கவின் வழக்கில் மேல்முறையீடு.. நேரில் உறுதியளித்த வன்னியரசு! போராட்டத்தைக் கைவிட்ட பெற்றோர்!
நெல்லை: கவின் ஆணவப்படுகொலை வழக்கிலிருந்து சுர்ஜித்தின் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளர்கள் விடுவிக்கப்பட்ட தீர்ப்பைக் கண்டித்து, கவினின் சொந்த ஊரான ஆறுமுகமங்கலத்தில் அவரது பெற்றோர் மூன்றாம் நாளாக தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை நேரில் சந்தித்து சமூகநீதித் துறை அமைச்சர் வன்னியரசு, மேல்முறையீடு புதன்கிழமை செய்யப்படுகிறது என உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிடுவதாக கவினின் பெற்றொர் அறிவித்துள்ளனர்.
நெல்லையில் கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஐ.டி ஊழியர் கவின் ஆணவப்படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சுர்ஜித்தின் பெற்றோரும் காவல் உதவி ஆய்வாளர்களுமான சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை அண்மையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பைக் கண்டித்தும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கவினின் பெற்றோர்களான சந்திரசேகர் மற்றும் தமிழ்ச்செல்வி ஆகிய இருவரும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆறுமுகமங்கலத்தில் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.
இன்று மூன்றாம் நாளாக அவர்களது வீட்டின் முன்பு கையில் கவினின் புகைப்படத்துடன் அமர்ந்தபடி தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும். உடனடியாக அரசானை வெளியிட வேண்டும் பெயரளவிற்கு மேல்முறையீடு செய்யாமல் மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக அவர்களது உறவினர்களும், ஊர்மக்களும் சமூக ஆர்வலர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கவின் தாய் தமிழ் செல்வி பேசுகையில்," எங்களுக்கு நிதி வேண்டாம்.
மகனை இழந்து தவிக்கும் எங்களுக்கு நீதி தான் வேண்டும். அரசு மேல்முறையீடு செய்து உண்மையான நீதி வேண்டும். சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் மேல் முறையீடு செய்வதாக உறுதியளித்தார். அதன்படி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்து எங்களுக்கு நீதியை வாங்கி தர வேண்டும். என்றார்.
அப்போது, கவின் பெற்றோர்களிடம் சமூகநீதித் துறை அமைச்சர் வன்னியரசு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
பின்னர், சமூகநீதித் துறை அமைச்சர் வன்னியரசு பேசுகையில், கடந்த 1ம் தேதி முதல் போராட்டத்தில் கவின் பெற்றோர் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சராக மட்டும் வரவில்லை உறவாக வந்துள்ளேன். கவின் படுகொலை செய்யப்பட்ட அன்றே குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைத்து போராடினோம். கவின் தாய் நீதி வேண்டும் என தெரிவித்துள்ளார். தீர்ப்புக்கு எதிரான மனநிலையில் தான் நாங்களும் இருக்கிறோம்.
ஆவண படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்றப்படும் என சட்டமன்றத்தில் தெரிவித்தேன். ஆவண படுகொலைக்கு எதிரான தடுப்புச் சட்டம் இயற்றப்பட காலதாமதம் ஆகாது. இன்னைக்கு வந்து கடந்த காலத்தில் போடப்பட்ட குற்றப்பத்திரிக்காயின் அடிப்படையில் இது இருவரும் விடுவிக்கப்பட்டுஉள்ளனர். இந்த வழக்கிலிருந்து எந்த குற்றவாளிகளும் தப்பிக்க முடியாது என்ற அடிப்படையில் புதன்கிழமை மேல்முறையீடு செய்வதாக சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மூத்த வழக்கறிஞர் பா.பா.மோகன் வழக்கறிஞராக நியமிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். ஜாதியை பாகுபாடுகள் நடைபெறும் நிகழ்வுகளை தமிழக முதல்வர் கூடுதலாக கண்காணிக்க உத்தரவுள்ளார். அதனால் அத்தகைய குற்றவாளிகள் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது. என பேசினார்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் வன்னியரசு வேண்டுகோளை ஏற்று காத்திருப்பு போராட்டத்தை கைவிடுவதாக கவின் தாய் தமிழ்ச்செல்வி தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வன்னி அரசு பேசுகையில், "நான் இங்கு வெறும் அமைச்சராக மட்டும் வரவில்லை. ஒரு உறவாகத்தான் வந்திருக்கிறேன். அமைச்சராக இருப்பது இரண்டாவது விஷயம். கவினின் தாய், தந்தையுடன் ஒரு உறவாக நின்று அவர்களின் கண்ணீரை எங்களுடைய கண்ணீராக பார்க்க வந்திருக்கிறேன். இந்த வழக்கில் மற்ற வழக்குகளைப் போல இல்லாமல் அரசு கூடுதல் கவனம் செலுத்துகிறது. கவின் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
குற்றப்பத்திரிகையில் சிலர் விடுவிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் தெளிவாக தெரிவித்துள்ளார். அரசு தரப்பு வழக்கறிஞரும் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். எனவே, இந்த போராட்டத்தை சட்டப் போராட்டமாக தொடர்ந்து நடத்துவோம். தீர்ப்பு கிடைப்பது மட்டும் போதாது; கவின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். பாதிக்கப்பட்டவர்களின் பக்கமே அரசு நிற்கும்" என்று தெரிவித்தார்.
மேலும், கவின் வழக்கில் மூத்த வழக்கறிஞர் பாப்பா மோகனன் அவர்களை அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்தார். இதுதொடர்பாக சட்டத்துறை அமைச்சரும் ஏற்கனவே உறுதியளித்துள்ளதாகவும், அந்த நடவடிக்கை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
குற்றப்பத்திரிகையில் என்னென்ன சேர்க்கப்பட்டுள்ளது, எவை விடுபட்டுள்ளன, நீதிமன்றத்தில் என்னென்ன ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது தொடர்பாகவும் முழுமையாக ஆய்வு செய்து, எந்தவித குறையும் இல்லாமல் மேல்முறையீடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications
