'மீனாட்சி நாச்சியாருக்கு அறிவுரை சொல்ல வேண்டிய தாயே ஆலோசனை கூறும் அவலம்'.. கிருஷ்ணசாமி விமர்சனம்
திருநெல்வேலி: "ஃபீல் பண்ணாதே, சரியா... கிளியரா பேசு. எல்லாரும் இருக்கோம், தைரியமாய் இரு. என்ன நடந்துச்சோ அதை மட்டும் சொல்." - தனிஷ்க் நகைகடை கொள்ளைக் கூட்டணி மீனாட்சி நாச்சியாருக்கு அறிவுரை சொல்ல வேண்டிய தாயே குற்றத்தை மறைக்க ஆலோசனை கூறும் அவலம்! மகளின் திருட்டு நடவடிக்கை தாய்க்கு குற்றமாக தென்படவில்லையா? திருடவும் கற்றுத் தரும் தமிழ் திரைப்படங்களும், சமூக வலைதளங்களும்! கள்ளும், களவும், கயமையும், காமமும், கொலையும் தவிர்க்க சிலப்பதிகாரம் கற்றுக் கொடுத்த பாடம் என்ன ஆயிற்று? என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "மதுரை தனிஷ்க் (Tanishq) நகைக்கடையில் கொள்ளையடித்த நகையைப் பதுக்கி வைத்த யூடியூப் பிரபலம் மீனாட்சி நாச்சியாரைக் கைது செய்து அழைத்துச் செல்லும்போது, நீதிபதியின் வீட்டு வாசலிலேயே காவல்துறை வாகனத்தில் மீனாட்சி ஏறிச் செல்லும் போது, "அழாதே, ஃபீல் பண்ணாதே, சரியா... கிளியரா பேசு. எல்லாரும் இருக்கோம், சரியா? தைரியமா இரு. என்ன நடந்ததோ அதை மட்டும் சொல்லு" - இவை இன்னொரு யூடியூபரும் கொள்ளையருமான மீனாட்சி நாச்சியாரின் தாயாரிடமிருந்து உதிர்ந்த வார்த்தைகள்.

இதுபோன்ற தவறான சம்பவங்களில் தனது பிள்ளைகள் ஈடுபட்டிருந்தால், பதறிப்போன எந்த ஒரு தாயும், "குடும்பத்திற்கு இவ்வளவு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டு விட்டாயே, இதற்காகவா உன்னைப் பெற்றேன்? நீ என் பிள்ளையே இல்லை!" என்றல்லவா ஆதங்கத்தில் திட்டித் தீர்த்திருப்பார்கள்.
ஆனால், 20 கிலோ தங்க நகைத் திருட்டு வழக்கில் மீனாட்சி நாச்சியாரின் குடும்ப உறுப்பினர்களின் நடவடிக்கைகள் நேர் எதிர்மாறாக உள்ளது. "அழாதே, ஃபீல் பண்ணாதே" என்று கூறுவதைப் பார்த்தால், செய்த கொள்ளைச் செயல் தவறில்லை என்று தாய் மகளுக்குச் சொல்வது போல் அல்லவா உள்ளது?
"எல்லாரும் இருக்கோம்" என்றால், 'நீ ஒன்றும் கவலைப்படாதே, நாங்கள் எப்படியும் உன்னைக் காப்பாற்றி விடுவோம்' என்பதுதானே பொருள்? மேலும், "என்ன நடந்ததோ அதை மட்டும் சொல்" என்பதன் பொருள், 'தனிஷ்க் திருட்டுச் சம்பவத்தை மட்டும் பேசு; இதற்கு முன் ஈடுபட்ட பிற திருட்டுச் சம்பவங்கள் குறித்து எதுவும் சொல்லி விடாதே; அல்லது எடுத்துக் கொடுத்த 5 கிலோ நகையோடு மட்டும் நிறுத்திக் கொள், மீதி 15 கிலோ நகைகள் பற்றி எதுவும் சொல்லி விடாதே' என்பதுதானே அதன் பொருள்?
இக்கொள்ளையானது, தனி ஒரு நபரால் திட்டமிடப்பட்டிருக்க முடியாது; இது ஒரு பெரிய கூட்டுக் கொள்ளையாக இருந்திருக்க வேண்டும் என்பதே இதன் வெளிப்பாடாகத் தோன்றுகிறது. இச்சம்பவத்தில், 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை அடையாளம் கண்டு, பதுக்கி வைத்த நகைகளை 36-ஆவது மணி நேரத்தில் கைப்பற்றி, 72-ஆவது மணி நேரத்தில் தலையாய குற்றவாளியான நிஷாந்தையும் காவல்துறை கைது செய்தது பாராட்டுக்குரியது. அதேபோல அக்கும்பலிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து நகைகளும் கைப்பற்றப்பட வேண்டும்.
இத்தோடு காவல்துறை திருப்தி அடைந்துவிடக் கூடாது. இனி தமிழகத்தில் இதுபோன்ற பெரும் கொள்ளைச் சம்பவங்கள் மட்டுமல்ல; வீடு புகுந்து திருடுவது, வழிப்பறி, ஆடு மாடு திருடுவது, இருசக்கர வாகனத் திருட்டு மற்றும் தனிமையில் வாழும் முதியோரை தாக்கித் திருடுவது என எண்ணற்ற வகைகளில் தினமும் திருட்டு நடைபெறுகிறது. எல்லா குடிமக்களும் வசதியானவர்கள் அல்ல. எனவே, தங்களின் சிறிய சேமிப்புகள் கூடக் கொள்ளை போகும் பொழுது, எளிய மக்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகிறார்கள். அதுபோன்ற சமயங்களில் காவல்துறை வழக்கு கூட பதிவு செய்வதில்லை. தனிஷ்க் வழக்கில் காவல்துறை எவ்வளவு வீரியம் காட்டுகிறதோ, அதேபோல எளிய மக்களின் திருட்டு வழக்குகளிலும் வீரியம் காட்ட வேண்டும்.
1988-ஆம் ஆண்டு இதே மதுரை அண்ணா நகரில் அரசு வங்கியில் ஒரு மிகப்பெரிய கொள்ளைச் சம்பவம் நடந்தது. அதில் அன்றைய முன்னாள் மேயர் முத்துவின் மகன் நல்லதம்பி உட்பட ஏறக்குறைய 20-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, ஒன்றரை மாதத்திற்கு மேலாகச் சிறப்பு முகாமில் வைத்து விசாரிக்கப்பட்டார்கள். இதில் நல்லதம்பி, பிரசித்தி பெற்ற ஒரு அரசியல்வாதியினுடைய மகனாக இருந்தும் எவ்வித சலுகையும் காட்டப்படவில்லை; 10 ஆண்டுகாலம் தண்டனை விதிக்கப்பட்டது.
அதேபோல 1987-ஆம் ஆண்டு அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் பட்டப்பகலில் வங்கியில் கொள்ளையடிக்கச் சென்ற தமிழர் விடுதலைப் படைத் தலைவர் தமிழரசன் அப்பகுதியில் நன்கு அறிமுகமான போராளியாக இருந்தும் தாக்குதலுக்கு ஆளானார்.
1997 ஆம் ஆண்டு கோவை, ஈரோடு மாவட்டங்களில் பெருமளவில் ஆடுகள் திருடப்பட்டன. அப்போது விவசாயிகள் இரவு பகலாக காவல்காத்து திருடர்கள்மீது நடத்திய தாக்குதலில் 5 பேர் மாண்டுபோனார்கள். அச்சமயம் அது மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட செய்தியாக இருந்தது.
2012-ஆம் ஆண்டு மடிப்பாக்கத்தில் வங்கி அதிகாரிகளைக் கட்டிப் போட்டுக் கொள்ளையடித்த வழக்கில், பதுங்கியிருந்த வடமாநிலத்தவர் என்கவுன்டர் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்.
சேலத்திலிருந்து சென்னை வழியாகச் சென்ற ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூபாய் நோட்டுகள் கொள்ளையில், பல மாதங்களுக்குப் பின்பு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்கள். அதற்குப் பிறகு, அதுபோன்ற பெரிய கொள்ளை சம்பவங்கள் அண்மையில் எதுவும் தமிழகத்தில் நடைபெறவில்லை; மதுரை தனிஷ்க் கொள்ளைச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாடு அமைதியாக இருக்க வேண்டுமேயானால்; கள், களவு, கயமை, காமம், கொலை உள்ளிட்ட ஐந்து தீய குணங்களும் சமூகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும். மேலும், இக்கொள்ளைச் சம்பவத்திற்கு திட்டமிட்டது, செயல்படுத்தியது என அனைத்திற்குமே சில பிரசித்திப் பெற்ற தமிழ் நடிகர்களின் திரைப்படத்தின் காட்சிகள் தான் தூண்டுதலாக இருந்ததாக செய்திகள் வெளிவருவது அதிர்ச்சியளிக்கக்கூடியது. சினிமாவுடன், சமூக வலைத்தளங்களும் இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர்களும் (Instagram Influencers) கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதும், ஈடுபட தூண்டுவதும் பெரும் சமூக அவலமாகும்.
மதுரை கொள்ளைச் சம்பவத்தை முன்மாதிரியாகக் கொண்டு, தமிழகத்தில் இனி இதுபோன்று எவ்வித கொள்ளை - திருட்டுச் சம்பவங்கள் நடந்திடாத வண்ணம் அனைத்து விதமான முன்னெச்சரிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
தங்களுடைய உழைப்பு கொள்ளை போய்விடுமோ என்ற அச்சத்தை பொதுமக்களிடமிருந்து நீக்கக்கூடிய வகையில், காவல்துறையின் இரவு நேர ரோந்துகள் அதிகரிக்கப்பட வேண்டும்.
சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரின் பின்னணி முறையாக ஆய்வு செய்யப்பட வேண்டும். பேராசை கொண்ட ஒரு சமுதாயம் சமூக வலைத்தளங்களால் உருவாக்கப்பட்டுவிட்டது. தாங்கள் என்ன செய்கிறோம் என்பதுகூட அவர்களுக்குப் புரிவதில்லை. எந்த இளைஞர் சமுதாயம் இந்த நாட்டைக் கட்டிக் காப்பார்கள், முன்னோக்கிச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டதோ, அவர்களாலேயே பாலியல் துன்புறுத்தல்கள், களவுகள், கொலைகள் என அனைத்து விதமான சமூகச் சீர்கேடுகளும் நடைபெறுகின்றன. இளம் பெண்களும் அருவருக்கத்தக்க ஆபாச வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது மிகப்பெரும் வேதனையாக இருக்கிறது. எதிர்காலத் தலைமுறையினரை நவீன சமூக ஊடகங்களும் வலைத்தளங்களும் அழித்துவிடுமோ என்ற அச்சம் உருவாகி வருகிறது.
வருங்காலம் அமைதியானதாக இருக்க வேண்டும் என்றால் காவல் துறை, தொழில்நுட்பத் துறை, கல்வித்துறை, செய்தித் துறை எனப் பல துறைகளும் இணைந்து திரைப்படங்கள், சமூக வலைதளங்களான முகநூல், எக்ஸ் தளம், இன்ஸ்டாக்ராம், யூடியூப் ஆகியவற்றில் திட்டமிட்டு இளைஞர்களை தவறான வழி காட்டக்கூடிய ஆபாசம், அருவாள் கலாச்சாரம், மிதமிஞ்சிய வன்முறை, சாதிய தூக்கல்கள், மது, போதை, புகை பயன்பாடு உட்பட அனைத்தையும் கட்டுப்படுத்த உரிய வழிமுறைகளை காண வேண்டும் என்பதே இச்சம்பவங்கள் நமக்கு எடுத்துச்சொல்லும் பாடமாகும்.




Click it and Unblock the Notifications
