விஜயகாந்த்தே சொல்லிட்டாரு.. "நேரா கிளம்பி வந்துடுங்க".. திடீர்னு பறந்த தகவல்.. அனலடிக்கும் கோயம்பேடு
தேனி: விஜயகாந்த்தின் உடல்நிலையில் பின்னடைவு என்று செய்திகள் வெளியான நிலையில், அதுகுறித்து தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் ஒன்றை தந்துள்ளார்.
விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரன், 2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது, "அப்பா எப்படி இருக்கிறார்' என்று செய்தியாளர்கள் கேட்டனர்.. அதற்கு விஜயபிரபாகரன், "கேப்டனின் உடல்நிலை பின்னடைவாக உள்ளது" என்று கூறியிருந்தார்.

உடல் பின்னடைவு: விஜயகாந்த் உடல் பின்னடைவு என்று விஜயபிரபாகரன் சொன்னதுமே, தேமுதிக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மக்களும் அதிர்ந்து போனார்கள்.. மிகுந்த கவலையும் கொண்டார்கள். அத்துடன் தேமுதிக தொண்டர்களிடையே ஒருவித பரபரப்பும், பதற்றமும் ஒட்டிக்கொண்டுவிட்டது. பழைய விஜயகாந்த் திரும்பி வர வேண்டும் என்று பலபேர் பிரார்த்தனைகளிலும் ஈடுபட தொடங்கிவிட்டனர்.
அதுமட்டுமல்லாமல், திரையுலகை சேர்ந்தவர்களும், விஜயகாந்த்தை சந்திக்க உடனே கிளம்பி வீட்டுக்கு வருவதாகவும், சிலர் சந்திக்க நேரம் வேண்டும் என்று கேட்டார்களாம். அதற்கு, கேப்டன் நன்றாக இருப்பதாகவும், யாரும் இப்போது பார்க்க வர வேண்டாம் என குடும்பத்தினர் கூறிவிட்டதாகவும் தகவல் வெளியானது.
விஜயகாந்த்: பிறகு மறுநாளே, தேனியில் செய்தியாளர்களிடம் பிரேமலதா பேசியபோது, "கேப்டன் எப்படி இருக்கிறார் என்று நான் போகிற இடங்களிலெல்லாம் கேட்கிறார்கள்.. விஜயகாந்த் நன்றாகவே இருக்கிறார். நம்மோடு நூறு ஆண்டு காலம் இருந்து வழிநடத்துவார்... எப்போதுமே எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். நல்லவர்கள் வாழ்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர, வீழ்ந்ததாக இருக்கக் கூடாது. கேப்டன் விஜயகாந்த்தை போன்ற நல்லவர்கள் வாழ வேண்டும்.
அதைப்பார்த்து ஒரு 100 பேர் மக்களுக்கு உதவி செய்வார்கள். தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய மாநாட்டை தேமுதிக நடத்த போகிறது.. அதற்கு நிச்சயம் விஜயகாந்த் வரப்போகிறார்.. அதனால், தொண்டர்கள் எதற்கும் பயப்பட தேவையில்லை என்றார்.
பெருத்த நிம்மதி: பிரேமலதா தந்த இந்த விளக்கமும், நம்பிக்கையும், விஜயகாந்த்தை உயிருக்கு உயிராக நேசித்து கொண்டிருக்கும், லட்சக்கணக்கான மக்களுக்கு நிம்மதி உணர்வை தந்தது.. அதேபோல, ஒவ்வொரு பிறந்தநாளன்றும் அதாவது ஆகஸ்ட் 25ம் தேதி, தொண்டர்களை விஜயகாந்த் நேரில் சந்திப்பது வழக்கம்.. கடந்த வருடமும் கோயம்பேடு ஆபிசில் பிறந்தநாள் விழா அமர்க்களமாக கொண்டாடப்பட்டது.
"எங்க ஆயுசைகூட அவருக்காக தந்துடறோம்.. 200 வருஷம் கேப்டன் வாழ வேண்டும்.. எங்களுக்கு சாப்பாடு வேணாம், ஒன்னும் வேணாம்... எங்க கேப்டனை, ஒரு நாளைக்கு ஒருமுறை எங்க கண்ணில் காட்டினால் போதும்.. மக்களே, மக்களே என்று அவர் கூப்பிடும் அந்த வார்த்தைக்காக ஏங்கி கிடக்கிறோம்" என்று கடந்த வருட பிறந்தநாளின்போது, தேமுதிக மகளிரணியினர் அழுதுகொண்டே சொன்னதை நாம் மறக்க முடியாது. அந்தவகையில், இந்த வருடமும் தொண்டர்களை சந்திக்க உள்ளதாக தெரிகிறது.
அறிக்கை: இப்படிப்பட்ட சூழலில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "கடந்த 2006-ம் ஆண்டு முதல் எனது பிறந்தநாளை 'வறுமை ஒழிப்பு தினமாக' கடைபிடித்து வருகிறேன். கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் அவர்களால் முடிந்த அளவுக்கு மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில், கடந்த காலங்களில் இலவச வீட்டு மனை நிலங்கள், இலவச திருமணம், பெண் குழந்தைகள் வைப்பு நிதி, இலவச கணினி பயிற்சி மையம் உள்ளிட்ட பல்வேறு நல உதவிகள் செய்யப்பட்டன. மேலும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு ஆண்டுதோறும் வழங்குவதுபோல, மதிய உணவு மற்றும் நிதியுதவியாக ரூ.50 ஆயிரம் இந்த ஆண்டும் வழங்கப்படும்.
விஜயகாந்த்: இதேபோல், கட்சிக் கொடியை அனைத்து இடங்களிலும் ஏற்றி நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏழை மக்களுக்கு இந்த வறுமை ஒழிப்பு தினத்தில் நலத்திட்டங்களை வழங்க வேண்டும். என்னுடைய உடல்நலம் குறித்த வதந்திகளை யாரும் நம்பவேண்டாம். நான் நலமுடன் இருக்கிறேன்.
கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை கழகத்தில் எனது பிறந்தநாளில் நாளை காலை 10 மணிக்கு கழக நிர்வாகிகளையும், கழக தொண்டர்களையும் நேரில் சந்திக்க உள்ளேன். என்னை சந்திக்க வரும் கழக தொண்டர்கள் யாரும் பொக்கே, சால்வை, மாலை போன்ற அன்பளிப்புகளை தவிர்க்க வேண்டும்" என்று விஜயகாந்த் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார். அந்தவகையில், விஜயகாந்த் பிறந்தநாள் நெருங்கிவிட்டதால், அவரை நேரில் காண தொண்டர்கள் ஜரூராக தயாராகி கொண்டிருக்கிறார்கள்..!!!












Click it and Unblock the Notifications