தொண்டையில் சிக்கிய ஜெல்லி மிட்டாய்.. ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு.. தேனியில் ஷாக்
தேனி: தேனி மாவட்டத்தில் வெறும் ஒன்றரை வயதான குழந்தை ஜெல்லி மிட்டாய் வாங்கி தின்ற போது, பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
குழந்தைகள் வளரும் போது நாம் அவர்களை எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். அவர்களைக் கொஞ்ச நேரம் கவனிக்காமல் விட்டாலும் ஏதாவது ஒரு சேட்டையை செய்துவிடுவார்கள். இதனால் அவர்களின் உயிருக்கே கூட ஆபத்தாகும் அபாயம் இருக்கிறது.

அப்படியொரு ஷாக் சம்பவம்தான் இப்போது தேனி மாவட்டத்தில் நடந்துள்ளது. அங்கே ஒன்றரை வயதுக் குழந்தை ஆசையாக ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட நிலையில், அப்போது அந்த ஜெல்லி மிட்டாய் தொண்டையில் சிக்கவே அந்த குழந்தை எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
தேனி தம்பதி: தேனி மாவட்டத்தில் பெரியகுளம் அடுத்துள்ள சருத்துப்பட்டி கிழக்கு தெருவில் வசித்து வருபவர் மலர்நிகா.. 21 வயதான மலர்நிகாவுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஞானசேகர் (24) என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இந்தத் தம்பதிக்குக் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு ஹர்ஷன் என்று பெயர் வைத்துள்ளனர். குழந்தை பிறந்து சில மாதங்களில் ஞானசேகருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அவர் சிகிச்சை எடுத்த போதிலும் அவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.
அதன் பிறகு மகன் ஹர்ஷன் தாய் மலர்நிகாவுடன் வளர்ந்துள்ளார். இதற்கிடையே மலர்நிகா ஹர்ஷனுக்கு ஜெல்லி மிட்டாய் ஒன்றை வாங்கி தந்துள்ளார். குழந்தை அந்த ஜெல்லி மிட்டாயைச் சாப்பிட்ட நிலையில், திடீரென குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் பதறியடித்துக் கொண்டு தாய் மலர்நிகா ஹர்ஷனை தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்: தேனி அரசு மருத்துவமனையில் ஹர்ஷனை மருத்துவர்கள் பரிசோதித்துள்ளனர். இருப்பினும், அந்த குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதை மலர்நிகாவால் நம்பவே முடியவில்லை. தனது மகன் உயிரிழந்ததை நினைத்து மலர்நிகா கதறி அழுதார். இது தொடர்பாகப் பெரியகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். ஜெல்லி மிட்டாய் சாப்பிட்டு ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்த ஒன்றரை வயதுக் குழந்தை ஹர்ஷனின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து குழந்தையின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முதற்கட்ட மருத்துவ சோதனையில் ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட போது, அது தொண்டையில் சிக்கியதால் மூச்சு திணறல் ஏற்பட்டிருக்கும் என்றும் இதனால் குழந்தை உயிரிழந்திருக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கட்டாயமாகத் தரக் கூடாது: பொதுவாக ஜெல்லி மிட்டாய்களைக் குழந்தைகளுக்குக் கொடுப்பது சரியானது இல்லை. அவை எளிதாக ஒட்டிக் கொள்ளும் சிக்கல் இருப்பதால், அது போன்ற மிட்டாய்களை குழந்தைகளுக்குத் தராமல் இருப்பது சரியாக இருக்கும். குழந்தைகளுக்கு 5 வயதாகும் வரை இதுபோல ஒட்டும் மிட்டாய்களைக் குழந்தைகளுக்குத் தர வேண்டாம், அதிலும் குறிப்பாக ஜெல்லி போன்றவற்றைக் கட்டாயம் குழந்தைகளுக்குத் தர வேண்டாம் என அறிவுறுத்துகிறார்கள்.












Click it and Unblock the Notifications