பாஜக கூட்டணியில் உள் ஒதுக்கீடு? தேனி மக்களவைத் தொகுதியில் பல்ஸ் பார்க்கும் டிடிவி தினகரன்!
தேனி: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடும் திட்டத்தில் இருப்பதாகவும் அதன் முன்னோட்டமாக இப்போதே தொகுதியில் பல்ஸ் பார்க்க ஆரம்பித்துவிட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவுடன் டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை ஒருங்கிணைத்து தமிழகத்தில் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது பாஜகவின் எண்ணமாக உள்ளது. ஆனால் அதற்கு எடப்பாடி தரப்பு பிடிகொடுக்காததால், பாஜக உள் ஒதுக்கீடு முறையை கையில் எடுக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதாவது அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் ஒன்றை, டிடிவி தினகரனுக்கு கொடுத்தால் அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை என்கிறார்கள் டெல்லி அரசியலை அறிந்தவர்கள். அந்த வகையில் தேனித் தொகுதி உட்பட இன்னும் ஒரு சில தொகுதிகளில் வெற்றிவாய்ப்பு குறித்து பல்ஸ் பார்க்கும் பணிகள் டிடிவி தரப்பில் தொடங்கப்பட்டு விட்டதாக தெரிகிறது.
இதனால் தான் ஓ.பன்னீர்செல்வத்துடன் கரம் கோர்த்து தேனியில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கூட மிக உற்சாகமாக கலந்துகொண்டார் தினகரன். நீதிமன்றத்தில் வழக்கு, அதிமுகவில் கடும் எதிர்ப்பு உட்பட பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் ரவீந்தரநாத் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்குவது சந்தேகம் தானாம்.
தேனி மக்களவைத் தொகுதியில் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி வருவதால் கணிசமான வாக்குகளை பெற்று வெற்றியை சாத்தியப்படுத்தலாம் என தினகரனுக்கு அவரது ஆதரவாளர்கள் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். இதனிடையே எதையுமே ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்து வரும் தினகரன், மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னும் தீர்க்கமாக யோசித்து அதன் பின்னர் உறுதியான இறுதி முடிவெடுப்பார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications