தேனி டூ சபரிமலை.. ஒருவழிப்பாதை வழித்தடத்தை மாற்ற திட்டம்.. இந்த முறை எளிதாகிறதா ரூட்?
தேனி: கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், குமுளி வழியாக தினமும் ஏராளமான வாகனங்களில் சபரிமலைக்கு பக்தர்கள் சென்று வருகிறார்கள். இப்படி வரும் வாகனங்களுக்கு வழக்கமாக அமல்படுத்தப்படும் ஒருவழிப்பாதைக்கான வழித்தடத்தை மாற்றியமைக்க தமிழக கேரள அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகின்றனர்.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. கார்த்திகை ஒன்று முதல் தை மாதம் முதல் வாரம் வரை கோடிக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவார்கள். இந்த காலக்கட்டத்தில் தினமும் பல ஆயிரம் பேர் வந்து செல்வது வழக்கம். கார்த்திகை மாதம் கடந்த திங்கள் அன்று பிறந்த நிலையில், மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது.

சபரிமலை பயணம்
தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், குமுளி வழியாக தினமும் ஏராளமான வாகனங்களில் சபரிமலைக்கு பக்தர்கள் சென்று வருகின்றனர். ஒவ்வொரு இரண்டு நிமிடம் அல்லது ஒரு நிமிடத்தில் ஒரு ஐயப்ப பக்தர்கள் வாகனம் திண்டுக்கல், மதுரை சாலைவழியாக தேனியை கடந்து செல்கின்றன. அனைத்து ஐயப்ப பக்தர்களும் குமுளி, வண்டி பெரியாறு வழியாக எரிமேலி சென்று பின்னர், நிலக்கல்லை அடைவார்கள். பின்னர் அங்குள்ள அரசு பேருந்துகளில் ஏறி, பம்பை நதியை அடைவார்கள். பின்னர் அங்கிருந்து தான் இருமுடியை தூக்கிக் கொண்டு நடைபயணமாக மிகவும்செங்குத்தான மலையில் சுமார் 6 கிமீ தூரம் பயணத்திற்கு பிறகு சபரிமலையில் ஐயப்பனை காண்பார்கள்.
சபரிமலை ரூட்
ஆண்டு தோறும் சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களில் ஏராளமான வாகனங்கள் தேனி மாவட்டம் வழியாகவே செல்லம். எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தேனி மாவட்டத்தில் ஒருவழிப்பாதை திட்டம் அமல்படுத்தப்படுவது வழக்கம். அதன்படி, கார்த்திகை பிறந்தாலே, தேனியில் இருந்து சபரிமலைக்கு செல்லும் வாகனங்கள் சின்னமனூர், கம்பம், கம்பம்மெட்டு, கட்டப்பனை, வாகமன், ஏலப்பாறை, குட்டிகானம், பூத்துக்குழி, முண்டகயம், எருமேலி, பம்பை வழியாக அய்யப்பன் கோவிலுக்கு செல்வது வழக்கம்.
குமுளி பாம்பனாறுவில் நெரிசல்
சபரிமலையில் இருந்து திரும்பும் வாகனங்கள் பம்பை, குட்டிக்கானம், பீர்மேடு, பாம்பனாறு, வண்டிப்பெரியாறு, குமுளி, கூடலூர், கம்பம், சின்னமனூர் வழியாக தேனிக்கு வருவார்கள். இந்த வழித்தடம் மாற்றம் அமலில் இருக்கும் போது குமுளி, பாம்பனாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்த நெரிசல் மற்றும் விபத்து அபாயங்களை தவிர்க்கும் வகையில் இந்த வழித்தட மாற்றத்தில் மாற்றத்தை கொண்டு வரலாம் என்று இருமாநில அதிகாரிகளும் பரிசீலனை செய்து வருகிறார்கள்,
தேக்கடியில் மீட்டிங்
சமீபத்தில் இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து தேக்கடியில் நடந்த தேனி, இடுக்கி மாவட்ட அதிகாரிகளுக்கான முன்னேற்பாடு கூட்டத்தின்போதும், இந்த வழித்தட மாற்றம் குறித்து தமிழக காவல்துறை சார்பில் பரிந்துரை முன் வைக்கப்பட்டிருக்கிறது..
காவல்துறை திட்டம்
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, 'ஒருவழிப்பாதை அமல்படுத்தும் திட்டத்தின் வழக்கமாக கம்பத்தில் இருந்து கம்பம்மெட்டு வழியாக சபரிமலைக்கு செல்வதும், சபரிமலையில் இருந்து குமுளி மலைப்பாதை வழியாக வாகனங்கள் திரும்பி வருவதும் நடைமுறையில் இருந்தது. இந்த முறை சபரிமலைக்கு செல்லும் வாகனங்களை குமுளி மலைப்பாதை வழியாகவும், திரும்பி வரும் போது கம்பம்மெட்டு மலைப்பாதை வழியாகவும் இயக்கலாம் என்று பரிசீலனை செய்து வருகிறோம். இதற்கான இறுதி முடிவு எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை' என்று கூறினார்கள்.












Click it and Unblock the Notifications