தேனி ஜெயிலில் கரண்டியை வைத்து 17 கைதிகள் எஸ்கேப்.. கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்.. என்ன நடந்தது?
தேனி: தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது சிறைத்துறையில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சம்பவம் நடந்து 3 நாட்கள் ஆன நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, காவல்துறை வட்டாரத்தின் கவனத்தை பெற்று வருகிறது.
தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் கடந்த அக்டோபர் 26-ம் தேதி இரவு 17 கைதிகள் தப்பி சென்றார்கள்.. ஜெயில் காவலர்களைத் தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பிய கைதிகள் மலைப்பகுதிகளில் பதுங்கினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேனி கைதிகள்
17 கைதிகள் ஒரே நேரத்தில் தப்பிய சம்பவத்தில் சிறை நிர்வாகத்தின் பொறுப்பு குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. கைதிகள் தப்பிய சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில், லிங்க பிரசாத் என்பவர்தான் இதற்கு மூளையாகச் செயல்பட்டது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
லிங்க பிரசாத் மீது 26 வழக்குகளும், 3 குண்டாஸ் சட்டப் பிரிவுகளும் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஜாமீனில் வெளியே வர முடியாத சூழலும், குண்டாஸ் நடவடிக்கையும் காரணமாக இனி சிறையிலிருந்து வெளியே வர முடியாது என்ற விரக்தியில் அவர் தப்பிக்கும் திட்டத்தைத் தீட்டியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கரண்டியை வைத்து எஸ்கேப்
இதற்காக சிறையிலிருந்த சமையல் கரண்டியைப் பயன்படுத்தி போலீசாரை தாக்கியுள்ளனர். அப்போது போலீசாரின் தங்கச் சங்கிலியையும் பறித்துக்கொண்டு 17 பேரும் தப்பிச் சென்றுள்ளனர். செருப்பு இல்லாமல் தப்பியதால் கைதிகளின் கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் தங்களது சட்டைகளைக் கிழித்து கால்களில் கட்டிக்கொண்டு மலைப்பகுதிகளில் ஏறி சென்றிருக்கிறார்கள்.
கைதிகள் தப்பிய தகவல் கிடைத்ததும் போலீசார் 17 தனிப்படைகளை அமைத்துத் தேடுதல் வேட்டையில் இறங்கினர். மலைப்பகுதிகளில் பதுங்கியிருந்த கைதிகளைக் கண்டுபிடிக்க ட்ரோன் கேமராக்களும் பயன்படுத்தப்பட்டன... இதில் முதல் 24 மணி நேரத்தில் 13 கைதிகளும், அடுத்த 12 மணி நேரத்தில் மீதமிருந்த 4 பேரும் கைது செய்யப்பட்டனர். மலைப்பகுதிகளில் பதுங்கியிருந்த 12 பேரை ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்டறிந்து போலீசார் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டது.
கூடலூர் புறவழிச்சாலை
மேலும், கூடலூர் புறவழிச்சாலை வழியாக கேரளாவுக்குத் தப்ப முயன்ற மீனாட்சி சுந்தரம், திருப்பதி ஆகிய சகோதரர்களையும் போலீசார் மடக்கிப் பிடித்தனர். ரயில் தண்டவாளங்கள் வழியாகவும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதரி விளக்கம் அளித்திருந்தார்.. அதேபோல, கொலை செய்வதற்காக பணம் பெற்றுக்கொண்டு கைதிகள் தப்பியதாக வெளியான தகவல்கள் வதந்தி என்று ஆண்டிப்பட்டி டிஎஸ்பி விஷ்ணுபிரியா தெரிவித்திருந்தார்.. கிராம மக்களின் விழிப்புணர்வும், அவர்கள் அளித்த தகவல்களும் கைதிகளை விரைவாகப் பிடிக்க உதவியதாகவும் அவர் கூறியிருந்தார்.
சஸ்பெண்ட் நடவடிக்கை
இந்நிலையில் நாகேஸ்வரன் பணியிடை நீக்கம் மதுரை மத்திய சிறை எஸ்பி கிருஷ்ணராஜ் உத்தரவிட்டுள்ளார்.. ஏற்கனவே 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.. அதேபோல தேனி சிறையில் 17 கைதிகள் தப்பிய விவகாரத்தில் சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக மாற்றப்பட்டிருந்தார்.. இதையடுத்து புதிய கூடுதல் டிஜிபியாக சங்கரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது..
அதாவது 2 தலைமைக் காவலர்கள், ஒரு முதல்நிலைக் காவலர், 6 இரண்டாம் நிலைக் காவலர்கள் என 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தனர். இப்போது எஸ்பி நாகேஸ்வரனையும் சஸ்பெஸ்ட் செய்யப்பட்டுள்ளது, காவல்துறை வட்டாரத்தில் கவனம் பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications
