அத்துமீறி சோத்துப்பாறை அணையை திறந்த தவெக.. ரீல்ஸ் எடுத்து சம்பவம்.. போலீசிடம் பொதுப்பணித்துறை புகார்
தேனி: சோத்துப்பாறை அணையை அனுமதியின்றி திறந்த தவெகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுப்பணித்துறை சார்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேனி வடகிழக்கு தவெக மாவட்ட இணைச் செயலர் ஷேக் அலி தலைமையிலான நிர்வாகிகள் அணையை திறந்து வைத்ததோடு, அதனை வீடியோவாக பதிவு செய்து சோசியல் மீடியாவிலும் பதிவிட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின் பாசன பகுதிகளான கைலாசபட்டி, லட்சுமிபுரம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 2,865 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் புதிய ஆயக்கட்டு பகுதிகளான கைலாசபட்டி, லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 1,040 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

அரசாணை வெளியிடவில்லை
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாக பெய்துள்ள நிலையில் சோத்துப்பாறையில் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் மூலம் கண்மாய்கள் மற்றும் குளங்கள் முழுமையாக நீர் நிறையாத நிலையில், தமிழக அரசு அணையில் இருந்து பாசனத்திற்கு முறைப்படி நீர் திறக்க அரசாணை வெளியிடவில்லை.
அனுமதி இன்றி சோத்துப்பாறை அணை திறப்பு
இந்தநிலையில் பெரியகுளம் எம்எம்ஏ சபரி ஐங்கரன் வழிகாட்டுதலின் அடிப்படையில் தவெக தேனி வடகிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் ஷேக் அலி தலைமையில் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு சோத்துப்பாறை அணையில் இருந்து நீரை திறந்துவிட்டதாக மலர்தூவி புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

வீடியோ வெளியிட்ட தவெக
புதிய ஆயகட்டு பாசனத்திற்கு நீர் திறப்பதாக விவசாயிகளுக்கும் விவசாய சங்கத்தினருக்கும் எந்தவித முன் அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில், தவெக நிர்வாகிகள் நீர் திறந்து விட்டு வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பொதுப்பணித்துறை சொல்வது என்ன?
தமிழக அரசின் நீர் திறப்பு குறித்து அரசாணை பெறப்படாமலும், பெரியகுளம் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் உத்தரவு இல்லாமலும் தவெக நிர்வாகிகள் பாசனத்திற்கு நீர் திறந்துவிட்டுள்ளனர். இதுகுறித்து குறித்து பெரியகுளம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்பரசனிடம் கேட்டபோது, சோத்துப்பாறை அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை கண்மாய் பாசன விவசாயிகள், புதிய ஆயகட்டு விவசாயிகள் என யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால் அனையில் இருந்து வெளியேறும் உபரி நீர் நாளையே நின்று விட்டால் இதுபோன்று எடுக்கப்படும் நீரும் நின்றுவிடும். தவெக கட்சி நிர்வாகிகள் நீரை திறந்து விட்டுள்ளது முறைப்படியான பாசனத்திற்கான நீர் திறப்பு இல்லை. தமிழக அரசிடம் அரசாணை பெற்ற பின் விவசாயிகளுக்கும், விவசாய சங்கத்தினருக்கும் முறைப்படி தெரிவிக்கப்பட்ட பின்பு பாசனத்திற்கு நீர் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.
காவல்துறையிடம் புகார்
தற்போது சோத்துப்பாறை அணையை அனுமதியின்றி திறந்த தவெகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுப்பணித்துறை சார்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தவெகவினர் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு சேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அனுமதி இன்றி அணையை திறந்து வைத்திருப்பது அதன் உச்சமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications
