அடடே.. முதல்வர் ஸ்டாலின் சொன்னதுதான் 2023ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஜோக்: நயினார் நாகேந்திரன் தடதட!
நெல்லை: காவிரி பிரச்சனையை விட இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்பதே தற்போது மிகவும் முக்கியம் என்ற முதல்வர் ஸ்டாலினின் கருத்து, 2023ஆம் ஆண்டுக்கான மிகப்பெரிய நகைச்சுவை என தமிழ்நாடு பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
நெல்லை மாவட்ட பாஜக அலுவலகத்தில் தமிழ்நாடு பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு குரல் கொடுக்காத தமிழ்நாடு அரசுக்கு பாஜக கடும் கண்டனத்தை பதிவு செய்துகொள்கிறது. 1974ல் நதி ஒப்பந்தத்தை புதுப்பிக்காததால் காவரி பிரச்சனை ஏற்பட்டது.

பாஜக ஆட்சிக்கு பின்னர் காவிரி விவகாரத்தில் நதி நீர் ஆணையம் மூலம் தீர்வு கிடைத்தது. தற்போது கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். அதற்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் கூட தெரிவிக்க மறுக்கிறார். தமிழ்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக பேச தயங்குகிறார் தமிழக முதல்வர்.
அமலாக்கத் துறை சோதனைக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது தன்னிச்சையாக செயல்படும் அமைப்பு. தமிழர்களுக்கு எதிரான விஷயங்களை எதிர்ப்பதை பாஜக விட்டுகொடுக்காது. தமிழக முதல்வர் '2024ல் பாஜக வெற்றியடைந்தால் இந்தியாவே இருக்காது. இந்தியாவை பாதுகாக்கும் நோக்கில் எதிர்க்கட்சி கூட்டத்துக்கு செல்கிறேன்' என சொல்லியுள்ளார்.
காவிரி பிரச்சனையை விட இந்தியாவை காப்பதே முக்கியம் என முதல்வர் கூறியுள்ளது 2023ஆம் ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை. உலகிலேயே 3வது மிகப்பெரிய தலைவராக பிரதமர் மோடி இருக்கிறார். 2024 தேர்தலில் இந்தியாவின் பிரதமராக மோடி மீண்டும் வருவார். பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்.
மத்திய அரசின் ஜல்சக்தி துறை மேகாதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு புதுச்சேரி மாநில அரசுகளிடம் கலந்தாலோசிக்காமல் எந்த முடிவும் எடுக்கப்படாது என சொல்லியுள்ளது. மத்திய அரசு தமிழர் நலனில் அக்கறை கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் 10 தொகுதிகளை கண்டறிந்து தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எந்தெந்த தொகுதிகளில் பாஜக போட்டியிடும் என ஆட்சி மன்றக் குழு கூடி முடிவு செய்யும்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications