அமெரிக்கா, சீனா எல்லாம் ஓரம் போ.. 40 ஆண்டு கனவை நிஜமாக்கும் இஸ்ரோ! பரிசோதனையில் வெற்றி மேல் வெற்றி
திருநெல்வேலி: மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், மனிதனை ஏந்தி செல்லும் ராக்கெட்டுக்கான என்ஜின் பரிசோதனை வெற்றிகரமாக முடித்திருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இந்தியா சொந்தமாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப வேண்டும் என்று தொடர்ந்து முயன்று வருகிறது. இந்த கனவை சாத்தியப்படுத்த தயாரிக்கப்பட்டதுதான் ககன்யான் திட்டம். எதிர்வரும் காலங்களில் சர்வதேச விண்வெளி நிலையம் கலைந்து போக இருக்கிறது. ரஷ்யாவும், சீனாவும் தங்களுக்கு என தனியான விண்வெளி மையத்தை உருவாக்க இருக்கிறார்கள். விண்வெளி துறையை பொறுத்த அளவில் ரஷ்யா, இந்தியாவுக்கு நெருங்கிய நண்பன் என்பதால் இந்த விண்வெளி நிலையத்தில் இந்திய வீரர்களை தங்க வைக்க இந்தியாவால் கோர முடியும். ஆனால் அதற்கு முதலில் சில அனுபவங்கள் தேவைப்படுகிறது.

அதில் ஒன்றுதான் சொந்தமாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திறன். இந்தியா சார்பில் ராகேஷ் சர்மா கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் விண்வெளியில் பறந்தார். அவரை சோவியத் ரஷ்யா பறக்க வைத்தது. எனவே இந்தியா இந்த முறை எந்த நாடுகளின் உதவியின்றி தங்களது வீரர்களை விண்ணில் பறக்க வைக்க முடிவெடுத்திருக்கிறது இந்தியா. இதற்காக போடப்பட்ட ககன்யான் திட்டம் வரும் 2025ம் ஆண்டு செயல்படுத்தப்படும். இந்நிலையில் இதற்கான சோதனைகள் வெற்றபெற்றிருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
அதாவது, ககன்யான் திட்டத்தில் மனிதர்கள் மட்டுமல்லாது அவர்களுக்கு தேவையான ஏராளமான பொருட்களையும் எடுத்து செல்ல வேண்டிய தேவை இருக்கிறது. எனவே அதற்கேற்றார் போல பொருத்தமான ராக்கெட் தேவை. இதற்காக இஸ்ரோ LVM3 ராக்கெட்டை தேர்ந்தெடுத்திருக்கிறது. இதனால் சுமார் 8 டன் எடைகொண்ட பொருட்களை பூமியிலிருந்து 200 கி.மீ உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும். சந்திரயான் 3 மிஷனில் இந்த ராக்கெட்தான் பயன்படுத்தப்பட்டது.
இந்நிலையில், ககன்யான் திட்டத்திற்காக இந்த ராக்கெட்டில் சில மாறுதல்களை இஸ்ரோ செய்து வருகிறது. அந்த வகையில் இந்த ராக்கெட்டை உந்தி தள்ளும் CE20 கிரையோஜெனிக் என்ஜினை இஸ்ரோ வெற்றிகரமாக பரிசோதித்திருக்கிறது. இந்த பரிசோதனை வெற்றியடைந்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ ப்ராபல்ஷன் வளாகத்தில் உள்ள சோதனை மையத்தில் கடந்த 13ம் தேதி CE20 கிரையோஜெனிக் என்ஜின் சோதனை நடத்தப்பட்டது.
இதில் என்ஜினின் செயல்திறன், அதிகபட்ச தாக்குப்பிடிக்கும் திறன், உந்து சக்தி உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டன. இந்த சோதனை அனைத்தும் வெற்றிகரமாக முடிவுற்றிருக்கிறது. இந்த என்ஜின் குறைந்தபட்சம் 6350 நொடிகள் இயக்கப்பட வேண்டும். ஆனால் சோதனையில், 8810 நொடிகளில் வெவ்வேறு காலநிலைகளில் சிறப்பாக இயங்கியுள்ளது" என்று தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ஆளில்லா ககன்யான் விண்கலம் விண்ணுக்கு செலுத்தப்படுகிறது. அதில் இந்த என்ஜின் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications