தேனி மேகமலை குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பு.. அதிர்ச்சியில் பெண் விபரீத முடிவு
தேனி: ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தை காரணம் காட்டி மலை கிராம மக்களை வெளியேற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் மலை கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தீர்ப்பால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் பூச்சி மருந்து உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் தற்போது தேனி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தேனி மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தில் தான் மேகமலை, வருசநாடு, நரியூத்து, தும்மகுண்டு உள்ளிட்ட 9 ஊராட்சி கீழ் உள்ள 98 மலை கிராமங்களில் பல தலைமுறைகளாக பல்லாயிரக்கணக்கான மலை கிராம மக்கள் வசித்து வருகின்றனர் .
இந்த நிலையில் கிராம மக்களை வெளியேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . இதனை எதிர்த்து மலை கிராம மக்கள் கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நேற்றைய தினம் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வாதத்தில் மலை கிராம மக்களை வெளியேற்றுவதற்கு எந்த சலுகையும் காட்டக்கூடாது, புலிகள் காப்பக பகுதிகள் பட்டா வழங்கக்கூடாது, மின்சாரம் மற்றும் குடிநீர் சேவையை துண்டிக்கபட வேண்டும், தேவைப்பட்டால் துணை இராணுவத்தை பயன்படுத்தி நேரிடும் என உச்சநீதிமன்றம் தெரிவித்து இருந்தது.
இதனால் மலை கிராம மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி கடும் அதிர்ச்சி அடைந்தனர், இந்த நிலையில் தும்மக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட காந்தி கிராமப் பகுதியைச் சேர்ந்த நதியா (38) என்ற பெண் நேற்று மாலை விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை அடுத்து பெண்ணின் குடும்பத்தினர் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
பல தலைமுறைகளால் வசித்து வந்த தங்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி வெளியேற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தற்போது எங்கள் கிராமத் சேர்ந்த ஒரு பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார், இதே போல் ஆயிரக்கணக்கான மக்களும் தற்கொலை முயற்சி செய்யப் போவதாக எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இது தொடர்பாக சம்பவம் குறித்து புகார் எடுத்துக்கொள்ளப்பட மாட்டோம் என காவல்துறையினர் தெரிவித்ததாக கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.
தமிழக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்து பல தலைமுறைகளாக வசித்து வரும் எங்களது இருப்பிடத்தை பாதுகாத்து, எங்களது வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது. தற்கொலை மனநிலையில் இருந்து விடுபட கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும்.
சினேகா (தமிழ்நாடு): 044-24640050
டெலி-மானஸ் ( மத்திய அரசு சேவை): 14416 அல்லது 1800-891-4416
வந்தேவாலா பவுண்டேஷன் : 9999 666 555
கிரண் : 1800-599-0019
இந்த சேவை எண்கள் அனைத்தும் இலவசமாகவும், ரகசியமாகவும், 24 மணி நேரமும் வழிகாட்டுதல் வழங்கக்கூடியவை. அவசர காலங்களில் உடனடியாக இந்த எண்களைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications
