சீமானுக்கு ஜெயக்குமார் வைத்த செக்! எல்லா கதவுகளும் அடைப்பு! அம்பையில் தனித்துவிடப்படுகிறதா நாதக?
திருநெல்வேலி: தமிழக வெற்றி கழகத்தை அனைத்து கட்சிகளுடன் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை கொண்டு எதிர்க்க வேண்டுமென்ற கருத்தில் அதிமுகவுக்கு உடன்பாடில்லை. ஆளுங்கட்சியாக பல ஆண்டுகள் இருந்த அதிமுக, எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக நெல்லையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அம்பாசமுத்திரத்தில் சீமான் பொது வேட்பாளராக ஏற்றுக் கொள்ளப்படமாட்டார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: "தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் அதிகரிப்பு, காவல் நிலைய மரணங்கள், சிறை மரணங்கள், விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு, மின்வெட்டு உள்ளிட்ட பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன.
சட்டம் ஒழுங்கு
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது, தீபாவளி பண்டிகையின்போதுகூட பல்வேறு கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. முதலமைச்சர் இதுகுறித்து உரிய கவனம் செலுத்தவில்லை. காவல்துறையையும் உள்ளடக்கிய உள்துறையை முதலமைச்சரே தனது பொறுப்பில் வைத்துள்ளதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து அவர் நேரடியாக பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும்.
கொலைகளின் எண்ணிக்கை
கொலைகளின் எண்ணிக்கையை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பேசுவதைவிட குற்றங்களைத் தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதைத் தெரிவிக்க வேண்டும். மதுரை தனிஷ்க் நகைக் கடையில் கட்டடங்கள் சேதமடையாமல் உள்ளே இருக்கும் நகைகள் மட்டும் கொள்ளையடிக்கப்படும் அளவுக்கு விஞ்ஞான முறையில் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன.
டாஸ்மாக் பணம்
டாஸ்மாக் பணம் வங்கிக்கு எடுத்துச் செல்லப்படும்போதும் கொள்ளை நடைபெற்றுள்ளது. மதுரையில் ரூ.50 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் இதற்கு உதாரணம், மாவட்ட ஆட்சியர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. கள்ளக்குறிச்சியில் பெண் மாவட்ட ஆட்சியருக்கு பாலியல் ரீதியான தொந்தரவு அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்திலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது, பால் விலை, மின் கட்டண உயர்வு, மின்வெட்டு ஆகியவற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக ஆட்சி
அதிமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட தாலிக்குத் தங்கம், மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி உள்ளிட்ட திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுத் தரப்படும்.
ஜெயலலிதா பெயர்
தற்போது ஜெயலலிதாவின் பெயரை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். அவர் நடத்திய ஆட்சியைப் போன்று ஆட்சி நடைபெறவில்லை. ஜெயலலிதாவின் நினைவு மண்டபமே இருளில் மூழ்கிக் கிடக்கிறது. அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் பொதுவேட்பாளர் நிறுத்துவது தொடர்பான முடிவு கட்சியின் கொள்கை முடிவைப் பொறுத்தது.
தவெக
தமிழக வெற்றிக் கழகத்தை அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என்ற கருத்தில் அதிமுகவுக்கு உடன்பாடு இல்லை. பல ஆண்டுகளாக ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக எந்தச் சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளது" என தெரிவித்தார்.
இரு சட்டசபை இடைத்தேர்தல்
தமிழகத்தில் நடந்து முடிந்த மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டசபை இடைத்தேர்தல்களில் அதிமுக, திமுக, தவெக, கம்யூனிஸ்ட், நாதக ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இதில் தவெக வென்றது. விஜய் ஆட்சியின் அவலங்களை பிரச்சாரத்தில் சொல்லியும் அது வொர்க் அவுட் ஆகவில்லை.
வாக்கு பிரிந்தது
மேலும் அனைத்து கட்சியினரும் தனித்தனியே போட்டியிட்ட போதிலும் வாக்குகள் மட்டுமே பிரிந்தனவே தவிர , வேறு எந்த மாற்றமும் நடைபெறவில்லை. தவெகவை வீழ்த்த பொது வேட்பாளர் அவசியம் என பாமக தலைவர் அன்புமணி மட்டும் குரல் கொடுத்திருந்தார். இதனால் தற்போது பொது வேட்பாளர் என்ற பெயர் அடிபடுகிறது.
சீமானுக்கு ஏமாற்றம்
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே அவர்தான் போட்டியிட போவதாக அறிவித்துவிட்டார். அதிமுக, திமுக ஆகியவை தன்னை பொது வேட்பாளராக அறிவித்தால் நிச்சயம் ஏற்பேன் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பொது வேட்பாளர் என்ற கருத்துக்கு உடன்படவில்லை என அதிமுக சொல்லிவிட்டது. மேலும் கடந்த தேர்தலில் அம்பாசமுத்திரத்தில் அதிமுக வென்றுள்ளது. எனவே இந்த முறையும் நாம் வேட்பாளரை நிறுத்தினால் நிச்சயம் வெல்வோம் என அதிமுக கருதும்.
அம்பையில் திமுக, அதிமுக
அது போல் அம்பையில் கடந்த தேர்தலில் 2ஆவது இடத்தில் வென்றிருப்பது திமுகவுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி!, தற்போது காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணிக்கு சென்றுவிட்டதால், திமுக வேட்பாளரை நிறுத்தினால் நிச்சயம் வெல்லலாம் என திமுகவும் கருதும். ஏறக்குறைய அதிமுகவுக்கும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கும் இடையே வாக்கு வித்தியாசம் 10,245 வாக்குகள்தான் என்பதால் திமுகவும் இந்த தொகுதியில் போட்டியிடவே விரும்பும் என சொல்லப்படுகிறது.
எல்லாவற்றுக்கும் மேல் இரு கட்சிகளும் பொது வேட்பாளரை நிறுத்தினால் விஜய்யும், ராஜினாமா செய்த அதிமுக எம்எல்ஏக்கள் சொன்ன, "திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றது" என்ற குற்றச்சாட்டு உண்மையாகிவிடும். எனவே அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் கதவை அடைத்துக் கொண்டதால் சீமானுக்கு இந்த தேர்தலிலும் ஏமாற்றமே மிஞ்சும் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications
