மிஸ்டேக்கான தமிழக பாஜக வேட்பாளர் லிஸ்ட்! தூத்துக்குடி இல்லை.. நெல்லையில் நயினார் நாகேந்திரன் போட்டி
நெல்லை: நெல்லை லோக்சபா தொகுதியில் பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். நெல்லை பாஜக எம்எல்ஏவாக அவர் உள்ள நிலையில் வரும் லோக்சபா தேர்தலில் களமிறங்க உள்ளார். முதலில் தூத்துக்குடியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவார் என பாஜக வேட்பாளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் கடைசியில் மாற்றம் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் தமிழகத்தில் பாஜக தனியே கூட்டணி அமைத்து லோக்சபா தேர்தலை சந்திக்க உள்ளது. மொத்தம் 39 தொகுதிகள் உள்ள நிலையில் பாஜக தனது கூட்டணி கட்சிகளுக்கு 19 இடங்களை விட்டு கொடுத்துள்ள நிலையில் மீதமுள்ள 20 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது.

மேலும் பாஜகவின் கூட்டணியில் போட்டியிடும் 4 வேட்பாளர்கள் தாமரை சின்னத்தில் களமிறங்க உள்ளனர். இதன்மூலம் தமிழ்நாட்டில் மொத்தம் 24 லோக்சபா தொகுதிகளில் தாமரை சின்னத்தில் வேட்பாளர்கள் களமிறங்க உள்ளனர். இந்நிலையில் தான் பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது.
இந்த பட்டியலில் மொத்தம் 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி கோவை தொகுதியில் அண்ணாமலை, நீலகிரியில் மத்திய இணையமைச்சர் எல் முருகன், தென்சென்னையில் தமிழிசை சவுந்தராஜன், கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன், மத்திய சென்னையில் வினோஜ் பி செல்வம், கிருஷ்ணகிரியில் நரசிம்மன், ஆகியோர் போட்டியிட உள்ளனர். மேலும் பெரம்பலூர் தொகுதியில் பாஜகவின் கூட்டணி கட்சியான ஐஜேகே தலைவர் பாரிவேந்தரும், வேலூரில் புதிய நீதிக்கட்சியின் தலைவருமான ஏசி சண்முகம் போட்டியிட உள்ளனர்.
இந்த பட்டியலில் முதலில் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடியில் பாஜக வேட்பாளராக போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. தூத்துக்குடி தொகுதியில் திமுகவின் சிட்டிங் எம்பியான கனிமொழியை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே நயினார் நாகேந்திரன் நெல்லையில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் முதலில் வெளியான பட்டியலில் அவர் தூத்துக்குடியில் போட்டியிடுவதாக தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் தமிழ்நாட்டின் முதற்கட்ட பாஜக வேட்பாளர் பட்டியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.















Click it and Unblock the Notifications