வருஷநாடு, மேகமலைக்காக நாங்கள் உயிர் தியாகம் செய்யக்கூட தயாராக உள்ளோம்.. கதிரவன் பேட்டி
தேனி: சட்டப்பேரவையில் வருஷநாடு, மேகமலை மக்கள் குறித்து தமிழக அரசு தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும், மக்களை வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொண்டால் "நாங்கள் உயிர் தியாகம் செய்யக்கூட தயாராக உள்ளோம் என அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி பொது செயலாளர் கதிரவன் பேட்டி அளித்தார்.
தேனி மாவட்டம் வருசநாடு, மேகமலை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராம மக்களை ஆக்கமிப்பாளர்கள் எனக் கூறி உச்ச நீதிமன்ற உத்தரவின்படி வனத்துறையினர் வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைக் கண்டித்து மலை கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக தேனி பங்களாமேடு பகுதியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி அவர்களை வெளியேற்றும் வனத்துறையினரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் கதிரவன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் விவசாய சங்கத்தினர் மலைவாழ் மக்கள் என 300க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்
மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்து மக்களை வெளியேற்ற நடவடிக்கை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, தேனி மாவட்டம் வருசநாடு, மேகமலை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மலை கிராம மக்களை வெளியேற்றும் உத்தரவை மறுபரிசலினை செய்யும் வகையில் தமிழக அரசு மறுசீரமைப்பு தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி மாநிலப் பொதுச் செயலாளர் கதிரவன், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து கோரிக்கை மனு அளித்தனர். தேனி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமாரிடம் மலைவாழ் மக்களின் போராட்டத்திற்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கையை வழங்கினர் .
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி பொதுச் செயலாளர் கதிரவன் பேசுகையில், "வருசநாடு, மேகமலை மலைவாழ் மக்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்து தீர்ப்பு வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டு வழக்கில் நீதிமன்ற தீர்ப்புகள் மறுபரிசீலனை செய்யப்பட்டது, அது போல் இந்த மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். 100 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் மக்களை எப்படி ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூற முடியும்? ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தது போல் மக்களின் தன்னெழுச்சி போராட்டம் நடைபெறும்.
மக்களை வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொண்டால் 'நாங்கள் உயிர் தியாகம் செய்யக்கூட தயாராக உள்ளோம்'. சட்டப்பேரவையில் வருஷநாடு, மேகமலை மக்கள் குறித்து தமிழக அரசு தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க என்ன செய்யப் போகிறார்கள் என மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்" இவ்வாறு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநில பொதுச் செயலாளர் கதிரவன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
