அம்மா வேண்டாம்.. சபாநாயகர் தாத்தா போதும்.. கொஞ்சி விளையாடிய அப்பாவுவை விட்டு பிரிய மறுக்கும் குழந்தை
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பணகுடியில் பொதுமக்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு ஒரு குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
சட்டசபை சபாநாயகராக இருக்கும் அப்பாவு சட்டசபை நிகழ்வுகளில் நீண்ட அனுபவம் கொண்டவர். காங்கிரஸ் கட்சியில் தன் அரசியல் பயணத்தை தொடங்கினார். இதையடுத்து தமிழ் மாநில காங்கிரஸை மூப்பனார் தொடங்கிய போது அதில் தன்னை இணைத்துக் கொண்டு 1996 ஆம் ஆண்டு ராதாபுரம் தொகுதியில் போட்டியின்றி தேர்வானார்.
2001 ஆம் ஆண்டு சுயேச்சையாக அந்த தொகுதியில் போட்டியிட்டு வெல்லும் அளவுக்கு மக்களிடம் நன்மதிப்பை சம்பாதித்தார். இதையடுத்து திமுகவில் இணைந்தார் அப்பாவு. அங்கு 2006ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலல் ராதாபுரத்திலேயே போட்டியிட்டு வென்றார். 2011 ஆம் ஆண்டு அந்த தொகுதி கூட்டணி கட்சிக்காக ஒதுக்கப்பட்டதால் அவர் போட்டியிடவில்லை.

சட்டசபை தேர்தல்
இதையடுத்து 2016ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பதுரையிடம் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். தபால் வாக்குகள் எண்ணுவதில் முறைகேடு நடந்ததாக கூறி உச்சநீதிமன்றம் வரை சென்றார். இந்த நிலையில் இந்த தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் இன்பதுரையை விட 4,492 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியடைந்து சபாநாயகராகவும் தேர்வாகியுள்ளார்.

தொகுதி மக்கள்
தனது நேர்மையாலும் தொகுதி மக்கள் மீது கொண்ட அன்பினாலும் ராதாபுரம் மக்கள் இவருக்கு வெற்றியை தருகிறார்கள். சபாநாயகர் பணியையும் எந்தவித குறையும் இல்லாமல் செய்து வருவதாக பாராட்டுகள் குவிகின்றன. ஆளும் கட்சியினரே தேவையில்லாமல் எதையாவது பேசினால் அவரை சபாநாயகர் அப்பாவு அமைதி காக்குமாறு கட்டுப்படுத்துகிறார்.

சொந்த ஊர்
எத்தனையோ பணிகளுக்கு மத்தியில் சொந்த ஊரில் இருக்கும் போது தொகுதி மக்களை சந்திப்பதை அப்பாவு வாடிக்கையாகவே கொண்டுள்ளார். அவர் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வையும் கொண்டு வருகிறார். இந்த நிலையில் நெல்லை மாவட்டம் பணகுடிக்கு அவர் அடிக்கடி செல்கிறார். காரணம் அப்பாவு அந்த தொகுதிக்கு எம்எல்ஏவாக இல்லாவிட்டாலும் அவரை அப்பாவு எம்எல்ஏ என்றே பணகுடி மக்கள் அழைத்து அன்பை பொழிகிறார்கள்.

அன்பை பொழியும் மக்கள்
மக்கள்தான் அன்பை பொழிகிறார்கள் என்றால் ஒரு சின்ன குழந்தையும் அம்மாவே வேண்டாம் சபாநாயகர் தாத்தா போதும் என்ற அளவுக்கு போய்விட்டது. ஒரு இடத்தில் மக்களை சந்தித்து அப்பாவு நலம் விசாரிக்கிறார். அப்போது குழந்தையை வைத்திருக்கும் பெண்ணிடம் போய் அந்த குழந்தையை கொஞ்சுகிறார். உடனை அப்பாவுவிடம் தாவுகிறது அந்த குழந்தை, சிறிது நேரம் அவரிடம் விளையாடும் குழந்தையை அவருடைய அம்மா கையை நீட்டி அழைக்கிறார்.

முகத்தை திருப்பி கொள்ளும் குழந்தை
நீ வேண்டாம் என சொல்லாமல் சொல்லி அந்த குழந்தை முகத்தை திருப்பிக் கொள்கிறது. அது போல் அந்த குழந்தையின் பாட்டி வந்து அழைத்தாலும் கையை தட்டி விடுகிறது. அப்பாவுவுடன் விளையாடும் அந்த குழந்தை குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் அந்த குழந்தை தனது அம்மாவை தவிர யாரிடமும் செல்லாதாம். ஆனால் இன்று சபாநாயகரை விட்டு அந்த குழந்தை வரவே இல்லை. இதனால் அந்த இடத்தில் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications