் உள்ளதாகவும், ஒரு கார், 2 வேன், ஒரு டிராக்டர் மற்றும் ஒரு வாகனம் உள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார்.
அதுபோல், ஓ பன்னீர்செல்வம் தனக்கு ரூ.5 கோடியே 40 லட்சத்து 51 ஆயிரத்து 955 கடன் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதில், தனது மகன்களான முன்னாள் எம்.பி. ரவீந்திரநாத்திடம் ரூ.90 லட்சம், இளையமகன் ஜெயபிரதீப்பிடம் ரூ.1 கோடியே 89 லட்சத்து 390 கடன் பெற்றுள்ளது உட்பட இதர கடன்கள் உள்ளதாகவும் தனது வேட்பு மனுவில் கூறியுள்ளார்
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலின்போது இதே போடிநாயக்கனூர் தொகுதியில் தான் போட்டியிட்டார். அப்போது தாக்கல் செய்த சொத்து மதிப்பில் தனக்கு ரூ.61 லட்சத்து 19 ஆயிரத்து 162 சொத்து, ரூ.65 லட்சத்து 55 ஆயிரத்து 411 கடன் இருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
அவருடைய மனைவி விஜயலட்சுமி பெயரில் ரூ.4 கோடியே 57 லட்சத்து 52 ஆயிரத்து 415 மதிப்பில் அசையும் சொத்துக்கள், ரூ.2 கோடியே 63 லட்சத்து 75 ஆயிரத்து 106 மதிப்பில் அசையா சொத்துக்கள் இருந்ததாக குறிப்பிட்டு இருந்தார் . விஜயலட்சுமி கடந்த 2021-ம் ஆண்டு உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதையடுத்து அந்த சொத்துக்கள் எல்லாம் சேர்த்து மொத்தம் 12 கோடிக்கு தனது சொத்து உள்ளதாக கூறியிருக்கிறார் ஓ பன்னீர்செல்வம்.
ஓ பன்னீர்செல்வம் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்த போது, அவருடன் தங்கதமிழ்செல்வன் எம்பி உடன் வந்தார். இவர் தான் 2021 தேர்தலில் ஓ பன்னீர்செல்வத்தை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனிடையே 2026 தேர்தலில் ஓ பன்னீர்செல்வத்தை எதிர்த்து அதிமுக சார்பில் விடி நாராயணசாமி போட்டியிடுகிறார். இவர் தான் தேனி நாடாளுமன்ற தேர்தலில் கடந்த முறை போட்டியிட்டார். ஆனால் டெபாசிட் பறிபோனது. இதுவிர நாம் தமிழர் சார்பில் கலையரசு, தவெக சார்பில் பிரகாஷ் குமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.











Click it and Unblock the Notifications