தேனியில் மனமகிழ் மன்றங்களை ஆய்வு செய்ய போன கம்பம் எம்எல்ஏ முன்பே தவெக நிர்வாகிக்கு விழுந்த அடி
தேனி மாவட்டத்தில் கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை போலவே ஏராளமான மனமகிழ் மன்றங்கள் செயல்படுகின்றன. டாஸ்மாக் கடைகளுக்கு முன்பாக காலை 11 மணிக்கு திறக்கப்படும் கடைகள், இரவு 11 மணி வரை இயங்குகின்றன. டாஸ்மாக் கடைகளில் உள்ள விலையைவிட சற்றே 20 முதல் 30 ரூபாய் அதிகம் என்று விற்கப்படுகிறது. இங்கு எப்போதுமே கூட்டம் அலைமோதுகிறது. இந்த சூழலில் மனமகிழ் மன்றங்களை ஆய்வு செய்ய போன கம்பம் தவெக எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா முன்னிலையில், தவெக நிர்வாகியை பார் ஊழியர்கள் அடித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
மனமகிழ்மன்றங்கள் எல்லாமே இன்றைய சூழலுக்கு டாஸ்மாக்போலவே செயல்படுவதாக சொல்கிறார்கள். ஏனெனில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக மனகிழ்மன்றங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல இடங்களில் திறக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. டாஸ்மாக் கடைகள் 4 ஆயிரம் என்றால், மனமகிழ்மன்றங்களும் ஆயிரக்கணக்கில் உள்ளதாக கூறப்படுகிறது. சென்னை சுற்றுவட்டாரங்களில் இல்லை என்றாலும், தேனி, கோவை, திருப்பூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கிராமப்புற பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.

அந்த வகையில் தேனி மாவட்டம் கம்பம், புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, சின்னமனூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட மனமகிழ் மன்றங்கள் செயல்படுகின்றன. இவை அரசு விதிமுறைகளை மீறிச் செயல்படுவதாகவும், உறுப்பினர்களுக்கு மட்டுமே மது வழங்க வேண்டிய நிலையில், விதிகளை மீறி மற்றவர்களுக்கும் மது விற்பனை செய்யப்படுவதாகவும், அனுமதியின்றி சூதாட்டம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாகவும் கம்பம் எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ராவிடம் பொதுமக்கள் குற்றம்சாட்டியிருந்தார்கள்.
இதையடுத்து கம்பம் தவெக எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா, போலீசார் மற்றும் த.வெ.க.வினருடன் கம்பத்தில் செயல்பட்டு வரும் மனமகிழ் மன்றத்திற்கு நேரில் சென்று திடீர் அண்மையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சஅவர் மன்றத்தின் நுழைவுவாயில் பகுதியில் நின்று, அரசு நிர்ணயித்துள்ள விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து மன்றத்தை நடத்த வேண்டும். விதிமுறைகளை மீறி செயல்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
அப்போது அங்கு வந்த கம்பம் மனமகிழ் மன்ற ஊழியர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள், த.வெ.க. நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் த.வெ.க. தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் நிஜந்தன் (22) என்பவரை மனமகிழ் மன்ற ஊழியர்கள் தாக்கியதாக சொல்லப்படுகிறது
இதுகுறித்து கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் தவெக நிர்வாகிகள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் கம்பம் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து கம்பம் தவெக எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா, புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் மனமகிழ் மன்றங்களிலும் ஆய்வு செய்தார். எம்.எல்.ஏ. ஆய்வின் போது தவெக நிர்வாகி தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.



Click it and Unblock the Notifications
