நெல்லை குற்றச் சம்பவங்களை சினிமாவில் வைத்தால் கூட நம்ப மாட்டார்கள்.. கலெக்டர் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மாவட்ட குற்றச் சம்பவங்களை சினிமாவில் வைத்தால் கூட நம்ப மாட்டார்கள் என கருத்தரங்கில் ஆட்சியர் கார்த்திகேயன் உருக்கமாக பேசினார். மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் சென்னை பத்திரிகை தகவல் பணியகம் சார்பில் ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கம் நெல்லையில் நடைபெற்றது. இதனை நெல்லை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அப்போது பேசிய நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், "நவீன தொழில்நுட்பம் பெருகிவரும் இக்காலத்தில் எது உண்மை, எது பொய் என்பதைக் கண்டறிவது கடினமாக உள்ளது. ஏ.ஐ. மற்றும் டீப்ஃபேக் தொழில்நுட்பங்கள் அதிகரித்துவிட்டன. போலியானவற்றைப் பயன்படுத்திப் பணம் பறிக்கும் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

Crime incidents in Nellai surpass even the movies says Collector Karthikeyan

சினிமாவை மிஞ்சும் சம்பவங்கள்

நெல்லை மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். அதன்பின்னர் கரடி தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நடந்தது. அந்தச் சம்பவ இடத்திற்கு வந்த நபரும் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டார். இதில் கொலை செய்யப்பட்ட நபர் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதும், பல ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த அவர் மீண்டும் நெல்லைக்கு வந்தபோது கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. சினிமாவில் இதுபோன்ற காட்சிகளை வைத்தால் கூட யாரும் நம்ப மாட்டார்கள் என்ற அளவுக்குச் சம்பவங்கள் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றன.


இளைஞர்களே அதிகம்

சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில் நெல்லை மாவட்டத்தில் தினமும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கைக்காகச் சுமார் 150 பக்கக் கோப்புகளில் கையெழுத்திட வேண்டிய நிலை உள்ளது. ஒரு நாளில் 5 முதல் 6 கோப்புகள் வரை ஆய்வு செய்து, சுமார் 1 முதல் 2 மணி நேரம் கையெழுத்திட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று கையெழுத்திடும் போதெல்லாம் மனவேதனை ஏற்படுகிறது. இளம் வயதிலேயே குற்றச் செயல்களில் ஈடுபட்டு குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகும் பலரும் 19 முதல் 23 வயதுக்குட்பட்டவர்களாகவே உள்ளனர். அவர்களில் பலர் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு அடிமையாக இருப்பதுடன், ஒவ்வொருவர் மீதும் 5 முதல் 6 வழக்குகள் வரை இருப்பதும் தெரியவந்துள்ளது.

நெல்லை குற்றசெயல்களுக்கு போதை காரணம்

நெல்லை மாவட்டத்தில் இளைஞர்கள் ஏன் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர் என்பது குறித்து ஆய்வு செய்தபோது, பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தியது, கல்வி அமைப்பு அவர்களைச் சரியாக வழிநடத்தத் தவறியது, வேலைவாய்ப்பு கிடைக்காத நிலை மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் தாக்கம் ஆகியவையே முக்கியக் காரணங்களாக இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, இளைஞர்களின் வளர்ச்சிக்கும் மாவட்டத்தின் வளர்ச்சிக்கும் போதையில்லா நெல்லை மாவட்டத்தை உருவாக்குவது மிகவும் அவசியமாகும்.


நெல்லையில் போதைப்பொருள் புழக்கம்

போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தக் காவல்துறையும் நெல்லை மாவட்ட நிர்வாகமும் இணைந்து பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மாவட்டத்தில் சோதனைச் சாவடிகள் அதிகரிக்கப்பட்டு, கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் பலர் கைது செய்யப்படுவதுடன், போதைப்பொருட்களும் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இளைஞர்கள் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நெல்லை மாவட்டத்தில் சாதி மோதல்கள்

அதேபோல், நெல்லை மாவட்டத்தில் சாதி ரீதியான மோதல்களும் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகின்றன. சாதி மோதல்கள் மற்றும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தப் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கு முழுமையாகத் தீர்வு காணப்பட்டால் மட்டுமே நெல்லை மாவட்டம் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கிச் செல்ல முடியும்.


சட்டம் ஒழுங்கு பிரச்சனை

நெல்லை மாவட்டத்தின் தொழில் மற்றும் வேலைவாய்ப்பைப் பெருக்கும் வகையில் மூலைக்கரைப்பட்டி மற்றும் மறுகால்குறிச்சி பகுதிகளில் சிப்காட் (SIPCOT) அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதுடன், புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்குத் தீர்வு காணாமல் மாவட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியாது என்பதால், பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மூலம் நெல்லை மாவட்டத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல முயற்சிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

நெல்லையில் அதிக வெப்பநிலை

கடந்த 2023-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது நெல்லை மாவட்டம் மிகப்பெரிய பாதிப்பைச் சந்தித்தது. தற்போது உலகம் முழுவதும் எல்-நினோ தொடர்பான வானிலை மாற்றங்கள் நிலவி வரும் நிலையில், தமிழகத்திலேயே அதிகபட்ச வெப்பநிலை நெல்லை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் கணிக்க முடியாத அளவுக்கு அதிக மழைப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

மழை பெய்தாலும், பெய்யாவிட்டாலும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைத்துத் துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம்" எனத் தெரிவித்தார்.


குண்டர் தடுப்பு சட்டம்

நெல்லை மாநகரில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், தொடர் குற்றச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின் பேரில் மாநகர பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை, குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நெல்லை மாநகரில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 124 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் நெல்லை மாவட்டத்தில் எஸ்பி விஸ்வேஷ் பா.சாஸ்திரி பரிந்துரையின்பேரில் 100 பேர் மீதும், தென்காசி மாவட்ட எஸ்பி அசோக்குமார் பரிந்துரையின்பேரில் 91 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மொத்தமாக நெல்லை மாநகர், மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களில் 315 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்திருக்கிறது.

பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக செயல்படும் தொடர் குற்றவாளிகள், ரவுடிகள், சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் தொடர்ந்து கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக போதைப்பொருள் கடத்தல், பாலியல் குற்றங்கள், கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களில் தொடர்புடையவர்களின் பின்னணியை போலீசார் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கின்றனர்.

யார் மீது குண்டர் சட்டம் அதிகம் பாய்ந்துள்ளது

போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை சம்பவங்களில் ஈடுபட்ட 97 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் மாணவர்களை குறிவைத்து போதைப்பொருட்களை விற்பனை செய்யும் கும்பல்களை ஒடுக்க போலீசார் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்கள். அதேபோல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் பாலியல் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட 23 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ரவுடிகள், தொடர் குற்றவாளிகளுக்கு கடிவாளமிடும் வகையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+