தேனி நாடாளுமன்றத் தொகுதி! அதிமுக வேட்பாளர் ஜக்கையன்? ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் கதி?
தேனி: தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் அக்கட்சியின் முக்கிய பிரமுகரான எஸ்.டி.கே. ஜக்கையனுக்கு வாய்ப்பு தரப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தேனி நாடாளுமன்றத் தொகுதி: தேனி நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரை கம்பம், போடி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, சோழவந்தான், உசிலம்பட்டி என 6 சட்டமன்ற தொகுதிகள் வருகின்றன. பிறமலைக்கள்ளர், நாயக்கர், சிறுபான்மையினர், ஒக்கலிக கவுடர், ஆதி திராவிடர் உள்ளிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கணிசமான வாக்கு வங்கியை கொண்டுள்ளார்கள். இதனால் மேற்கண்ட எல்லா விவகாரங்களையும் ஆராய்ந்த பின்னரே அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்யும்.

யாருக்கு வாய்ப்பு? : அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேனி நாடாளுமன்றத் தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்துவார் என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. ஏனெனில் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டம் என்பதால் தேனி மக்களவைத் தொகுதியை பொறுத்தவரை அரசியல் ரீதியாக கவனம் ஈர்த்து வருகிறது. இதனிடையே தேனியில் அதிமுக வேட்பாளர் தேர்வு படலத்தை சத்தமின்றி தொடங்கிவிட்ட எடப்பாடி பழனிசாமி, எஸ்.டி.கே. ஜக்கையனுக்கு வாய்ப்பு தரலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எஸ்.டி.கே. ஜக்கையன்? : எஸ்.டி.கே. ஜக்கையனை பொறுத்தவரை ஏற்கனவே அதிமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாகவும் இருந்திருக்கிறார். தற்போது அதிமுகல் அமைப்புச் செயலாளர் பதவி வகிக்கிறார். கட்சியில் சீனியரும் கூட. இதனிடையே கம்பம், போடி பகுதியில் ஜக்கையனுக்கு இன்னும் பழைய செல்வாக்கு குறையவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. இதனால் அதிமுக சார்பில் மீண்டும் ஜக்கையனுக்கு எம்.பி. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.
ஓ.பி.ரவீந்திரநாத்: ஏற்கனவே மகனுக்கு மாவட்டச் செயலாளர் பதவியை எதிர்பார்த்து அது கிடைக்காத ஏமாற்றத்தில் உள்ள ஜக்கையன், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேனியில் களமிறங்க ஆயத்தமாகிவிட்டார் என்கிறார்கள் உள்ளூர் நிர்வாகிகள். இதன் மூலம் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்துக்கு அதிமுகவில் கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். இதனிடையே ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தை பொறுத்தவரை வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications