'நான் ஹைகோர்ட் அரசு வக்கீல்'.. தேனி கலெக்டர் ஷஜீவனாவை மிரட்டிய நபர்.. அடுத்து நடந்த ட்விஸ்ட்
தேனி: தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவின் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலம் அடுத்தடுத்து 5 குறுஞ்செய்திகளை அனுப்பி மிரட்டிய போலி அரசு வக்கீல் ராமகிருஷ்ணனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
மதுரை சம்மட்டிபுரம் பாரதியார் நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் தேனி மாவட்ட கலெக்டர் ர் ஷஜீவனாவின் இமெயிலுக்கு, கடந்த ஜனவரி மாதம் 30-ம் தேதி ஒரு புகார் அனுப்பினார். அந்த புகாரில் அவர் தன்னை வக்கீல் என்று கூறியிருந்தார்.

அந்த புகார் மனுவில், தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர் தன்னையும், தனது உறவினர்கள் குறித்தும் வதந்தி பரப்பி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த புகார் குறித்து கலெக்டர் ஷஜீவனா உத்தரவின்பேரில், கல்வித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 5-ம் தேதி கலெக்டரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் ராமகிருஷ்ணன். அப்போது அவர் தான் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அரசு சிறப்பு வக்கீலாக பணியாற்றி வருவதாக கூறியதுடன், தான் அளித்த புகார் மனுவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தாராம்.
அதே நாளில், கலெக்டரின் செல்போன் எண்ணுக்கு 'வாட்ஸ்-அப்' மூலம் ராமகிருஷ்ணன் அடுத்தடுத்து 5 குறுஞ்செய்திகளை அனுப்பினாராம். அந்த மெசேஜில் தனது புகார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆஜராக வேண்டிய நிலை வரும் என்று கலெக்டருக்கு மிரட்டல் விடுத்திருந்தார். இதுதொடர்பாக கலெக்டர் நடத்திய விசாரணையில், மதுரையில் இதுபோன்று அரசு சிறப்பு வக்கீல் இல்லை என்பது உறுதியானது.
இதையடுத்து தேனி மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில், நேர்முக உதவியாளர் (பொது) சிந்து, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத்திடம் கடந்த சனிக்கிழமை அன்று புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் அரசு வக்கீல் என்று கூறி தேனி மாவட்ட கலெக்டரை மிரட்டி, அரசு பணியை செய்ய விடாமல் இடையூறு செய்ததாக ராமகிருஷ்ணன் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். அங்கு அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தேனி கலெக்டரை போலி அரசு வக்கீல் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications