திமுகவின் 28 வருட கனவு.. நினைவாக்கிய தேனி தங்க தமிழ்செல்வன்.. ஓபிஎஸால் மறக்க முடியாத நபர்
தேனி: தேனி தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் தனது குருவான டிடிவி தினகரனை 2 லட்சத்து 78 ஆயிரத்து 825 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். அதிமுகவில் அரசியலை தொடங்கிய தங்க தமிழ்செல்வன் அமமுகவில் சேர்ந்து பின்னர் திமுகவில் இணைந்தார். இப்போது திமுகவில் தனது சொந்த தொகுதியில் எம்பியாகி உள்ளார்.
தேனி லோக்சபா தொகுதியில் திமுக வேட்பாளராக தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்க தமிழ்செல்வன் போட்டியிட்டார். அ.தி.மு.க. வேட்பாளராக வி.டி.நாராயணசாமியும், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக வேட்பாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும் போட்டியிட்டனர். அத்துடன் நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் உள்பட மொத்தம் 25 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

தேனி தொகுதியில் மொத்தம் 16 லட்சத்து 22 ஆயிரத்து 949 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 9,500 தபால் வாக்குகள் உள்பட 11 லட்சத்து 43 ஆயிரத்து 159 வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த தேர்தலில் பதிவான தபால் வாக்குகளில் 1,939 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.
தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கியது. 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணிக்கை நடந்தது. முதல் சுற்றில் இருந்தே தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் முன்னிலை வகித்து வந்தார். டி.டி.வி.தினகரன் முதல் சுற்றிலேயே பின்னடைவை சந்தித்தார். அந்த பின்னடைவு இறுதிச் சுற்றுவரை அவரை பின் தொடர்ந்தது. 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிவில் தங்கதமிழ்செல்வன் 5 லட்சத்து 71 ஆயிரத்து 493 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். டி.டி.வி.தினகரன் 2 லட்சத்து 92 ஆயிரத்து 668 வாக்குகள் பெற்று 2-வது இடம் பிடித்தார். டி.டி.வி.தினகரனை விடவும், 2 லட்சத்து 78 ஆயிரத்து 825 வாக்குகள் அதிகம் பெற்று தங்கதமிழ்செல்வன் அபார வெற்றி பெற்றார். 3-வது இடம் பிடித்த அ.தி.மு.க. வேட்பாளர் வி.டி.நாராயணசாமி 1 லட்சத்து 55 ஆயிரத்து 587 வாக்குகள் பெற்று டெபாசிட் தொகையையும் பறிகொடுத்தார்.
தங்கத் தமிழ்செல்வன் வரலாறு: தேனி மாவட்டம் நாராயணத்தேவன் பட்டியைச் சேர்ந்தவர் தங்க தமிழ்செல்வன், 60 வயது இவரது அரசியல் வாழ்க்கை அதிமுகவில் தொடங்கியது. ஆண்டிபட்டி தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த தங்க தமிழ்செல்வன் ஜெயலலிதாவிற்காக தனது பதவியை ராஜினாமா செய்தார் அதன்பிறகு ராஜ்யசபா எம்பியாக அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. உடைந்தது. டி.டி.வி. தினகரன் தலைமையில் அமமுக உதயமானது. அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. தங்க தமிழ்செல்வன் அமமுகவிற்கு தாவினார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் (2019) அ.ம.மு.க. சார்பில் தேனி தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கி, ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரிடம் படுதோல்வி அடைந்தார்.
இதையடுத்து அதிமுகவில் சேர விரும்பிய தங்கத்தை ஓ பன்னீர்செல்வம் சேரவிடாமல் தடுத்ததாக கூறப்பட்டது. ஓ பன்னீர்செல்வத்துடன் சுமூகமான உறவில் இல்லாத காரணத்தாதல் தங்க தமிழ்செல்வன் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் (2021) போடி சட்டமன்ற தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து போட்டியிட்டு அவரிடமும் தோல்வி அடைந்தார்.
இந்த 2 தேர்தலிலும் தோல்வியை சந்தித்தாலும் திமுக முழு நம்பிக்கையுடன் தேனி நாடாளுமன்ற தொகுதியில் தங்கத்தமிழ்செல்வனை வேட்பாளராக அறிவித்தது. அவரை எதிர்த்து அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நின்றதால் தேனியில் அனல் பறந்தது. இந்த நிலையில் தேனி தொகுதியில் தங்க தமிழ்செல்வன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க. கூட்டணி தேனி தொகுதியை மட்டும் பறிகொடுத்து இருந்தது. தற்போது அந்த தொகுதியில் தி.மு.க. கூட்டணி வெற்றி அடைந்துள்ளது. 28 வருடங்களுக்கு பிறகு தேனி தொகுதியில் திமுக வென்றுள்ளது.












Click it and Unblock the Notifications