மாஞ்சோலை விவகாரத்தில் ட்விஸ்ட்! எங்களை ஏமாத்திட்டாங்க.. கதறும் தொழிலாளர்கள்.. என்ன நடந்தது?
நெல்லை: குத்தகை காலம் முடியும் முன்பே விருப்ப பணி ஓய்வில் செல்வதாக மாஞ்சோலை தனியா தோட்ட நிர்வாகங்கள் நிர்பந்தித்து கையெழுத்து பெற்றதாகவும், தங்களுக்கு மாஞ்சோலையை விட்டு செல்ல ஒப்புதல் தெரிவிக்கவில்லை என்றும் மாஞ்சோலையை விட்டு செல்ல எங்களுக்கு விருப்பமில்லை என்றும் தொழிலாளர்கள் புகார் தெரிவித்தனர். மேலும் மாஞ்சோலை எஸ்டேட்டை தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் நடத்த வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை அமைந்துள்ளது. மும்பையை சேர்ந்த தி பாம்பே டிரேடிங் கார்பரேஷன் என்ற தனியார் நிறுவனம் நடத்தி வருகிறது. இந்த மாஞ்சோலை தோட்டத்திற்கான 99 ஆண்டுகள் தனியார் நிறுவனத்தின் குத்தகை வருகிற 2028-ம் ஆண்டுடன் முடிகிறது.

காபி, தேயிலை, மிளகு, ஏலக்காய் போன்ற பணப் பயிர்கள் பயிரிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதில், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்திலிருந்து வந்தவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். குத்தகை காலத்தை தனியார் நிறுவனம் முடித்து கொள்வதால், தற்போது மாஞ்சோலை தேயிலை தோட்டம், அதை சார்ந்த மலை காடுகளை தமிழக அரசின் வனத்துறை கையகப்படுத்த அரசாணை பிறப்பித்து அதற்கான செயல்முறைகள் நடைபெற்று வருகிறது.
எனினும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை முடிவு செய்த பிறகுதான் அவர்களை மாஞ்சோலை பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
இந்த நிலையில், இன்று மாஞ்சோலை தொழிலாளர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதில், குத்தகை காலம் முடியும் முன்பே விருப்ப பணி ஓய்வில் செல்வதாக மாஞ்சோலை தனியார் தோட்ட நிர்வாகங்கள் நிர்பந்தித்து கையெழுத்து பெற்றதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். மாஞ்சோலை எஸ்டேட்டை தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் நடத்த வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்பாக தொழிலாளர்கள் கூறுகையில், "யாருமே விருப்பப்படி கொடுக்கவில்லை. நிறுவனமானது சொல்லமுடியாத சூழ்நிலையில் இருக்கிறது. எனவே நாளைக்கு நிறுவனம் எப்படி நடக்கும் என்பதை இப்போது சொல்ல முடியாது. நிறுவனம் இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம். நாளைக்கு உங்களுக்கு கிடைக்கும் ரூபாயும் கிடைக்கும் அல்லது கிடைக்காமல் போகலாம்.

அப்போது நிறுவனத்தின் சூழ்நிலை எப்படி இருக்கிறதோ அதை பொருத்து தான் என்று சொன்னாங்க. மேலும் இதனால் தான் இப்போது விஆர்எஸ் திட்டத்தை கொண்டு வர்ரோம். என்று எங்களிடம் சொன்னாங்க.. அப்போது ஒரு தரப்பினர் வேண்டும் என்றும், ஒரு தரப்பினர் வேண்டாம் என்றும் கூறினர். இதில் வயதானவர்கள் நம்மளுக்கு 3 லட்சம் கிடைக்கும் என்று ஒத்துக்கொண்டனர். ஆனால் மற்றொரு தரப்பினருக்கு இதில் விருப்பமில்லை.
எனினும் நிறுவனம் கொடுத்து தான் ஆக வேண்டும் என்று சொன்னது. கையெழுத்து போட்டால் தான் இந்த பணமாவது கிடைக்கும். இல்லையென்றால், நிறுவனம் நாளைக்கு எப்படி இருக்கிறது என்று தெரியாது என்று சொன்னதால் வேறு வழியின்றி கையெழுத்து போட்டு கொடுத்தோம். விருப்ப மனு என்று எங்களிடம் அவர்கள் கொடுக்கவில்லை. ஏமாற்றி தான் கையெழுத்து வாங்கினார்கள். மாஞ்சோலை எஸ்டேட்டை தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் அதிகாரிகளிடம் கூறினார்.












Click it and Unblock the Notifications