தேனி பால் வியாபாரியை சுற்றி வளைத்த கும்பல்.. துணிச்சலாக காப்பாற்ற வந்த நபர்.. என்ன நடந்தது?
தேனி: தேனி மாவட்டம் கம்பம் ஜல்லிக்கட்டு தெருவை சேர்ந்த இளம்பரிதி பால் வியாபாரி ஆவார். இவருக்கு திருணமாகி மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். நேற்று இரவு கடையில் டீக்குடித்து விட்டு வெளியே வந்த போது, பால் வியாபாரியை சுற்றி வளைத்த கும்பல், உறவினர்களை நடுங்க வைக்கும் அளவிற்கு சம்பவம் செய்திருக்கிறது. உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் கம்பத்தில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.
தேனி மாவட்டம் கம்பம் ஜல்லிக்கட்டு தெருவை சேர்ந்த 27 வயதாகும் இளம்பரிதி என்பவர் பால் வியாபாரி ஆவார். இவருக்கு திருமணமாகி 23 வயதில் சவுமியா என்ற மனைவியும், 4 வயதில் தேஜாஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் இளம்பரிதி டீ குடிப்பதற்காக தனது வீட்டில் இருந்து கம்பம் விவேகானந்தர் 1-வது தெருவில் உள்ள டீக்கடைக்கு சென்றுள்ளார். அங்கு டீ குடித்துவிட்டு அவர் வெளியே வந்திருக்கிறார்.

அப்போது 6 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் அங்கு வந்து ஏற்கனவே காத்துக் கொண்டிருந்தது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள், இளம்பரிதியை சுற்றி வளைத்தார்கள். பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் இளம்பரிதியை சரமாரியாக தாக்கினார்கள். இதனை பார்த்ததும் அங்கிருந்த பலரும் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த கம்பம் ஊத்துக்காடு பிரிவு பகுதியை சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளியான 58 வயதாகும் ஈஸ்வரன் என்பவர் துணிச்சலாக செயல்பட்டு, இளம்பரிதியை வெட்டிய கும்பலை தடுக்க முயன்றார். அப்போது அந்த கும்பலை சேர்ந்தவர்கள் ஈஸ்வரனையும் வெட்டிவிட்டு, தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர். சினிமா காட்சிகளில் வருவது போன்று சில நிமிடங்களில் இந்த சம்பவம் நடந்தது.
அரிவாள் வெட்டில் இளம்பரிதி சம்பவ இடத்திலேயே இறந்தார். ஈஸ்வரன் காயத்துடன் உயிருக்கு போராடினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கம்பம் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். காயமடைந்த ஈஸ்வரனை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் இளம்பரிதியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட இளம்பரிதியின் உடல், அங்கிருந்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை அறிந்ததும் கம்பம் அரசு மருத்துவமனை முன்பு இளம்பரிதியின் உறவினர்கள் திரண்டனர். பின்னர் உடலை மாற்றியது எதற்காக என்று கேள்வி எழுப்பி கோஷமிட்டனர். மேலும் இளம்பரிதியை கொலை செய்த குற்றவாளிகளை விரைந்து பிடித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான போலீசார் அங்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த மறியல் போராட்டம் இரவு வரை நடந்தது. இந்த கொலை குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மகும்பலை தேடி வருகின்றனர்.
மேலும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இளம்பரிதி ரேக்ளா பந்தய போட்டியில் கலந்து கொள்பவர் ரேக்ளா பந்தய போட்டியில் அவர் பலமுறை வெற்றி பெற்றுள்ளார். இதனால் ரேக்ளா பந்தய போட்டியின் காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்தால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கம்பத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் பால் வியாபாரி மர்மகும்பலால் கொல்லப்பட்ட செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications